ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராணா, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரியா பில்காவ்ன்கர் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் காடன் .
தனது தாத்தன் தகப்பனுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம், காடுகளாக தொடர்ந்து தக்க வைக்கப்படுவதற்காக அரசுக்கு அந்தக் காலத்தில் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்க, அங்கே லட்சக்கணக்கான மரங்களை நட்டு பெரும் அடர்வனமாக ஆகி இருக்கிறார் இளைஞர் காடன் ( ராணா).
அங்கே பற்பல கானுயிர்களும் வாழ்கின்றன . அப்படி வாழும் நூற்றுக்கணக்கான யானைகளோடும் மற்ற உயிர்களோடும் பழகியபடி காடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
ஒரு மத்திய அமைச்சர்,அந்த நிலத்தில் நீர் நிலைகள் உள்ள பகுதியை, கார்ப்பரேட் கம்பெனியோடு சேர்ந்து ஆக்கிரமித்து வணிக ரீதியிலான குடியிருப்புகள் கட்ட திட்டமிடுகிறார் .
நில உரிமையாளர்களின் உயில் படி அது சட்ட மீறல் என்பது ஒரு பக்கம் இருக்க, அந்த நிலத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக பெரிய மதில் சுவர் கட்ட, யானைகளின் காலகால வழித்தடம் அடைக்கப்படுகிறது .
அவை தண்ணீருக்கு அலைந்து வன மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய யானைகளுக்கும் அந்த மக்களுக்கும் பகை வருகிறது .
சம்மந்தப்பட்ட குடியிருப்புக் கட்டுமாணத்தை தடுக்க காடன் முயல , அவனுக்கு உதவுகிறார் மீடியா செய்தியாளர் பெண் ஒருவர்( ஷ்ரியா பில்காவ்ன்கர்).
அரசின் கொடூர செயல்பாட்டை எதிர்த்துப் போராடும் தீவிரவாதக் குழுவின் பிரதிநிதியாக ஒரு பெண் ( சோயா ஹுசைன்).
கட்டுமாணத்தை தகர்க்க வரும் யானைகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கும்கி யானையின் பாகனான இளைஞன் ஒருவன் ( விஷ்ணு விஷால்).
காடனைத் தீர்த்துக்கட்டி விட்டு நினைத்ததை முடிக்க, அமைச்சர் சகல அதிகார பலங்களையும் பயன்படுத்த, வேட்டை நாய்கள் போல, போலீஸ் மக்களை கொடுமைப்படுத்த , நடந்தது என்ன என்பதே காடன் .
அடர் காடுகள், வனாந்திரங்கள், பல்லுயிர்கள் , பிரம்மாண்ட தாவரங்கள் , மலை முகடுகள்,என்று படம் முழுக்க விரியும் லொக்கேஷன்களும் கானுயிர்களுமே இந்தப் படத்தின் முதன்மை நாயகர்கள் .
அடுத்து காடனாக வரும் ராணா.
பாகுபலியில் பல்வால் தேவனாக அதிரடி காட்டிய ராட்சஷ ராணா, இந்தப் படத்தில் பல்லிவால் தேவன் என்று சொல்லும் அளவுக்கு இளைத்து , ஓங்கு தாங்காக நடந்து காடனை கண் முன்னால் நிறுத்துகிறார் . நடை உடை பாவனைகளில் சில இடங்களில் பிதாமகன் விக்ரமை நினைவுபடுத்துகிறார்.
காசுக்காக கார்பரேட் சதிகளுக்கு தனது கும்கி யானையுடன் துணை போய், ஒரு நிலையில் காரியம் முடிந்த பிறகு அவர்களால் கைவிடப்பட்டு கையறு நிலைக்கு போகும் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் பொருத்தம்.
வனப் பகுதிப் போராளி கதாபாத்திரத்துக்கு முழுசாகப் பொருந்துகிறார் ஓங்குதாங்கான சோயா ஹுசைன் .
அட்வகேட் ஆக வரும் இயக்குனர் நடிகர் ஸ்ரீநாத் அசத்தலாக நடித்துள்ளார் . நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட்டும் அப்படியே.
மற்றவர்களும் படம் முழுக்க வரும் தெலுங்கு முகங்களும் ஒகே . (தமிழ் தெலுங்கு இந்தி மூன்று மொழிப்படம்)
ஒளிப்பதிவு ஒகே ரகம். இசை இசைந்து வரவில்லை .
‘காடுகளும் பூமியும் மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மற்ற உயிர்களுக்கும்தான் என்பதை இன்றைய தலைமுறை கேட்டுத் தொலைக்காது.
எனவே அடுத்த தலைமுறைகளான சிறுவர் சிறுமியின் பார்வைக்கு அதைக் கொண்டு செல்வோம்’ என்ற இயக்குனர் பிரபு சாலமனின் தொலைநோக்கு மிக உயரியது.
காடுகள் குறித்த அவரது விவரணைகளும் ஆழ் பார்வையும் கொண்டாட வைக்கிறது .
ஒர் இயக்குனராக அவரது உழைப்பும் படக் குழுவினரின் பணியும் பிரம்மிக்க வைக்கிறது.
ஆயினும் சொல்ல வந்த விசயத்துக்கு ஏற்ற அழுத்தமான பரபரப்பான திரைக்கதை அமையவில்லை . இளம் பெண் போராளியை கும்கி பாகன் காதலிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் சருகு.
பாகன் அவனது மாமன் என்ற பாத்திரப் படைப்புகள் கும்கி படத்தின் மிச்ச சொச்ச எச்சங்களாகவே இருக்கின்றன.
கும்கி தம்பி ராமையா போன்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த தெலுங்கு நடிகர் சம்மந்தப்பட்ட காட்சிகள் பலன் தரவில்லை.
யானைகளை வைத்துக் கொண்டு பூனை போன்ற திரைக்கதையைத் தந்துள்ளார்கள்.
எனினும் எடுத்துக் கொண்ட அடிப்படைக் கதையும் வியர்வை நதி பாயும் படமாக்கலும் பலே சொல்ல வைக்கின்றன .