BATTLERS CINEMA சார்பில் கருப்பையா முருகன் எழுதித் தயாரித்து இயக்கியிருக்க, பிரேம்ஜி , திவ்யதர்ஷினி, தீபா நடித்திருக்கும் படம் .
மனைவி, மகள் ( திவ்யதர்ஷினி) என்று கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த ஒருவன் (பிரேம்ஜி), மனைவி விபத்தில் இறந்து தனது காதுகளும் கேட்கும் திறனை இழந்த நிலையில் , மகளை அழைத்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க சென்னை வருகிறான் .
சவாரி வந்த ஆட்டோ டிரைவரின் உதவியோடு குடியிருக்கச் சிறிய வாடகை வீடு , பிழைப்புக்கு போஸ்டர் ஒட்டும் வேலை ஆகியவற்றைப் பெற்று, தன் மகளை ஓர் அரசு பள்ளியில் படிக்கவும் வைக்கிறான் .
இந்த நிலையில் மகளான சிறுமி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிகிறான் .
யார் என்று மகளுக்கும் தெரியாத நிலையில் அவனைக் கண்டு பிடிக்க முயல்கிறான் .
அரசுப் பள்ளிக்கு ஐம்பது லட்சம் நன்கொடை கொடுத்து பள்ளியின் பேருக்கு முன்னால் தன் பெயரை இடம் பெறச் செய்யும் திட்டத்தின் கீழ், அந்தப் பள்ளியில் தன் பெயரைப் போட வைக்கும் சக்கரவர்த்தி என்ற தொழிலதிபர்தான் அந்த நபர் என்று சந்தேகம் எழுகிறது .
”பெரிய ஆட்களிடம் நாம் எப்படி மோத முடியும் ? ஊருக்கே போய் விடலாம்” என்று அப்பன் சொல்ல, ”யாரா இருந்தாலும் கண்டு புடிச்சுக் கொன்னுடனும்” என்று மகள் ஆசைப் படுகிறாள்
அப்பனும் சம்மதிக்க அப்புறம் நடந்தது என்ன என்பதே வல்லமை .
அட்டகாசமான கதை . .
திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
வசனங்கள் ஆங்காங்கே சபாஷ் போட வைக்கின்றன . அசந்தர்ப்பமான சூழலில் வந்தாலும் அப்பா சொன்ன கதையை அப்பாவுக்கே மகள் திரும்பி சொல்லும் இடம் அழகு .
சூப்பர் குட் சுப்பிரமணி நடித்திருக்கும் அந்த நல்ல போலீஸ்கார் கேரக்டர் மயிலிறகு .
வயதான பண்பட்ட பெரிய நடிகர்கள் எல்லாம் சும்மா கடமைக்கு வஜனம் பேசி வடை சாப்பிட்டு விட்டுப் போயிருக்க, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சிறுமி கேரக்டரில் நெகிழ வைக்கும்படி அசத்தி இருக்கிறாள் சிறுமி திவ்யதர்ஷினி . அவ்வளவு சிக்கலான ஒரு கேரக்டரை உணர்ந்தும் அதே நேரம் குழந்தைத்தனம் குழைத்தும் நடித்திருக்கும் விதம் கிரேட். அந்த முகம் வேறு அப்படி பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துகள் மகளே !
வேலை வாங்கிய விதத்தில் இயக்குனருக்கும் பாராட்டுகள்.
பிரேம்ஜி தோற்றப் பொருத்தம் ஓகே.
”நல்லா நடிக்கத் தயார்…” என்கிறார் தீபா.
ஒரு பெரிய பணக்காரப் பொறுக்கியை ஒரு சிறுமியும் அப்பாவித்தனமான மனிதனும் பழி வாங்குகிறார்கள் என்பது , கோலியாத் கதை மாதிரி எப்பேர்ப்பட்ட அல்வாத்துண்டு ஏரியா . அந்த ஏரியா இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால் இந்தப் படம் ஹிட் ஆகி இருக்கும் .
ஆனால் அது அமையாதது வருத்தமே.
