டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் , வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் மற்றும் வினோத் தயாரிக்க, தனுஷ் , ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே நடிப்பில் தனுஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் .
சங்கராபுரம் கிராமத்தில் இட்லி கடை நடத்தும் சிவநேசன் (ராஜ்கிரண்), அதை தொழிலாக மட்டும் பார்க்காமல் உணர்வாக வழிபாடாகப் பார்ப்பவர்.
மாவு ஆட்ட கிரைண்டர் வந்த பிறகும், ‘ என்ன இருந்தாலும் கையால் ஆட்டும்போது வரும் கைப்பக்குவ சுவை வரவில்லை’ என்பதால் தினமும் ஆட்டுக்கல்லில் கஷ்டப்பட்டு ஆட்டி இட்லி சுடுபவர். பின்னாளில் சங்கிலி தொடர் கடைகளை வைத்து சம்பாதிக்கலாம என்ற ஆலோசனை வரும்போதும் “எல்லா இடத்திலும் நானே போய் சமைக்க முடியாது . என் பேருக்காக நம்பி வர்றவங்களுக்கு பண்ற துரோகம் இல்லையா என்று கேட்டு மறுப்பவர்.
அவரது மனைவி (கீதா கைலாசம்) கணவனுக்கு ஏற்றவர் .
அவர்களது மகன் முருகன் ( தனுஷ்) சிறுவயது முதலே அப்பாவைப் பார்த்து கடையில் வேலை செய்து வளர்ந்தவன் . சமையல் படிப்புப் படித்து வெளிநாட்டுக்கு போய் வேலை செய்து அங்குள்ள தொழிலதிபர் (சத்யராஜ்) அன்புக்கு , தன் உழைப்பாலும் பணிவாலும் பாத்திரமாகிறார் .
ஒருநிலையில் தன் மகள் (ரங்கராஜ பாண்டே.. அடச் சே .. ஷாலினி பாண்டே) முருகனைக் காதலிக்க , அதையும் தொழிலதிபர் ஏற்கிறார் .
ஆனால் அவரது மகனும் அந்த மாபெரும் தொழில் சாம்ராஜியத்தின் வாரிசும் ஆணவம் கொண்ட சைக்கோ மாதிரியான நபருமான அஸ்வினுக்கு (அருண் விஜய்) முருகன் தன் வீட்டு மாப்பிள்ளை ஆவதில் விருப்பம் இல்லை . முருகனை அஷ்வின் அவமானம் செய்ய , காதலுக்காக முருகன் அதைப் பொறுத்துக் கொள்கிறான்.
திருமணம் முடிவாகி உலக அளவில் எல்லோருக்கும் தொழிலதிபர் பத்திரிக்கை வைத்த நிலையில் , முருகனின் அப்பா சிவநேசன் ஊரில் இறந்து போகிறார் .
வந்து காரியம் முடித்து விட்டு கல்யாணத்துக்கு வந்து விடலாம் என்ற எண்ணத்தோடு முருகன் சங்கராபுரம் வர, அடுத்தடுத்து நடக்கும் இழப்புகள் , அதன் வழியாக எழும் உணர்வுகள், சிறுவயதில் அப்பா அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கை , அப்பாவின் ஆன்மா அவர் நடத்திய இட்லி கடையில் இருப்பது… இவற்றை எல்லாம் உணர்ந்து கல்யாணத்தை தள்ளிப் போடச் சொல்கிறான் . அயல்நாட்டில் தொழில் அதிபர் குடும்பம் கொந்தளிக்கிறது .
இவனும் பதிலுக்கு கோபம் காட்ட ,
தொழில் அதிபரின் சைக்கோ மகன், தங்கள் குடும்பத்தின் பணபலம். அதிகார பலம் செல்வாக்கு இவை தரும் தைரியத்தில் தமிழ் நாட்டுக்கு வந்து சங்கராபுரம் போய் , ஊர் மக்கள் மத்தியிலேயே முருகனை அடிக்கிறான் . முருகன் பதிலுக்கு அடிக்க, அஷ்வின் கால் முறிகிறது . இப்போது கோபம் கொண்டு தொழில் அதிபரும் வர , அப்பனும் மகனும் சேர்ந்து முருகன் மேல் பாய , அஷ்வின் முருகனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான் . அப்புறம் என்ன நடந்தது ? முருகனின் பள்ளிக் காலக் காதலியின் ( நித்யா மேனன்) நிலை என்ன ஆனது என்பதே இந்த இட்லி கடை .
இதயம் ஈர்க்கும் கதை , சிறப்பான திரைக்கதை, அருமையான காட்சிகள் , ஒரு காட்சியை ஆரம்பித்து சிறப்பாக முடிக்கும் விதம் , அட்டகாசமான மேக்கிங் ,
காட்டுக்குள் நடக்கும் திருவிழா என்பதை பின்புலத்தை கேமரா வாரி சுருட்ட, கிரேன் இறக்கியபடி தனுஷ் அண்ட் கம்பெனி ஆடும் நீண்ட நெடிய சிங்கிள் ஷாட் டான்ஸ் ஸ்டெப்ஸ்… அந்த பாடலை நடனத்தை முடிக்கும் விதம் …
என்று படத்தை வெகு நேர்த்தியாக எழுதி சிறப்பாக இயக்கி இருக்கிறார் தனுஷ் .
குல தெய்வங்கள் பற்றிய புரிதல், அப்பா இறந்த அன்று பசு ஈன்ற கன்றுக்குட்டியை அம்மா சொன்னபடி அப்பாவாகப் பார்க்கும் விஷயம் என்று உயிர்ப்புள்ள ஈர மண் வாசனையை ரசிகன் நுகர்வது போல பல சிறப்பான விஷயங்கள் படத்தில் இருக்கின்றன .
இப்படி ஓர் அழுத்தமான கதை திரைக்கதைக்கு வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ ?’ என்று தோன்றியது நிஜம். உதாரணமாக , தனுஷை தவறாக நினைக்கும் நித்யா மேனன் , ” இப்படி பண்ணிட்டியே … உங்க அப்பா கட்டை நல்லபடியா வேகுமா ?” என்று கேட்கும் போது, ‘அப்படி’ செய்யாத நெகிழ்வோடு ” வேகும் ..” என்று சொல்லி தனுஷ் ஆரம்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். (மெட்டீரியல் லாஜிக்காக அவர் கட்டை முன்பே வெந்து விட்டது என்பது வேறு விஷயம்).
இப்படி அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருந்தது
மற்றபடி தனுஷின் எழுத்து இயக்கம் மிக மேன்மையாக இருந்தது .
பாடல் காட்சிகள் , பின்னணியில் கதை சொல்லும் தனுஷின் குரல் இவற்றுக்கு ஏற்ற மிக சிறப்பான மாண்டேஜஸ் காட்சிகளை அவ்வளவு சிறப்பாக சிரத்தையாக வெரைட்டியாக ஆச்சர்யப்படும் அளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது . காளை மாட்டு சிலையில் சிறுவன் உட்கார்ந்து ஓட்டுவது போல மகிழும் மாண்டேஜ் எல்லாம் அற்புதம்.
அதிகப் பின் கதை கொண்ட ஸ்கிரிப்ட் எனினும் ஒரு இடத்தில் கூட காட்சி, கருத்து , வசனம் , மாண்டேஜ் இவற்றில் ரிப்பிட்டேஷன் . அலட்சியம் என்று எதுவும இல்லாத நேர்த்தியான அருமையான உழைப்பு . அந்த விதத்தில் தனுஷும் ஒரு இட்லி கடை சிவநேசனே .
அவர் கடைசியாக யார் மேல் ஷாட் போட்டு படத்தை முடிப்பார் என்பதைக் கூட முன்கூட்டியே சரியாக உணர முடிந்தது என்னும் அளவுக்கு தன் படத்தின் உணர்வு அடிப்படையை, ரசிகன் மனசுக்குள் இறக்கி விடுகிறார் . கிரேட் ரைட்டர் அண்ட் டைரக்டர் தனுஷ் .
சிவாஜி கமல் கார்த்திக் , தனுஷ் இவர்கள் நல்லா நடிக்கலன்னாதான் அது செய்தி . வழக்கம் போல தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்து இருக்கிறார் . நடிகர் தனுஷ் நட்சத்திரம்தான் . இந்தப் படத்தில் ரைட்டர் இயக்குனர் தனுஷ் தான் சூரியன் .
நித்யாமேனனும் தமிழ்நாட்டு தெக்கத்திப் பெண்களின் குண இயல்புகளை உணர்ந்து சிறப்பாக நடந்து , நடித்து உள்ளார்.
என்ன.. அவர் ஆட்டுக்கல்லில் மாவாட்டும்போது ” அடே ஓர் ஆட்டுக் கல்லே ஆட்டுக் கல்லில் மாவாட்டுகிறதே… ” என்று ஒரு குட்டிக் கவிதை நினைவுக்கு வந்தது . (நாங்களும்’ பொயட்டு’தான் தனுஷ் சார் ) எனினும் நித்யா , சிறப்பான நடிப்பு .
வில்லன் கதாபாத்திரத்தை பார்ப்பவர் கோபப்படும்படி சிறப்பாக செய்துள்ளார் அருண் விஜய் .
சத்யராஜும் , இளவரசுவும் டைலர் மேட் கேரக்டர்களில் கச்சிதம் .
எளிய கேரக்டர் என்றாலும் நிதானமான நடிப்பால் , எதுக்கு இந்த கேரக்டர் என்ற கேள்வியை மெல்ல மெல்ல மறக்கடிக்கிறார் சமுத்ரக்கனி .
காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் பார்த்திபனைப் பார்ப்பதே வித்தியாசமான அனுபவம் . ஷாலினி பாண்டே அவருக்கு வருவதை செய்துள்ளார் .
ஆனால் படத்தில் பியூட்டி என்ன வென்றால் ,, இவர்களைப் போலவே,
சின்னச் சின்ன கேரக்டரில் , சிவநேசன் இட்லி ருசிக்கு மயங்கிய பெரியவர் , பார்த்திபனிடம் கொந்தளிக்கும் அப்பத்தா இவர்களும் அசத்தி இருக்கிறார்கள் .
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு நல்ல பிள்ளையாக டைரக்டர் சொன்ன வேலையை மட்டும் செய்துள்ளது .
உணர்வு நெய்யூறும் வகையில் இருக்கும் ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை , திருவிழாப் பாட்டின் வைப் இவற்றில் அசத்தி இருக்கிறது . தனுஷ் நித்யா மேனன் காதல் பாட்டுக்கு இதே மாண்டேஜஸ்க்கே இன்னும் கொஞ்சம் டெம்போ ஏத்தி இருக்கலாம் .
தனுஷின் வித விதமான ஷாட்கள். எடிட்டர் பிரசன்னாவின் படத்தொகுப்பால் ஜொலிக்கிறது .
பிரச்னை என்ன என்றால்,
படத்தின் முதல் பாதி காட்டும் வாழ்வியல் அப்படி பிரம்மாதமாக இருக்கிறது . இடைவேளையை அதே ஃபீலிங்கில் காட்சி வைத்து முடித்து இருக்கலாம் .
ஆனால் தனுஷ் அருண் விஜய்யின் டிஷ்யூம் டிஷ்யூம் அங்கேயே ஆரம்பித்து விட்டதால் அங்கேயே ; சினிமா ‘ தெரிய ஆரம்பித்து விட்டது . அதை இன்டர்வல் hold என்று தனுஷ் கமர்ஷியலாக யோசித்து இருக்கிறார் . ஆனால் அதற்கு முன்பு படம் இருக்கும் சிறப்பில் அது அங்கே செட் ஆகவில்லை.
குறைந்த பட்சம் அருண் விஜய் வந்து நிற்கும் இடத்தில் இன்டர்வல் விட்டு இருந்தால் கூட முதல் பாதியின் வாழ்வியல் உணர்வு அப்படியே உள்ளே இறங்கி இருக்கும் .
திருச்சிற்றம்பலம் படத்தில் அந்த இடைவேளை பாயிண்டை அவ்வளவு கரெக்டாகப் பிடித்து இருப்பார்கள் .
நிறைய பேர் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு அதன் இரண்டாம் பகுதிதான் காரணம் என்பார்கள் . இல்லை. அந்த வாழ்வியலான முதல்பாதி இல்லாவிட்டால் இரண்டாம் பகுதி பலனற்றுப் போயிருக்கும் . முக்கியமாக அந்த இன்டர்வல் பாயின்ட் அதுதான் அந்தப் படத்தின் பலம் .
இது மட்டுமல்ல .. ” உங்களை சுட்டது யார்?’ என்ற கேள்விக்கு தனுஷ் சொல்லும் பதிலிலேயே கதை முடிந்து விட்டது . அதன் பின்னர் படம் ஐந்து நிமிடம்தான் ஓட வேண்டும் . தனுழ் இருக்கிறார் என்பதால் பத்து நிமிடம் ஓடலாம் .
சமுத்ரக்கனியின் கன்னுக்குட்டி விஷயம் கிராமத்து சுரீர் . ஆனால் இது எல்லாம் துப்பாக்கி சூட்டுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்.
சிவாஜி, சாவித்திரி நடிக்க பீம்சிங் இயக்கிய ஒரு படத்தின் (பெயர் தெரியும். ஆனால் இங்கே வேண்டாம்) லெவலுக்கு இந்தப் படம் போயிருக்கும் . விஜயகாந்த் நடித்த ஒரு சிறப்பான படத்தின் அழகிய முடிவை தொட்டு இருக்கும் . (அந்தப் படம் மாதிரியே காட்சி வைக்கத் தேவை இல்லை)
தவிர இன்றைய 2k கிட்ஸ்க்கு அதுக்கு மேல் சொன்னால் தாங்காது . அதற்கு மேல் மீண்டும் மீண்டும நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அதன் வெவ்வேறு சைஸ் ஜெராக்ஸ் காப்பிதான் . எத்தனை செய்தாலும் கிளைமாக்ஸ் மாறப் போவது இல்லையே.
அருண் விஜய்க்கு ஒரு வித்தியாசமான கேரக்டரைசேஷன் பிடித்த உற்சாகத்தில் மேலே மேலே போகிறார் தனுஷ் . அது கிம்மிக்ஸ் ஆகவும் செட் புராபர்ட்டியை என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலாகவும் , ஆரம்பம் முதலே எப்ப வரும் எப்ப வரும் என்று எதிர்பார்த்த விஷயமாகவும் இருக்கிறது .
அருண் விஜய் கேரக்டரைசேஷன் வித்தியாசமாக இருக்கிறது . ஆனால் அதன் பிறகு யதார்த்தமாக இல்லை. அருண் விஜய் கடைசியில் செய்வதை அங்கேயே கூட செய்யலாம் . அதனால் அது சிம்பிளாக மாறாது .
ஆடியன்ஸசுக்கு நல்ல கனெக்ட் ஆக பலம் பெறும். அது வேண்டாம் என்றால் சுடப்பட்ட விசயத்தில் தனுஷ் சொல்லும் பதிலுக்கு அப்புறம் திரைக்கதை வேறு பாணியில் போயிருக்க வேண்டும் .
இப்படி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப வெவ்வேறு சம்பவங்களோடு ரிபீட் செய்ய வேண்டும் என்றால் இதே பாணியில் இன்னும் நாலு சிச்சுவேசன் கூட எழுதிக் கொண்ட போகலாமே .
இப்படி சில விவாதங்களுக்கு இடம் கொடுத்தாலும்.. இதனால் இந்தப் படம் போக வேண்டிய உயரம் போகுமா என்றாலும் காசு கொடுத்துப் பார்க்க வரும் ரசிகனை இந்தப் படம் ஏமாற்றாது
தனுஷின் இட்லி கடை… ஹார்ட்டின் ஷேப் இட்லி.
மகுடம் சூடும் கலைஞர்
*********************************
தனுஷ்