சமுத்திரக்கனி மற்றும் பிரபு திலக் தயாரிப்பில் , சமுத்திரக் கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, யுவன் நடிப்பில் அன்பழகன் இயக்கி இருக்கும் படம் அடுத்த சாட்டை .
இதே அன்பழகன், சமுத்திரக்கனி , தம்பி ராமையா, யுவன் இடம்பெற்ற சாட்டை படம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் குறைபாடுகளை சொன்னது என்றால் இந்த அடுத்த சாட்டை அதே பாணியில் கலைக் கல்லூரிகளின் களேபரங்களை தோல் உரிக்கிறது .
அதே பாணியிலான கதாபாத்திரங்களில் கனி, ராமையா மற்றும் யுவன் .
கல்வி, கற்றல் முறை, வேலை வாய்ப்பு திட்டங்கள், கூட்டுக் குடும்பம் இப்படி நிறைய நல்ல விசயங்களை பேசுது படம் , கொஞ்சம் தூக்கலான பிரச்சார நெடியுடன் . ! ஆனால் நல்ல விசயங்களைதானே சொல்கிறார்கள்? தப்பில்லை.
பிரச்னை அது இல்ல . சாட்டையில் இருந்த கோர்வை இதில் மிஸ்ஸிங்.
ராட்சசி படத்தில் ஒரே காட்சியில் அழுத்தமாக பதிக்கப்பட்ட சாதி கயிறு சமாச்சாரத்துக்கு இந்தப் படத்தில் நிறைய இடம் . எனினும் அவசியம்.
கலைக் கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ திட்டம் அருமையான யோசனை. சினிமா கற்றுத் தருகிறது . கல்வி நிலையங்கள் யோசிக்க வேண்டும் .
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்பழகன் மற்றும் சமுத்திரக் கனி .
இறுதிக் காட்சிகள் அர்த்தமுள்ள உருக்கம் . சபாஷ் !
தற்கொலைக்கு எதிரான மனப் பாங்கை ஏற்படுத்துபவராக ஒற்றைக் காட்சியில் சசிகுமார் . ஆனால் ட்ரிம்மிங்கில் அந்த காட்சியின் குடலை உருவி இருக்கிறார்கள் .
தமிழ் உணர்வு கொண்டதாக அடையாளம் காட்டிக் கொள்ளும் படத்தில் ஒரு காட்சியில் நீண்ட ஆங்கிலத்தில் தமிழை தாழ்த்தியும் ஆங்கிலத்தை உயர்த்தியும் பேசுகிறார் தம்பி ராமையா . பதிலுக்கு அறிவுப் பூர்வமாக பதில் சொல்லி அவர் மூக்கை உடைக்காமல் முஷ்டியை உயர்த்துகிறார் சமுத்திரக்கனி . அரை வேக்காட்டுத்தனம் .
இது கூட மன்னிக்கலாம் … மன்னிக்க முடியாத விசயம் ஒன்று உண்டு .
படத்தில் வரும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரம் ஒன்றுக்கு ஆதரவாக ஒரு காட்சியில் பேசும் சமுத்திரக்கனி , ” என்ன இருந்தாலும் அவங்களோட தாய் நிலம் இதுதானே ( தமிழ் நாடு) ” என்கிறார் .
அட அப்ரசண்டிகளா !
ஈழத் தமிழரின் தாய் நிலம் ஆதி நிலம் ஆதிக்கு ஆதி நிலம் எல்லாம் ஈழம்தான் . அன்றைய ஒட்டு மொத்த தமிழ் நிலமான குமரிக் கண்டத்தின் பகுதிகளே , இலங்கை , இந்தியா , ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா எல்லாம் .
இலங்கை முழுக்க தமிழரின் நிலமாக இருந்த போது, தெற்கு வங்காளம் மற்றும் ஒரிசாவில் இருந்து இலங்கைக்கு வந்தேறியாக போனவர்களுக்கும் அங்கே இருந்த இயக்கர்கள் என்ற ஒரு சிறு பழங்குடி இனததவரும் சேர்ந்து பின்னாளில் உருவான இனமே சிங்கள இனம் .
இந்த உண்மை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் தெரியாமல் மீடியாக்களும் அதை மக்களுக்கு சொல்லாமல் போன காரணத்தால்தான் , இலங்கையில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டபோது , “இங்க இருந்து போனவன் தனி நாடு கேட்டா உதைக்கத்தான் செய்வான் ” என்று தமிழின விரோத சக்திகள் பேசியபோது அதற்கு தலையாட்டிய அறிவற்ற கூட்டமாக, தமிழன் இருந்தான் . தன் இனம் அழிவதை வேடிக்கை பார்த்த வெறும் பயலாக வெட்டிக் கூட்டமாக தமிழன் இருந்தான்
இன்னும் திருந்த மாட்டோம் என்றால் எப்படி ? .