YNOT STUDIOS சார்பில், சக்கரவர்த்தி ராமச்சந்திராவோடு சேர்ந்து தயாரித்து இருப்பதோடு, எழுதி, சஷிகாந்த் இயக்க, மாதவன் நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடித்து பிரத்யேகமாக NETFLIX இல் காணக் கிடைக்கும் ஓ டி டி படம் .
பிரபலமாக இருந்து இப்போது தகைமை இழந்து தன்னை மீண்டும் நிரூபிக்கப் போராடும் கிரிக்கெட் விளையாட்டுக்காரன் ஒருவன் ( சித்தார்த்) . அவன் மனைவி ( மீரா ஜாஸ்மின்) பள்ளிச் சிறுவனான ஒரு மகன் .
வெற்றிக்கான அணியில் தான் இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டோம் என்று ஊர் உலகம் மட்டுமல்ல; மகனே நினைப்பது கிரிக்கெட் ஆட்டக்காரனுக்கு பெரிய வருத்தம் .
மகனின் பள்ளி ஆசிரியை ஒருத்தி ( நயன்தாரா) மேற்படி கிரிக்கெட் ஆட்டக்காரனின் சிறுவயது தோழி. அவளது கணவன் (மாதவன்) மாற்று எரிபொருள் கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு அரசின் ஆதரவை எதிர்பார்ப்பவன் . அதே நேரம் மனைவியின் வேண்டுகோளுக்காக கேண்டீன் வைப்பதற்கு என்று அரைக் கோடி கந்துவட்டி சேட்டிடம் கடன் வாங்கி ஆராய்ச்சியில் செலவழித்து வட்டி கட்ட முடியாமல் பணம் வசூலிக்கும் நபரின் அவமானங்களுக்கு ஆளாகிக் கிடப்பவன் .
தவிர ஆராய்ச்சிக்கு அரசு உதவி கிடைப்பதிலும் பல தடங்கல்கள். இருவருக்கும குழந்தை இல்லாத நிலையில் அதற்கான சிகிச்சை நேரம் ஒதுக்குதல் பணத்தேவை என்று அதிலும் இடர்ப்பாடுகள் .
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் வர, இந்த ஆட்டத்தில் தன் திறமையை நிரூபிக்காவிட்டால் இனி அணியில் இடம் பெற முடியாது என்ற நிலையில் கிரிக்கெட் ஆட்டக்காரன் இருக்கிறான்.
விஞ்ஞானி கடன் வாங்கிய அதே கடன் கொடுத்த நபர், கிரிக்கெட் சூதாட்டத்தில் மேற்படி கிரிக்கெட் ஆட்டக்காரனை தோற்கடித்து கோடிகளை அள்ள நினைக்க , கிரிக்கெட் ஆட்டக்காரன் பிடி கொடுக்காமல் இருக்க,
அந்த நேரம் பார்த்து பள்ளி ஆசிரியை , கிரிக்கெட் ஆட்டக்காரன் மகனோடு வீட்டுக்கு வர, விஞ்ஞானி விஷ ஞானி ஆகிறான் .
அந்த சிறுவனைக் கடத்தி கிரிக்கெட் ஆட்டக்காரனை பணிய வைத்து அதன் மூலம் கடன் கொடுத்தவனிடம் ‘ வியாபாரம் ‘ பேசி தனது கடனுக்கு நேர் செய்வதோடு பணமும் பெற்று , அரசாங்கத்தில் தனக்கு இருக்கும் தடைகளையும் சரி செய்து கொள்ள எண்ணி விஞ்ஞானி களம் இறங்க, ஒரு நிலையில் டீச்சரும் அதற்கு சம்மதிக்க ,
நடந்தது என்ன? சிறுவன் என்ன ஆனான் ? கிரிக்கெட் ஆட்டக்காரனின் நிலைமை என்ன ஆனது என்பதே இந்தப் படம்.
மேக்கிங்கில் குறை சொல்ல முடியாதபடி செய்து இருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த் . சித்தார்த் , மீரா ஜாஸ்மின், மாதவன் , நயன்தாரா என்று பெரிய நடிகர்கள் இருப்பதை மட்டுமே பலமாக எண்ணி இருக்கிறார்கள் .
கேரக்டர் அசாசினேஷன் என்றாலும் மாதவனின் வில்லன் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அது மட்டுமே
சித்தார்த் கேரக்டரின் மூட் அறிந்து நடித்துள்ளார் . . நிரூபிப்பதற்கான முனைப்பைக் காட்டாமல் அந்தக் கேரக்டர் காட்டும் பந்தா கடுப்படிகிறது. நயன்தாராவால் எந்தப் பலனும் இல்லை. எந்ந்ந்ந்த்தப் பலனும் ! மீரா ஜாஸ்மின் கூட படம் முழுக்க தூக்கக் கலக்கத்தில் நடித்த மாதிரியே இருக்கிறார் .
குறிப்பாக இவர்களால் எந்த மேஜிக்கும் நிகழவில்லை என்பதுதான் வருத்தம் .
அதுவும் டீச்சரும் கணவனின் அயோக்கியத்தனத்துக்கு துணை போவது அநியாயம் .
எல்லோருமே அயோக்கியர்கள் என்பதை சகஜப்படுத்த நினைப்பதுதான் இந்தத் திரைக்கதையின் ஆகப் பெரும் குறை. எனவே ரசிகனுக்கு யாரை முதன்மைக் கதாபாத்திரமாக எண்ணி இந்தக் கதையைப் பின் தொடர்வது என்ற பிடி கடைசி வரை கிடைக்காமலே போகிறது . அல்லது இதுதான் கதை என்றால் மேலே சொன்ன ஒவ்வொரு டிராக்கையும் ஆரம்பித்து முடித்த விதமும் சரி இல்லை
கிரிக்கெட் ஆட்டக்காரனின் தகுதி குறித்த கதை , அவனது குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் குறித்த கதை, விஞ்ஞானியின் ஆராய்ச்சி குறித்த பிரச்னைகள், குடும்ப வாழ்வின் மனமாச்சர்யங்கள்… எதைப் பிரதானப்படுத்துவது, அந்த முக்கியத்துவ வரிசை என்ன என்பதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள்.
அதீத நத்தை நகர்வு, யதார்த்தம் என்ற பெயரில் ஆடியன்சுக்கு புரிகிறதா இல்லையா என்ற கவலையே இல்லாத வசன உச்சரிப்புகள் மற்றும் ஒலி அளவு… ( தியேட்டரில் பார்க்கும்போதே இப்படி இருந்தால் ஓ டி டி யில் பார்ப்பவர்களின் நிலைமை ?) என்று இன்னும் சில இடிகள் வேறு .
கிரிக்கெட் தொடர்பான காட்சிகளும் எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை
விராஜின் ஒளிப்பதிவும் சக்தி ஸ்ரீயின் இசையும் பாம்பும் இல்லை கயிறும் இல்லை.
ஆகா ஓகோ இல்லை என்றாலும கதை கூட ஓகேதான் . ஆனால் மிகப் பலவீனமான திரைக்கதைதான் எமன்.
என்னதான் பாதாம்களும் பிஸ்தாக்களும் முந்திரி பருப்புகளும் வெள்ளரி விதைகளும் நடித்தாலும் சரியான திரைக்கதை உரையாடல் இல்லை என்றால் தியேட்டரிக்கல் படத்தை மட்டுமல்ல ஒரு ஓ டி டி படத்தைக் கூட காப்பாற்ற முடியாது என்பதற்கு லேப் டெஸ்ட் ரிசல்ட் ஆக வந்திருக்கிறது இந்த TEST.