ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் (Jurassic World Rebirth) @ விமர்சனம்

யுனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் ஆம்ப்லின் என்டர்டைன்மென்ட் சார்பாக  ஃபிராங்க் மார்ஷல் மற்றும் பட்ரிக் க்ரோலி தயாரிக்க, ஸ்கேர்லெட் ஜான்சன், மகேர்ஷலா அலி , ஜோனாதன் பெய்லி, ரூபர்ட் ஃபிரன்ட் மானுவேல் கார்ஷியா ரூல்ஃபோ, ஈத் ஸ்க்ரெய்ன் நடிப்பில் டேவிட் கோயப் எழுத்தில் கேரத் எட்வர்ட் இயக்கி இருக்கும் படம். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் . 

அட்லாண்டிக் கடலில் உள்ள செயின்ட் ஹூபர்ட் தீவில் மரபணு மாற்றப்பட்ட டைனோசார்களை ஓர் ஆய்வுக் கூடத்தில் உருவாக்க முயன்றபோது ஏற்பட்ட மியூட்டேஷன் பிரதி எடுப்பு விளைவுகளால் டைரனோசர் என்ற ஆறு கால் டைனோசர் உருவாகி கூண்டை உடைத்து தீவுக்குள் போய் விடுகிறது . தவிர பிரதி எடுப்புகளால் வெவ்வேறு வித டைனோசர்கள் உருவாகின்றன 

பழைய சைவ டைனோசார் , அசைவ டைனோசார், பறக்கும் டைனோசார் தவிர , கடலில் நீந்தவும் தெரிந்த திமிங்கிலம் மாதிரியான டைனோசார் இப்படி விதம் விதமாய் . 

எனவே அந்த தீவை விட்டு மனிதர்கள் தப்பி வந்து விட தீவு முழுதும் அவைகளின் கொட்டம்தான் . 

இந்த நிலையில் வெவ்வேறு வித மூன்று டைனோசார்களின் உடலில் உள்ள ரத்த மாதிரிகளை வைத்து மருந்து உருவாக்கினால் மனிதனின் இதயம் தொடர்பான நோய்களை குணப்படுத்தலாம் என்று அறியும்  பார்க்கர் ஜெனிக்ஸ் என்ற பார்மாசூட்டிக்கல் கம்பெனியின் அதிகாரி மார்ட்டின் கெப்ஸ் (ரூபர்ட் ஃபிரன்ட் ), அதற்காக சோரா பென்னெட் ( ஸ்கார்லெட் ஜான்சன்) என்ற அதிரடிப்படை அதிகாரியை தேர்ந்தெடுக்கிறார் .

இவர்களோடு கடந்த கால உயிரினங்கள் பற்றிய ஆய்வில் இருக்கும் டாக்டர் ஹென்றி லூமிஸ் ( ஜோனாதன் பெய்லி) இணைகிறார் . 

சுரிநேம் என்ற தென்னமெரிக்க நாட்டின் பார் ஒன்றில் டங்கன் கின்கெய்ட் என்ற தனது பழைய நண்பனை (மகேர்ஷலா அலி) சந்திக்கும் சோரா அவனையும் தங்கள் குழுவில் இணைக்கிறாள்.

கடல்பயணமாக  ப வந்த ரூபன் டெல்காடோ ( மானுவேல் கார்ஷியா ரூல்ஃபோ) அவரது மூத்த மகள் , இளைய மகள் , மூத்த மகளின் காதலன் ஆகியோர் மொசாசரஸ் என்ற  ஒரு வகையான டைனோசாரால் தாக்கப்பட்டு தப்பி வருகின்றனர் . அவர்களும் தீவுக்குள். 

 மொசாசரஸ் , , டைட்டனோசரஸ், குவேட்சால்கோட்லஸ்  என்ற மூன்று வித ‘டைனோசார்’களிடம் இருந்து  ரத்த மாதிரி சேகரிக்கும் இவர்கள் முயற்சி என்ன ஆனது என்பதே படம் . 

மேலும் அதிக பிரம்மாண்டம் , மேலும் விதம் விதமான டைனோசார்கள் குறிப்பாக கடலைக் கலங்கடிக்கும் திமிங்கில டைனோசார்கள் இவை இந்தப் படத்தில்  புதுசு 

மற்றபடி அதே கதை  அதே காட்சிகள்.. 

கட்டிப் பிடித்து காதலிக்கும் பிரம்மாண்டமான சைவ டைனோசார்கள் , ஆளைத் தூக்கி கடித்து முழுங்கும் அசைவ டைனோசார்கள்,மனிதர்களை டைனோசர் வேகமாக துரத்திவர ஒரு சிறு சந்து வழியாக மனிதர்கள் தப்பிக்க அதற்குள் வர முடியாமல் டைனோசார்கள் பின் வாங்குவது , மேன் ஹோலை உடைத்து உள்ளே இறங்கி ஆட்களை கதற விடும் டைனோசார்கள்,அவற்றின் கொலை வெறிப் பார்வை , மனிதர்களுக்கு தெரியாமல் அவர்கள் பின்னால் ரகசியமாக மெதுவாக நடந்து வரும் அந்த பிரம்மாண்ட உருவங்கள் , சட்டென்று சிறகு விரித்து உதறி அதிர வைக்கும் பறக்கும் டைனோசார்கள் ,  சிறுமியிடம் விளையாடும் குட்டி டைனோசார்கள்  என்று அதே காட்சிகள் . 

கொஞ்சம் தண்ணீர் மட்டும் இந்த படத்தில் அதிகம் . 

ஆனால் அதே பிரம்மாண்டம், அதே பரபரப்பு, அதே அதிர்ச்சிகள் , அதே வாய் பிளப்பு இந்தப் படத்திலும் உண்டு . வழக்கம் போலவே அட்டகாசமான மேக்கிங் .

ஜான் மேத்தீசன் ஒளிப்பதிவு அலெக்சாண்டர் டெஸ்ப்லாட் அமைத்திருக்கும் இசை யாவும் பழசைய ஜுராசிக் படங்களைப் போலவே  இருக்கிறது . 

டைனாசார் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் போகலாம் . முன்பு கிடைத்த அதே அனுபவம் மீண்டும் கிடைக்கும். பெருசாக புதுசா எதிர்பார்த்தா ல் சில டைனோசார் உருவங்களை மட்டும் காட்டுவார்கள் . புதுசா எழுதவெல்லாம் மாட்டார்கள் .

மொத்தத்தில் ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் .. வளர்ச்சியோ  முன்னேற்றமோ இல்லை, பெரிய சைஸ் கலர் ஜெராக்ஸ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *