அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏசி எஸ் அருண்குமார் தயாரிக்க, சுந்தர் சி , வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன் , அருள்தாஸ் , ரிஷி, கவுரவத் தோற்றத்தில் வெமல் நடிக்க , சுந்தர் சி கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
கேங்க்ஸ்டர் என்பதன் பாமரச் சொல்லே கேங்கர்ஸ் .
கிராமத்து அரசுப் பள்ளி இடத்தை தண்ணீர் கேன் விற்பனை என்ற பெயரில் தங்களது எரிசாராயத் தயாரிப்புத் தொழிலுக்கும் பிற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தும் அரசியல் தாதாக்கள் , அதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி, உண்மையைக் கண்டு பிடித்த மாணவி கொலை, தட்டிக் கேட்கும் ஆசிரியை (கேத்தரின் தெரசா) , அவளை ரூட் விடும் பி டி மாஸ்டர் (வடிவேலு) , பள்ளியில் நடக்கும் மர்மங்களைக் கண்டுபிடிக்க , அங்கு பி டி ஆசிரியராகப் போகும் போலீஸ்காரனான நாயகன் (சுந்தர் சி )…
அந்த நாயகனுக்கும் அந்த கல்வி தாதாக்களுக்கும் இருக்கும் பழைய அநியாய சம்பவம், அதற்காகவும் மாணவர் நலனுக்காகவும் நாயகன் எடுக்கும் நடவடிக்கைகள்…. எல்லாம் கடைசியில் ஆயிரம் கோடி பணக் கொள்ளைக்குத் திட்டமிட வைக்க, அதன் விளைவு என்ன என்பதே கேங்கர்ஸ் .
சுந்தர் சி கே உரிய கலர்புல், கவர்ச்சி, காமெடி , செண்டிமெண்ட் பொரி கடலை மிக்சர் படம்.
வழக்கமாகவே துருத்திக் கொண்டு நடிக்கும் கேத்தரின் பாணி , லாஜிக் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை என்றாலும் இந்தப் படக் கேரக்டருக்குப் பொருத்தம் .
வில்லன் ஆட்களை சுந்தர் சி, வடிவேலு போல போய் புரட்டி எடுக்க , வடிவேலு வில்லன் கோஷ்டியிடம் மாட்ட , இது போன்ற ஏரியாக்களில் வெடிச் சிரிப்பு ஏற்படுத்தும் வழக்கமுள்ள சுந்தர் சி – வடிவேலு கூட்டணி, இதில் புன்னகைக்க வைக்கிறது.
முதல் பாதியில் படுத்தி எடுக்கும் வடிவேலு இரண்டாம் பகுதியில் கெட்டப்களால் கவர்கிறார் . தூங்கும் ஹரீஷ் பெராடியின் இடுப்பில் இருந்து சாவி எடுக்கும் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளில் சிரிக்கவும் வைக்கிறார்
வாணி போஜன் பிளாஷ்பேக் அச்சச்சோ சென்டிமென்ட்.
மாணவனின் நிஜ முகம் வெளிப்படும் காட்சி , அதைத் தொடர்ந்து வரும் அந்த அதிரடியான செங்கல் சூளைச் சண்டை, கடைசியில் பணத்தைக் கடத்தும் உத்தி… இவற்றில் சுந்தர் சி யின் திரைக்கதை சமர்த்து வெளிப்படுகிறது. அசத்தல்.
மசானக் கொள்ளைக் காட்சிகளை இன்னும் கதையோடு சேர்ந்து பயன்படுத்தி இருக்கலாம்
பதிமூணு வருஷம் புளித்த திராட்சை ரசம் ஆளை அசத்தும் மதுவாக மாறுவதும் , அவசர அவசரமாக சுட்ட ஆப்பம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சமைத்தவர்களே சொல்லும் லெவலில் இருப்பதும்.. சாப்பாட்டு அரசியலில் சகஜம்தானேப்பா .
குட் பேட் அக்லியில் அஜித் என்ன செய்தாலும் ரசித்து வசூலை கொட்டிக் கொடுத்தது போல , வடிவேலு என்ன பேசினாலும் நாங்க சிரிப்போம் என்பவர்களுக்கு, கேங்கர்ஸ் காமெடி கலாட்டா .