கார்கி @ விமர்சனம்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் 2D என்டர்டைன்மென்ட் வெளியிட,  பிளாக்கி,  ஜெனி மற்றும்  மை லெஃப்ட் ஃபூட்  புரடக்சன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் , தாமஸ் ஜார்ஜ், ஐஸ்வர்ய லக்ஷ்மி, கவுதம் ராமச்சந்திரன் தயாரிப்பில்,  சாய் பல்லவி, ஆர் எஸ் சிவாஜி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி,  காளி வெங்கட் நடிப்பில், 

ஹரிஹரன் ராஜுவோடு இணைந்து எழுதி, கவுதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் . 

கட்டிய மனைவியைக் கூட அவளுக்கு விருப்பம் இல்லாத நிலையில் பாலியல் தேவைக்கு வற்புறுத்துவது மனித உரிமை மீறல் . அப்படி இருக்க சம்மந்தமில்லாத பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்வது எவ்வளவு பெரிய குற்றம்? அதையே பாலியல் என்றால் என்ன என்றே தெரியாத சிறார்களிடம் செய்வது எவ்வளவு பெரிய கொடுங்குற்றம்? அதுவே கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருந்தால் அது இன்னும் எவ்வளவு மாபெரும் கொடிய குற்றம்? 

இதை உணர்ந்த ஒரு அறிவார்ந்த நல்ல இளம் பெண்ணுடைய  தந்தை…. 

சிறுவயதில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமையில் சிக்க இருப்பதை உணர்ந்து காப்பற்றிய தந்தை…

அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா  மனம் நொறுங்கி பின் ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து  அவரைக் காக்கப் போராடும் அந்த இளம் பெண்ணின் போராட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அல்லது இருக்க வேண்டும்?தன் தந்தை (ஆர் எஸ் சிவாஜி) அப்படி ஒரு குற்றச்சாட்டில்  சிக்கும் போது, வேறு ஆண் துணை இல்லாத வீட்டில்,  அம்மா மற்றும்  சிறுமியான தங்கை இவர்களை வைத்துக் கொண்டு அப்பாவை மீட்கப் போராடும்  இளம் பெண் கார்கியின்  (சாய் பல்லவி) அதிர்ச்சி, துயரம், நிறைந்த கண்ணீர் , வியர்வை வலி நிறைந்த  போராட்டமும் முடிவுமே இந்தப் படம் . 

சொல்ல வேண்டிய கதையை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய முடிவோடு சொல்லி இருக்கும் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு . 

இயக்குனரின் திரை மொழி அற்புதமாக இருக்கிறது . 

தமிழ் சினிமாவில் ஒரு நிலை வரை திருநங்கைகள் கேவலமாக சித்தரிக்கப்பட்டார்கள்.  பின்னர் நல்ல முறையில் அவர்களை சித்தரிக்கும் படங்கள் வந்தன . ஆனால் இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் திருநங்கை கதாபாத்திரமும் பாலியல் வழக்குகளை ஆண், பெண் நீதிபதிகளை விட திருநங்கைகளால்தான் இரண்டு பக்கமும் உணர முடியும் என்று சொல்லும் காரணமும்  சிலிர்க்க வைக்கிறது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் முகம் கடைசிவரை படத்தில் காட்டப்படவில்லை.  அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் முகம் கூட காட்டப்படக் கூடாது என்ற முடிவின் மூலம், அப்படி பாதிக்கப்படும் பெண்களின் முகங்களை டி ஆர் பி பசிக்காகப் படம் பிடித்துக் காட்டும் மீடியாக்களுக்கு அவர் கொடுக்கும் கருத்தியல் பிரம்படி பரணி பாடற்குரியது. 

பருவத்துக்கு வரும் பெண்களுக்கு படத்தின் இறுதியில் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் கொடுக்கும் பக்குவமான நவீன தாய்ச்சி அறிவுரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது . 

ஓர் எழுத்தாளராக , இயக்குநராக உயர்ந்து நிற்கிறார் கவுதம் ராமச்சந்திரன் . 

அருமையான அட்டகாசமான அழுத்தமான பொருத்தமான மிகச்சிறப்பான சிலிர்ப்பான முழுமையான நடிப்பைக் கொடுத்து  இருக்கிறார் சாய் பல்லவி . கேரக்டர் துளி கூட சாயாத அளவுக்கு தூக்கி நிறுத்தி இருக்கிறார் சாய் பல்லவி .  சின்ன சின்ன விவரணையான,  உணர்வு வெளிப்பாடுகள் நிறைந்த முக பாவனைகள் , அற்புதமான உடல் மொழிகள் , இதயம் துழாவும் குரல் நடிப்பு …. இவருக்கு விருது தருவது விருதுக்கே விருது கொடுப்பது போல. 

ஆர் எஸ் சிவாஜி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி,  காளி வெங்கட்  , சிறுமிகள் உட்பட அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். 

கோவிந்த வசந்தாவின் பின்னணி இசை,  இமயத்தில்  ஏறிக் கொண்டு இருக்கும் படத்தை சிகரத்துக்குச் சுமந்து கொண்டு போகிறது. ஷ்ரையந்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா ஆக்காட்டுவின் ஒளிப்பதிவு ரசிகனை ஆரம்பம் முதல் கடைசிவரை படத்தில் உணர்வுப் பூர்வமாக ஒன்றிப் போகச் செய்கிறது . 

படத்தில் குறைகளும் உண்டு . வெகு ஜன மக்களை  ஈர்க்காத-  விலகச் செய்கிற டைட்டில் கார்கி . 

யூகிக்க முடிந்த கிளைமாக்ஸ் . அது இல்லாமல் இந்தப் படம் தேவையே இல்லை என்பது சாதாரண ரசிகனுக்கும் தெரியும். படத்தின்  நீளமும் அதிக பட்ச பீடிகையும் முன்பே இதுதான் கிளைமாக்ஸ் என்று சந்தேகம் இன்றி உறுதி செய்கிறது . 

பிளாஷ்பேக்கில் வரும் அப்பா மகள் வாத்தியார் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி இந்தப் படத்துக்கு ஆபத்தான ஒன்று . அந்தக் காட்சி இருந்து இதுதான் கிளைமாக்ஸ் என்றால் அங்கே நிகழ்வது ஒரு  பெரும் கதாபாத்திரச் சீர்குலைவு ;  கேரக்டர் அஸ்ஸாசிநேஷன் . இந்த கிளைமாக்ஸ்க்கு அந்த ஒரு காட்சி (மட்டும்) தேவை இல்லை .

அல்லது ஃ பிளாஷ்பேக்கில் அந்த காட்சி வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருந்தால் கிளைமாக்ஸ் இப்படி பொத்திக்கோ புடிச்சுக்கோ என்று இருந்திருக்கக் கூடாது. ரத்தக்களரியாக இருந்திருக்க வேண்டும். 
இப்படி சில குறைகள் இருந்தாலும்  அவற்றையும் மீறி தேவையான அவசியமான இன்றியமையாத படம் கார்கி.

கருத்தியல் மகுடம் கார்கி . 

வீட்டில் உறவில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, மாமா , அத்தை தாத்தா பாட்டி சித்தப்பா பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா ,  நட்புகளின் உறவுகள் , உறவுகளின் நட்புகள், வெளியே பள்ளி , கல்லூரி பணியிடத்தில் சக மனிதர்கள் ஆகியோரைக் கொண்டு இருக்கிற அனைவரும் பார்க்க  வேண்டிய படம் கார்கி 

கார்கி …. தமிழ் சினிமாவின் (மாக்சிம்) கார்க்கி .   

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *