ஜியோ ஹாட் ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் நடிப்பில் வந்திருக்கும் படம்
அப்பாவுக்கு ( மிர்ச்சி சிவா) சென்னையில் அப்பார்ட்மென்ட் மற்றும் வேலை . அம்மாவுக்கு (கிரேஸ் ஆண்டனி) கோவை கோடிசியா வளாகத்தில் கண்காட்சியில் சொந்தமாக சின்ன ஒரு சேலைக் கடை .. வியாபாரம், வருமானம்
சென்னையில் அப்பாவோடு இருந்து படித்துக் கொண்டு அபார்ட்மென்ட்டில் செல்போன், டி வி , வீடியோ கேம், என்று கான்கிரீட் பெட்டிக்குள் புழுங்கித் தவிக்கும் ஒரு சிறுவனின் (மாஸ்டர் மிதுன் ரியான்) ‘விடுதலை’ வேட்கையே இயக்குனர் ராமின் பறந்து போ.
நீங்கள் கூண்டில் அடைக்கலாம். கட்டிப் போடலாம். ஏன் பிஸ்சா பர்கருக்குக் கூட பழக்கி விடலாம் . ஆனால் நினைவில் காடுள்ள மிருகம் என்று ஒரு வாக்கியப் படிமம் சொல்வார்கள் ஆனால் படத்தில் வரும் இந்த பயபுள்ள, என்னைப் போலவே மரபணுவிலேயே காடுள்ள மிருகம் .
விட்டு விடுதலையாகும் முயற்சியில் அவன் காட்டும் மூர்க்கம் , அதன் சாதக பாதகங்கள் அது எப்படி பெற்றோருக்கும் ஒரு பாடமாக அமைகிறது .. இவையே படம் .
ஒரு சிறிய தப்பித்தலாக, எதிர்பாராமல் அப்பாவுக்கும் மகனுக்கும் அமையும் இருசக்கர வாகன சாலைப் பயணம் ஒன்று அப்பாவின் பள்ளிக்காலத் தோழி ( அஞ்சலி) அவளது குடும்பம் ஆகியோருடனான சந்திப்பு..
பையனின் -பணக்கார நவ நாகரீக ஆனால் சென்சிபிளான குடும்பத்தில் பிறந்த பள்ளித் தோழியான சிறுமியுடனான சந்திப்பு …
அப்புறம் பையனின் அப்பா வழித் தாத்தா பாட்டி ஊருக்கான பயணம் , அங்கே குளிப்பாட்டிக் கொண்டே ஆளைக் குளிப்பாட்டும் விதமாக அப்பா அம்மா பற்றிய ரகசியங்களை கறக்கும் பாட்டி, , பணம் கேட்கும் அப்பாவுக்கு , பதிலாக டி வி சவுண்டை அதிகரிக்கும் தாத்தா என்று போக… கடைசியில் என்ன நடந்தது என்பதே பறந்து போ.
படம் துவங்கிய கொஞ்ச நேரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நகர்ந்த படம் கொஞ்சம் பயமுறுத்தியது உண்மை . ஆனால் அதெல்லாம் ஒரு breathing time என்பது போல அப்பாவின் பள்ளித் தோழி (அஞ்சலி) வந்ததும் பறக்க ஆரம்பிக்கிறது .
வளர்ந்து திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் முண்டு கட்டிக் கொண்டு குளத்தில் குளிக்கும் பள்ளித் தோழி , தன்வயது பள்ளி நண்பனை பலவருடங்கள் கழித்து பார்த்த அந்த நொடியில் சற்று பதறாமல் அப்படியே அதே நிலையில் இயல்பாகப் பேசுவது பால்யகால நட்பின் கவிதையாக ஜொலிக்கிறது .
சிறு வயதில் தங்களுக்குள் இருந்த பால்ய காதலை தனது கணவன் மகன் முன்னிலையில் சகஜமாக சொல்லும் அந்த கேரக்டர் அருமை. கணவன் கேரக்டர் சிறப்பு .
கிராமத்தில் ஹோட்டல் தொழிலில் தினசரி இந்த வருமானம் போதும் என்று வாழும் அவர்கள் வாழ்க்கை முறை , அவர்களின் மகனான ஒரு சிறுவன் இயற்கையுடன் இணைந்த வாழ்வை அசால்ட்டாக டீல் செய்யும் அழகு என்று அந்த ஏரியா அபாரம்.
அதற்காக மலை அடிவாரத்தில் தனியாகப் பேசிக் கொண்டு இருக்கும் அஞ்சலி மற்றும் சிவாவிடம் அந்த கணவர் கேரக்டர் “நான் கடைக்கு போறேன் . நீங்க இருந்து பேசிட்டு வாங்க ” என்று சொல்லி விட்டு எல்லாம் போவது எல்லாம் ஓவர் . அவர் இயல்பாக கிளம்பிப் போவதுதானே அழகு ராம்?
அதுவும் அவரை மலையாளத் தன்மையோடு காட்டுவதன் நோக்கம் குழப்பம் தருகிறது .
ரொம்ப நுட்பமான – அறிவாளிகளால் மட்டுமே சுமக்க முடிகிற கேரக்டர் அது . மேதமைத் தன்மையோடு நடித்திருக்கிறார் அஞ்சலி .
அது போல சிறுவனின் அம்மாவின் கோயம்புத்தூர் கடையில் வேலை செய்யும் அந்த எளிய இளம்பெண்ணின் கதாபாத்திர வடிவமைப்பு… எழுத்து அபாரம் . இந்த சீன் இதுவரை போகும் என்று நினைத்து முடிப்பதற்குள் இல்லை இல்லை தொடரும் என்று நாமாக முன்கூட்டியே யோசிக்க அதுவும் அப்படியே நடக்க, ரசிகனாக மட்டும் நின்று படம் பார்க்கையில் அந்த சந்தோஷத்தில் நாம் ரிலாக்ஸ் ஆக, அடுத்து ஒரு விஷயம் வரை அதை ராம் வளர்க்கிறாரே .. அதுதான் எழுத்தாளனுக்கான ஏரியா . சபாஷ் ராம்.
கிராமத்து சிறுவர்களின் வாழ்நிலை, அவர்களின் லக்ஸுரி இல்லாத நிலைமை என்பது அவர்களை பெரிதாக பாதிக்காவண்ணம் இருக்கும் சூழல், இவை மிக இயல்பாக காட்சிப்படுத்தப்படுகிறது .
இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் முற்றிலும் புதிய சிவா ( இதுக்கு முன்ன அவர் எங்கே எந்தக் கடையில் எந்த பாத்திரம் ஏற்றார் என்றெல்லாம் கேட்கக் கூடாது ) . தனக்கு உரிய நகைச்சுவை பாணியை முற்றிலுமாகக் கை விட்டு விடாமல் அதே நேரம் படத்தின் தனது கேரக்டரின் சீரியஸ் தன்மைக்குப் பழகி நம்மையும் பழக்கி பாராட்டுப் பெறுகிறார் சிவா . இந்தப் படம் அவருக்கு புதிய கதவுகளைத் திறக்கும் .
படம் முடிந்த பிறகு வந்த கிரேஸ் ஆன்டனியிடம் , “கேமரா பாட்டுக்கு கேமரா ஓடட்டும் . எங்க பாக்கணும் எங்க திரும்பனும் என்பது மட்டும் மைண்ட்ல இருந்தா போதும் . நாம பாட்டுக்கு நிதானமா நடிச்சா போதும் .அதானே கிரேஸ்?” என்றேன் எஸ் சார் . என்றார் . ஆரம்பத்தில் எந்த ஈர்ப்பையும் தராமல் போகப் போக நடிப்பால் அதற்கேற்ற எளிய உடல் மொழிகள் மூலம் கனம் ஏற்றிய நடிப்பு கிரேசினுடையது. கடைசியாக கொஞ்சம் ஓவராக நடிக்க வேண்டி வந்தது அல்லது அந்த பேட்டன் நடிப்பை எதிர்கொள்ள முடியாமல் திணறியது என்பது ஒரு துன்பியல் நிகழ்வே .
மிக முக்கியமாக குழந்தைகளுக்கான – ரைம்ஸ் தன்மை உடைய – சிறு சிறு பாடல்களை அற்புதமாகப் பாடி இருக்கிறார் நடிகர் சித்தார்த் மற்றும் விஜய் ஜேசுதாசும் .
ஏகாம்பரத்தின் ஓளிப்பதிவு இந்தப் படத்துக்கு சுவாசக்காற்று மாதிரி .
இந்தப் படத்தின் சூட்டுமக் கயிறே ஒளிப்பதிவில்தான் இருக்கிறது . அதை படத்தொகுப்பில் பயன்படுத்திய விதம் இன்னும் அபாரம் . குறிப்பாக அந்த குளத்தின் ட்ரோன் ஷாட்டை யாராக இருந்தாலும் காட்சியின் முதலில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு கடைசியில் போட்டதுதான் சரி . இப்படி படம் முழுக்க நடந்திருக்கிறது .
மண்டபத்தில் பார்த்த பெரியவர் , வாத்துக்காரர் மட்டுமல்லாது கோவை புறநகர் ஆட்டோக்காரர் வரை நல்லவராகவே காட்டுவது யதார்த்தம் மீறிய கவிதைதான் . ஆனாலும் கவிதை . பொதுப் பார்வையில் மனிதர்களை நம்புவோம் என்று சொல்வது தப்பில்லை.
ஒரு நிலையில் இது அது என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி படத்துடன் ஒன்றுகிறோம்.
குழந்தைகளின் பிடிவாதத்தை தேவைக்கு மேல் glorify செய்யும் ராமின் இயல்பு இதிலும் இருக்கிறது என்றாலும் தங்க மீன்கள் அளவுக்கு விபரீதமாக இல்லை என்பதால் பிரச்னை இல்லை.
நாலாயிரம் ரூபாய்க்கு ஷூ, நாலாயிரம் ரூபாய்க்கு ஓடும் வண்டி என்று ”எதை எடுத்தாலும் நாலாயிரம் ரூபாய் சார் ” கணக்காக பையனுக்கு பொருள் வாங்கித் தரும் அப்பா , ஒரு ஐயாயிரம் ரூபாய் பைக் இன்ஸ்டால்மென்ட்டுக்காக பயந்து பைக்கில் வீலிங் எல்லாம் செய்து பையனோடு தப்பிக்கிறார் என்பது எல்லாம் நியாயமா ? அந்த அப்பா அப்படித்தான் என்றால் மொதல்ல அந்த அப்பனைதான் சொத் சொத்துன்னு நாலு மிதி மிதிக்கணும்.
அதே போல வாருங்கள் கிராமத்துப் பக்கம்ன்னா அப்படியே ஸ்ட்ராங்கா முடிக்கணும் . அங்க சாதிப்பிரச்சனை இருக்குன்னு முனை மழுக்கக் கூடாது . என்னமோ நகரத்தில் ஜாதி உணர்வே இல்ல என்பது மாதிரி.
அதே மாதிரி இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமாக சொல்லி இருந்தால் வணிக ரீதியான வெற்றிக்கு இன்னும் பலம் சேர்த்து இருக்கும் என்ற வியாபார சிந்தனையையும் விட்டு விட முடியவில்லை. (நானா இருந்தா அப்படி கொஞ்சம் இறங்கி அடிச்சு இருப்பேன்)
ரோட்டில் ஒரு வைரக் கல் கிடக்கிறது . வைரம் தெரியாத ஒருவர் அதைக் கண்ணாடி என்று சொல்கிறார் ஒருவர் . காரணம் அவருக்கு அது வைரம் என்று தெரியவில்லை
அப்படித்தான் இந்தப் படமும் .
இந்தக் கட்டுரையை நான் கூகிள் ட்ரான்ஸ் லிட்டரேசனில் டைப் செய்யும்போது நான் வாத்துக்காரர் என்று டைப் செய்த உடன் உடனே கூகிளார் கீழே சிவப்பு அண்டர்லைன் போடுகிறார் . என்னவாம் என்று கிளிக்கினால் வாத்துக்காரரை கூகிளார் ஆத்துக்காரர் என்று எழுதச் சொல்லி கரெக்ஷன் சொல்கிறார் . சிரித்து விட்டேன் . கூகிளார் சொல்வதால் வாத்துக்காரர், ஆத்துக்காரர் ஆக முடியுமா?( ஆத்துக்காரின்னு சொல்லி இருந்தா கூட சந்தோஷமா இருந்திருக்கும்.) வாத்துக்காரர் வாத்துக்காரர்தான்
அதுபோல்தான் இந்தப் படமும் .
இரும்புச் சத்துக்காக போலிக் ஆசிட் மாத்திரையில் கர்ப்பம் தரித்த குழந்தைகளை அப்படியே டானிக் கொடுத்தே வளர்த்தால் அவர்களுக்கு முருங்கைக் கீரை கசக்கும் . மொத்த வைட்டமின் டியையும் மாத்திரை மூலமே ஏற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டவர்களுக்கு வெயில் என்றால் எரிச்சலாக இருக்கும் . பிரண்டை துவையல் நாக்கில் தட்டும்.
அதே போல இந்தப் படத்தை நீங்கள் உணர்ந்து ரசிக்க , உங்களுக்கு என்னைப் போல மரபணுவில் காடு இல்லாவிட்டாலும் கூட நினைவில் காடு இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் காடு என்றால் என்ன என்றாவது தெரியவாவது வேண்டும் .
No doubt .. மிட்டாய் IS FOR KIDS… ரோஜா IS FOR MEN . சூரியகாந்தி… IS FOR LEGENDS.
