எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் (enemy of the smuggler ) @ விமர்சனம்

எஸ் ஆர் ட்ரீம்ஸ் சார்பில் டி..சமய முரளி தயாரித்து , பின்னணி இசை அமைத்து இயக்கி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, சரண் சக்தி , ஜே டி சக்கரவர்த்தி , லால், ஸ்மேஹா மணிமேகலை, காளி வெங்கட், பாலா சரவணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 

மேற்படி சமய முரளி , சுங்கத் துறையில்   ஐ ஆர் எஸ் (indian revenue service ) அசிஸ்டன்ட் கமிஷ்னராகப் பணியாற்றுபவர் . எனில் இவை கதை எதைப் பற்றி இருக்கும் என்பது புரிகிறது அல்லவா?
 
வீட்டின் மீது இருக்கும் கடனை அடைக்க முடியாமல் , விதவை அம்மாவோடு (ராதிகா சரத்குமார்)  போராடும் அமரும் ( சரண் சக்தி ) அமர் போலவே  பணப் பிரச்னையில் உள்ள நண்பன் ஒருவனும் (பால சரவணன்)  , சுங்கவரித்துறையில்  முகவராக இருக்கும் நபர் ( காளி வெங்கட்) மூலம் அங்கே ஏதாவது வேலைக்கு முயல்கிறார்கள். 
 
அங்கே நடக்கும் தகிடு தத்தங்கள் அவர்களுக்குள்ளும் பண ஆசையை தூண்டுகின்றன. 
 
அமருக்கும் ஒரு பெண்ணுக்கும் ( ஸ்மேஹா மணிமேகலை) காதல் . அவள் மேற்படி  சுங்கவரித்துறை   முகவரின் தங்கைதான். பெற்றோர் இல்லாத நிலையில் தங்கைக்காக திருமணமே செய்யாமல் வாழ்கிற அண்ணன் அவன். 
 
கடத்தல் விஷயத்தில் மற்ற ஆட்களை எல்லாம் வீழ்த்தி வளர்ந்து நிற்கிறான் லிங்கம் (ஜே டி சக்கரவர்த்தி)
 
லிங்கத்திடம்  வேலைக்கு சேர்க்கிறார்கள் அமரும் அவன் நண்பனும் .கடத்தலில் காசு வருகிறது. கடன் அடைகிறது. 
 
தங்கை அமரை காதலிப்பது அறிந்த  சுங்கவரித்துறை   முகவர் , அமர் நல்லவன் இல்லை என்று தங்கையிடம் சொல்கிறான். ஆனால் அமர் அவளிடம் நான் நல்லவன்தான்  என்று சொல்ல, அதை நம்பி, வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்கிறாள் தங்கை. 
 
ஏனோ தெரியவில்லை, அமரின் அம்மாவுக்கும் கூட தெரியாமல் இந்தக் கல்யாணம் நடக்கிறது. மனைவியான காதலி  கர்ப்பமும் ஆகிறாள்.
 
உலக அளவிலான போதை பொருள் சிண்டிகேட்டின் முக்கிய நபரான துபாய் வாழ்  மேத்யூ பாய் என்பவன்  அனுப்பி வைக்கும் இருபத்தி ஐந்தாயிரம் கோடி  ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே எடுக்கும் வேலை லிங்கத்துக்கு வருகிறது. 
 
லிங்கம் அந்த வேலையை அமருக்கு கொடுக்கிறான்..
 
கஸ்டம்ஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் முரளி  (வேறு யார், தயாரிப்பாளரும், இயக்குனரும் நிஜமான கஸ்டம்ஸ் அதிகாரியுமான சமயமுரளிதான்)  விசாரணையில்  களம் இறங்குகிறார்.
 
அமரும்  அவனது நண்பனும் லிங்கத்தை ஏமாற்றி மொத்த பணத்தையும் சுருட்ட முயன்று,  சரக்கை வேறு இடத்துக்கு  கடத்தி விட்ட செய்தி வந்ததும் அவர்களை  கொல்ல கொலை வெறியோடு கிளம்புகிறான் லிங்கம் 
 
லிங்கம் தன்னை ஏமாற்றி விட்டதாக கருதும் மேத்யூ பாய் , லிங்கத்தைக்  கொல்ல இந்தியா வருகிறான். 
 
அமரை மோப்பம் பிடித்து முரளி வந்துவிட,  வீட்டை விட்டு அமர்  ஓடிவிட, அவன் மனைவியை விசாரணைக்கு என்று  ஸ்டேஷன் கொண்டு வருகிறார் முரளி . விஷயம் தெரிந்து அவளது அண்ணன் துடிக்கிறான் . 
 
அமர் வரா விட்டால் அவனது மனைவியை ஜெயிலுக்கு அனுப்பப் போகிறேன் என்று சுங்க அதிகாரி முடிவு செய்ய, தகவல் அமருக்குப் போக, அவன் வந்தானா? லிங்கத்தால் அவனுக்கும் மேத்யூவால் லிங்கத்துக்கும்  என்ன நடந்தது? இருபத்தி ஐந்தாயிரம் கோடி  ரூபாய் மதிப்புள்ள  சரக்கு எங்கே போனது? கடத்தல்காரனை நம்பிக் காதலித்து வாழ  வந்த பெண்ணின் நிலைமை என்ன ஆனது என்பதே படம்.
 
டைட்டிலில் காளி வெங்கட் பெயரை காலி வெங்கட் என்று போடுகிறார்கள்.
 
உலக அளவில் கடல் மூலம் கடத்தப்படும் பொருட்கள், உயிர்கள் என்னென்ன? அவற்றை எப்படி இல்லீகலாக வெளியே கொண்டு வருகிறார்கள்? அதிகாரிகள் எதற்கு மயங்குகிறார்கள்? எப்படி வளைக்கப்படுகிறார்கள்?  கோடி கோடி பணம்  கை மாறுவது எப்படி? கன்டெய்னர்களின்  சீல் உடைத்து  பொருட்களை மாற்றி விட்டு சீல் உடைக்காத மாதிரியே எப்படி   நம்ப  வைக்கிறார்கள்.  எந்த நேரத்தில் கன்டெய்னரை வெளியே எடுத்தால் அதிக செக்கிங் இல்லாமல் தப்பலாம்? அதில் சம்பாதிப்பவர்களின் மது,  மாது சுகபோக வாழ்க்கை  என்று 
 
பொதுவில் பலரும் அறியாத பல விஷயங்களை சொல்கிறது படம். சபாஷ் .
 
ஆனால் அவை எல்லாம் டேட்டாக்களை போல வருகிறதே தவிர, அதை வைத்து கிரியேட்டிவ் ஆக, பெரிதாக எதுவும் இல்லை. 
 
ஏரியல் ஷாட்களில் கவனம் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் கவின் பாஸ்கர். சாம் டேனியலின் இசை ஜஸ்ட் ஓகே. படத்தொகுப்பாளர் ஸ்ரீ வத்சனின் படத் தொகுப்பு ஓவர் வேகம்.. ஆடியன்ஸ்க்கு புரிந்ததால்தானே படம் வேகும்?
 
ஆனால் தவசிராஜின் சண்டைக்காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. 
 
சரண் சக்தி உற்சாகமாக நடிக்கிறார். 
 
அப்பாவி நல்ல பெண் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்துகிறார் ஸ்மேஹா மணிமேகலை. அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார். 
 
லிங்கமாக மிரட்டி இருக்கிறார் ஜே டி சக்கரவர்த்தி. சிறப்பான முழு பாவனைகள்  கொண்ட  தெறிப்பான நடிப்பு 
 
வழக்கம் போல லால் பேசுவது யாருக்கும் புரியவில்லை ஆனாலும் அவருக்கு தமிழ் சினிமா படியளந்து கொண்டே இருக்கிறது.
 
அம்மா மகன் பாசம், தவறானவனை நம்பிய பெண், அதனால் வெம்பிய அவளது அண்ணன்,  மாமியார் மருமகள் சண்டை-  அப்புறம் புரிதல் என்று செண்டிமெண்ட் ஏரியா கொஞ்சம் இருக்கிறது. 
 
ஆனால் அவை எல்லாமே அடிப்படைக் கதையில் இருந்து விலகி ரொம்ப நேரம் நேரம் நகர்வதால் பலமிழக்கின்றன.  
 
இன்னும் நல்ல  திரைக்கதை, வசனம் , இயக்கம் இவை எல்லாம் தேவைப்படும்  படம் 
 
மொத்தத்தில் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்…நோஞ்சான்  
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *