தான் நடித்த படங்களில் எல்லாம் தன்னளவில் சிறந்த பங்களிப்பைக் கொடுத்த நடிகர் உதயா, இயக்குனர் ஆகி உருவாக்கிய செக்யூரிட்டி என்ற குறும்படம் பலரின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு இலக்கான நிலையில் ,
இரண்டாவதாக பூர்ணிமா பாக்யராஜ், விஜித், லாவண்யா, பிளாக் பாண்டி, மாஸ்டர் சாய் யோகன் , மாஸ்டர் மித்திரன், பேபி த்ரி நாராயணி சரத், பேபி ரோகினி ஸ்ரீ நடிப்பில் இயக்கி இருக்கும் புதிய குறும்படம் ஃ பேமிலி.
வேறு வேறு வீட்டில்- குடும்பத்தில் பிறந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காதலித்தோ , நிச்சயிக்கப்பட்ட வகையிலோ திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள் . பிடிக்கவில்லையா ? சின்னச் சின்ன விசயங்களுக்க்காகக் கூட பிரிந்து போக எண்ணி விவாகரத்து செய்து கொள்வது எளிதாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் பிள்ளையாக பிறந்து வளர்ந்து , இன்னும் பெற்றோரின் அரவணைப்பும் பராமரிப்பும் தேவைப்படும் நிலையில் உள்ள பிள்ளைகள்? அண்ணன் தங்கைகள் ?
பிடிக்கவில்லை என்று பிரிந்து போக முடியுமா?
போகிறார்களா?
அதுவும் மழலை வயதில் போக நினைப்பார்களா?
ஒரு விவாகரத்தால், பிள்ளைகள் பிரிந்து போவதும் , அல்லது பெற்றோரில் ஒருவரை இழப்பதும் என்ன நியாயம்?
இந்த நியாயமான கேள்விக்கு, கனமான பதிலாக வந்திருக்கிறது இந்தக் குறும்படம் .

சரியான கதாபாத்திரங்கள், நல்ல நடிக நடிகையர் , நேர்த்தியான கதைப்போக்கு, சிறப்பான படமாக்கல், அருமையான இயக்கம் என்று ஃ பேமிலி குறும்படத்தை பார்ப்பவர் இதயத்தில் நிலை நிறுத்துகிறார் உதயா .
ஜஸ்ட் ஒரு brerathing time ஆக, காமெடிக் காட்சி ஒன்றில் ( அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்) துவங்கும் படம் அடுத்த காட்சியிலேயே சூடு பிடித்து கடைசி வரை பயணித்து கைதட்டல் பெறுகிறது .
குடும்பம் உடையக் கூடாது என்று எண்ணும் குடும்ப நலக் கோர்ட் அதிகாரியாக பூர்ணிமா பாக்யராஜ் பண் பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார். பக்குவமற்ற வெறுப்பை வளர்த்துக் கொண்டு விவாகரத்துக் கேட்கும் மனைவி பாத்திரத்தில் லாவண்யாவும் , அதைத் தடுக்க முடியாமலும் சுய ஈகோ கலந்து தடுமாறவும் செய்யும் கதாபாத்திரத்தில் விஜித்தும் கரைந்து கிடக்கிறார்கள் . அருமை

சுட்டிகள் மாஸ்டர் சாய் யோகன் , மாஸ்டர் மித்திரன், பேபி த்ரி நாராயணி சரத், பேபி ரோகினி ஸ்ரீ நம்மைக் கவர்ந்து கலங்கடிக்கிறார்கள்
எல் கே விஜய்யின் ஒளிப்பதிவும் நரேன் பாலகுமாரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன .
வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
ஆனாலும் என்ன …
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய தரத்தோடு சொல்லி இருப்பதன் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குனராக ஜொலிக்கிறார் உதயா .
மிகச் சிறந்த வெள்ளித்திரை இயக்குனராக விரைவில் ஜொலிக்கப் போகிறீர்கள் உதயா .
அட்வான்ஸ் வாழ்த்துகள் .