சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் சீனிவாஸா சித்தூரி தயாரிக்க, ராம் போதினேனி , ஆதி , கீர்த்தி ஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா நடிப்பில் லிங்கு சாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வந்திருக்கும் படம்.
சமூக அக்கறை உள்ள இளம் மருத்துவர் சத்யா (ராம் போதினேனி)அப்போதுதான் பணிக்குச் சேர்ந்த நிலையில் கொலை வெறியோடு தாக்கப்பட்டு குற்றுயிராக்கப்பட்ட ஒரு நபரை மருத்துவமனைக்குக் கொண்டு போய்க் காப்பாற்றுகிறார்.
காப்பற்றப்பட்ட நபரைக் கொன்று விட்டு சத்யாவையும் எச்சரித்து விட்டுப் போகிறது கொலைகாரக் கும்பல் . காரணம் அவர்களின் தலைவனான தாதா குரு ( ஆதி) தரும் பலம் .
குருவின் நிறுவனம் தயாரிக்கும் தவறான மருந்துகளால் பல உயிர்கள் பறிபோக, சத்யா புகார் செய்ய, மருந்து கம்பெனி சீல் வைக்கப்பட, சத்யாவை குற்றுயிராக்குகிறான் குரு .
காதலிக்கும் பெண்ணையும் (கீர்த்தி ஷெட்டி) விட்டு , அம்மாவோடு (நதியா) வேற்று ஊருக்குப் போகும் சத்யா சில வருடம் கழித்து டி எஸ் பி யாக அதே ஊருக்கு வருகிறார்.
குருவுக்கும் அவருக்கும் நடக்கும் மோதலில் யார் ஜெயிப்பார் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை .
ராம் சின்சியராக நடிக்கிறார் . கீர்த்தி ஷெட்டி செயற்கையாக நடித்தாலும் அழகாக இருக்கிறார் . விசில் மகா லக்ஷ்மி என்ற பெயரையும் விசிலையும் தவிர காட்சிகளில் சிறப்பாகவும் ஏதும் இல்லை .தேவையாகவும் எதுவும் இல்லை
நதியாவின் நடிப்பும் கேரக்டரும் அப்படியே எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியை நினைவு …. படுத்துகிறது .
ஒரு சில காட்சிகளே ரசிக்கும்படியாகவும் அரிதாகவே வசனங்கள் ஒகே சொல்லும்படியும் iஇருக்கின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புல்லட் பாடல் சீறிப் பாய்கிறது. சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு சிறப்பு. லிங்குசாமியின் படமாக்கல் , இயக்கம் , விவரணை சிறப்பாக இருந்தாலும் அலுத்து சலித்துப் புளித்த கதை திரைக்கதை வசனம் வாரியரை மண்ணில் விழ வைக்கிறது .
போலீஸ் அதிகாரியாக மாறும் மருத்துவர்கள் என்பது படத்தில் உதாரணங்கள் காட்டுகிறபடி நிஜமாகவும் நடக்கும் விஷயம் . ஆனால் அதை வைத்து சுவாரஸ்ய திரைக்கதை அமைக்கத் தவறிவிட்டார்கள்