ஜாக்சன் துரை @ விமர்சனம்

jack son 1

ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் எம் எஸ் ஷரவணன் தயாரிக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட, சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், பிந்து மாதவி, யோகி பாபு நடிப்பில் ,

பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜாக்சன் துரை .இந்த சினிமா துரை வரி வாங்குவாரா ? இல்லை வலி கொடுப்பாரா ? பார்க்கலாம் . 
அயன்புரம் என்ற கிராமத்தில் உள்ள , பிரிட்டிஷ் இந்தியா காலத்து பங்களா ஒன்றில், தினசரி  இரவு ஒன்பது மணிக்கு மேல் பேய்கள் கலாட்டா செய்ய, அதனால் அந்த ஊர் மக்கள்  பயந்து நடுங்க, 
jack son 4
அது பேய்களின் கொட்டமா ? இல்லை மனிதர்களின் ஆட்டமா என்று கண்டு பிடிக்க , சென்னையில் இருந்து , வந்து இறங்குகிறார் போலீஸ் அதிகாரி சத்யா (சிபிராஜ்).
மணி என்பவனை (யோகி பாபு) தனக்கு உதவியாக வைத்துக் கொள்கிறார் 
 ஊர்ப் பண்ணையாரின் (சண்முக சுந்தரம்) மகள் விஜி (பிந்து மாதவி) மீது அவருக்கு காதல்  வருகிறது. . ஆனால் அவளது முறை மாமன் வீராவும் (கருணாகரன்) அவளை திருமணம் செய்து கொள்ள உரிமை கோருகிறான். 
Bindu Madhavi in Jackson Durai Movie Stills
‘மேற்படி பிரிட்டிஷ் காலத்து பங்களாவில் ஒரு வாரம் தங்கி விட்டு யார் தைரியமாக வெளியே வருகிறார்களோ , அவனுக்கே தனது மகளை கட்டிக் கொடுப்பேன்’ என்று பண்ணையார் சொல்ல , 
சத்யா வீரா இருவரும் பங்களாவுக்குள் தங்கப் போகின்றனர் . 
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜாக்சன் என்ற வெள்ளைக்காரனால் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரான துரையும்  (சத்யராஜ்) அவரது மகள் சிறுமி பொற்கொடியும் (நேஹா ) அங்கு ஆவியாக இருக்கின்றனர் .
jack son 9
அது தவிர ஜாக்சன் ஆவி, ஜாகசனுக்கு உதவிய இந்தியனும் வீராவின் தாத்தாவுமான பிராட் லீ (நான் கடவுள் ராஜேந்திரன்) ஆவி , மற்றும் துரையை கொன்ற வெள்ளைக்கார சிப்பாய்கள், துரையின் சுதேசி நண்பர்கள் …
 
ஜாக்சனின் வெள்ளைக்காரப் பொண்டாட்டி, மகன் ஆகியோரின் ஆவிகளும் அங்கு இருக்கின்றன . 
துரையை ஜாக்சன் கொல்லும் போது, துரை “உன்னை ஜெயிக்காம விட மாட்டேன் ” என்று சொல்லி விட்டுச் சாக, 
jack son 11
தினசரி துரை ,மற்றும் சுதேசி நண்பர்களின் ஆவிகள் ஒன்று சேர்ந்து  ஜாக்சன் மற்றும் வெள்ளைக்கார சிப்பாய்களின் ஆவிகளை  வேல் கம்பு ஆயுதங்களோடு  கொல்லப் போவதும், 
அவர்கள் துப்பாக்கி மூலம் துரையையும் அவரது சுதந்திரப் போராட்ட நண்பர்களையும் டப் டப் என்று சுட்டுக்   கொல்வதுமாக,  
ஒவ்வொரு நாளும் பங்களாவுக்குள் நடக்கும் பேய்களின்  கலாட்டாதான் ஊருக்குள்  பெரும் பீதியை உண்டு பண்ணி இருக்கிறது . 
jack son 14
இது தெரியாமல் பங்களாவுக்குள் நுழையும் சத்யாவின் பயத்தைப் போக்குவதற்காக ,  
அவனிடம் விஜி  “பங்களாவில் பேய் எல்லாம் இல்லை , அங்க உள்ள எங்க பரம்பரைப் புதையலை பாதுகாக்க என் அப்பதான் பலரை பேய் வேஷத்தில் கலாட்டா செய்ய வைத்துள்ளார் ” என்று கூறி உள்ளே அனுப்ப, 
நிஜ பேய்களை செட்டப் ஆட்கள் என்று எண்ணும் சத்யா பேய்களை ரொம்பவே கேவலப்படுத்தி சீண்டி விட, அப்புறம் நடக்கிற கதையே இந்த ஜாக்சன் துரை.
பேய்ப்படம் , திரில் , திகில் , இவற்றோடு நகைச்சுவையைக் கலந்து கொடுத்ததோடு இன்னும் ஒரு படி மேலே போய் மிக வித்தியாசமான சிறப்பான சிந்தனையோடு , 
Jakson Durai Movie Stills
இந்திய சுதந்திரப் போராட்டம் ,நாட்டுப் பற்று என்ற புதிய விசயங்களைக் கலந்து கொடுத்த விதத்தில் மனம் கவர்கிறார் இயக்குனர் தரணிதரன் . 
திரைக்கதையில் மட்டுமல்லாது படமாக்கலிலும் வித்தியாசமான கோணங்களைப் பயன்படுத்தி , வழக்கமான பேய்ப் படங்களில் இருந்து தனித்துவமாக தெரியும்படி படத்தை உருவாக்கி இருக்கிறார் . சபாஷ் ! 
அட்டகாசமான வண்ணக் குழைவு , மற்றும் இருள் – ஒளி ஆளுமை , சிறப்பான கோணங்கள் என்று யுவாவின் ஒளிப்பதிவு வசீகரிக்கிறது .
jack son 7
பின்புலத்தில் எதுவுமே இல்லாத நிலையிலும் கூட ஏதோ ஒரு உருவம் தெரிவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் திறமையான  ஒளிப்பதிவில் கலக்கி இருக்கிறார் யுவா  
டி என் கபிலனின் கலை இயக்கம் மிக சிறப்பு . குறிப்பாக சிபி பயன்படுத்தும் அந்த , ‘பேயின் கை விரல்கள்’ போன்ற மெழுகுவர்த்தி ஸ்டான்ட் . சூப்பர் . 
சித்தார்த் விபினின் பின்னணி இசை, சிங்க் சினிமாஸின் ஒலி வடிவமைப்பு, ராஜா கிருஷ்ணனின் ஒலி அமைப்பு, ஒயிட் லோட்டசின் வி எஃப் எக்ஸ், பிரிசம் பிக்செல்சின் டி ஐ ஆகியவையும் அருமை . 
jack son 3
மேற்சொன்ன அனைவரையும் சரியாகப் பயன்படுத்திய விதத்தில் தொழில் நுட்ப ரீதியாக அப்ளாஸ்களை அள்ளுகிறார் இயக்குனர் தரணிதரன் .
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை உதாரணம் அந்த  இன்டர்வல் கார்டு வரும் ஷாட் . ! 
சுதந்திரப் போராட்ட வீரர், பேய் என்று இரண்டு கேரக்டர்களிலும் ஓங்கு தாங்காக நடித்து இருக்கிறார் சத்யராஜ் .
நாயகனாக நடித்து இருக்கும்  சிபிராஜ் இயல்பான நடிப்பில் கவர்கிறார்  . பிந்துமாதவி அழகாக வெளிப்படுகிறார் . 
jack son 13
நான் கடவுள் ராஜேந்திரன் (அந்த மல்லாக்க ஜம்ப் சூப்பர் ராஜேந்திரன்) , கருணாகரன்,(குட்டிப் பேயை இழுத்து கலாய்க்கும் காட்சி செமை கருணாகரன்)….
யோகி  பாபு (வசன காமெடியில் சிரிக்க வைக்கிறார் ) எல்லோரும் ஒகே . 
சுதந்திரப் போராட்ட பிளாஷ் பேக் எடுக்கப்பட்ட விதம் அட்டகாசம் . ஜாக்சன் மற்றும் துரை இடையே நூறு ஆண்டுகளாக தொடரும் சண்டையில் சத்யாவும் வீராவும் தன்னை இணைத்துக் கொள்வது வித்தியாசம் 
சில இடங்களில் ஜஸ்ட் லைக் தட் காமெடி பொடி தூவப்படுகிறது 
jack son 15
பல காட்சிகளில்  விஜி கேரக்டர் சீரியசாகவே வெள்ளைக்காரர்களை உயர்த்தியும் நம்மவர்களை தாழ்த்தியும் பேசுவதும், அதை சத்யா கேரக்டர் ஏற்றுக் கொள்வதும் எரிச்சல் . 
ஒருவேளை சுதந்திரப் போராட்ட கால பேய்களுக்கு இருக்கும் நாட்டுப் பற்று கூட, இந்தக் கால இந்தியர்களுக்கு இல்லை என்று இயக்குனர் சொல்ல வருகிறாரோ என்னவோ ?
ஆயுதங்கள் குறித்த வசனங்கள் சிரி… சிந்தி … ! கணக்காக சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது . ஆனால் வெற்றி வேல் வீர வேல் என்ற நம்பிக்கை தரும் வார்த்தையில் என்ன பிரச்னை. அதை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்?
jack son 12
பேய்ப் படத்துக்கு லாஜிக் தேவை இல்லை என்றாலும் தினசரி இங்க்லீஷ் பேப்பர் படிக்கும் ஜாக்சன்  பேய்க்கு ,
இந்தியாவை விட்டு வெள்ளைக்காரர்கள் போய்விட்டார்கள் என்பது தெரியாமலே இருப்பது எப்படி ? என்ற கேள்வி, திரைக்கதை ரீதியாக  இந்தப் படத்துக்கு முக்கியம் அல்லவா ?
தெரியல அல்லது தெரியும் என்பதை  என்பதை படத்தில் எங்கே சொல்றீங்க ?
பங்களாவுக்குள் ஏழு நாட்கள் தங்கும் திரைக்கதைப் போக்கில், மூன்றாம் நான்காம் ஐந்தாம் நாட்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை தாண்டிக் குதித்து விட்டுப் போயிருக்கலாம் .
jack son 5
ஆனாலும் என்ன …
பேய்ப்படத்தில் இவ்வளவு வித்தியாசமான திரைக்கதையும் அழகியலும் மர்மமும் கலந்த படமாக்கலும் சிந்திக்க வைக்கும் சில விசயங்களும் ஒன்று சேர்ந்து, 
இந்த ஜாக்சன்  துரைக்கு விரும்பி வரி வட்டி கிஸ்தி  திரை எல்லாம் (அதாங்க , டிக்கட் வாங்கி படம் பார்ப்பது)  கொடுக்கச் செய்கிறது . 
ஜாக்சன் துரை…… வீ ஈ ஈ ஈ ஈ ல்ல்ல்லல்ல்ல்ல் …..  முதல் வந்தே மாதரம் வரை ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *