ஒன்றாக என்டர்டைன்மென்ட் , எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் , வேல்ஸ் பிலிம் இன்டநேஷனல் தயாரிப்பில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், சுனைனா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம் .
நல்ல தமிழ்ப் பெயர் வைப்பதே குறைந்து கொண்டிருக்கும் சூழலில் நல்ல தமிழ்ப் பெயரை தொடர்ந்து வைப்பதோடு என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்று சாதரணமாக வைத்து விடாமல் எனை நோக்கிப் பாயும் தோட்டா என்று இலக்கியச் செழுமையோடு பெயர் வைத்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் தமிழ்க் காதலுக்கு மனமார்ந்த பாராட்டு .
சின்ன வயசில் காணாமல் போன அண்ணன் (சசி குமார் ) , ஒரு நடிகையோடு (மேகா ஆகாஷ்) காதல் , ஒரு நிலையில் காதல் பிரிவு , அப்புறம் பார்த்தால் அண்ணனைக் காப்பாற்ற அழைக்கும் காதலி என்ற சூழலுக்கு ஆளாகும் ஒரு நூறு சதவீத காதலனை ( தனுஷ்) நோக்கிப் பாயும் தோட்டாக்களின் பயணமே படம் .
சட்டென்று ஓர் உதறு உதறிவிட்டுப் பார்த்தால் சாதாரண கதைதான் . ஆனால் அதை அசாதாரண கணங்களில் நிறுத்தி (திரைக்) கதை சொல்லும் தனது செழுமையான உத்தி காரணமாக மயக்கும் படி சொல்லி இருக்கிறார் கவுதம் மேனன் .
காக்க காக்க படத்தின் தான் ஆரம்பித்த கரகர பின்னணி குரலில் கதை சொல்லும் உத்தி இந்தப் படத்தில் படம் முழுக்க !
இளமை கொழிக்கும் முதல் பகுதி .
இரண்டாம் பகுதி எக்ஸ்ட்ரா நீளம் . சினிமாவைத் தவிர பொழுது போக்கே இலாத காலத்துக்குப் போன்ற கால நீட்டிப்பு . படத்தின் சிக்கல் அதுதான் .
தனுஷ் வழக்கம் போல மிக சிறப்பாக நடிக்கிறார் . மேகா ஆகாஷ்தான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறார் . அட! அட !!
ஜோமோன் ஜான் , மனோஜ் பரமஹம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு , தர்புக சிவாவின் பின்னணி இசை இரண்டும் கவ்தமின் அட்டகாசமான மேக்கிங்கை இன்னும் ஒரு பிடி தூக்கிப் பிடிக்கிறது .
பாயும் தோட்டா பாதை மாறுவது முதல் முறை அட ! கடைசியில் அடேய் !
எனை நோக்கிப் பாயும் தோட்டா …… சினிமா மொழியில் ஹை ஸ்பீட் , சாதாரண பார்வைக்கு ஸ்லோ மோஷன்


