2M சினிமாஸ் சார்பில் சபரீஷ் தயாரிக்க, ஷாம். ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார் , ஸ்ரீநாத், அமெரிக்க நடிகர்கள் ஜஸ்டின், லூக்கஸ் , ஜெனீபர் நடிக்க சாரதி எழுதி இயக்கி இருக்கும் படம் காவியன் .
காற்றாடிப் பட்டத்தில் கேமரா வைத்து குற்றவாளிகளை ரகசியமாக படம் பிடித்துக் கண்டு பிடித்து போட்டுத் தள்ளும் காவல் துறை அதிகாரியும் ( ஷாம்) சக அதிகாரி ஒருவரும் (ஸ்ரீநாத்) , அமெரிக்காவில் ஆபத்தில் உள்ளோருக்கு உதவி அவர்களை கொலைகாரர்களிடம் இருந்து மீட்கும் 911 சேவை குறித்த பயிற்சி பெற லாஸ்வேகாஸ் நகருக்கு போகிறார்கள் .
அங்கு 911 பணியில் ஆபத்தில் உள்ளோரிடம் இருந்து தகவல் பெறும் பணியில் உள்ள ஒரு பெண் ( ஸ்ரீதேவி குமார்) முன்பே சென்னையில் போலீஸ் அதிகாரிக்கு தெரிந்தவராக இருந்து , தவறான புரிதல் காரணமாக பிரிந்து போனவர் . லாஸ் வேகாசில் உள்ள உள்ளூர் போலீஸ் அதிகாரி (ஜஸ்டின்?) நம்ம ஊரு அதிகாரியை மட்டம் தட்டுவதோடு பணியில் இடையூறு செய்கிறார் .
இந்த நிலையில் அங்கு உள்ள ஈழத் தமிழ்ப் பெண் ஒருவரை ( ஆத்மியா) ஒரு சைக்கோ கொலைகாரன் (லூக்கஸ்?) கடத்துகிறான் . அவன் சைக்கோ ஆகக் காரணம் அவனது மனைவி ( ஜெனீபர்).
ஈழப் பெண்ணை மீட்க நம்ம ஊர் அதிகாரி களம் இறங்க அமெரிக்க அதிகாரி அவருக்கு இடையூறு செய்ய ஈழப் பெண்ணை மீட்க முடிந்ததா என்பதே படம் .ஈழப் பெண் என்ற உணர்வு பாராட்டுக்குரியது .
பெரும்பாலும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம் .
சைக்கோ ஆவதற்கு லாஜிக்கான காரணம் தேவை இல்லை என்ற இறுதி பஞ்ச் நைஸ் . சில காட்சிகளில் நேரடி ஆங்கிலப் படம் பார்க்கிற உணர்வு . பாராட்டுக்கள் சாரதி !ஆத்மியா மற்றும் வெள்ளைக்கார சைக்கோ நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள் . ஷாம் சண்டைக் காட்சிகளில் மட்டும் சிறப்பு . ஸ்ரீதேவி குமார் வித்தியாசமான முகத் தோற்றத்தால் கவனிக்கப்படுகிறார்
ஸ்டன்ட் சிவாவின் சண்டைக் காட்சிகள் ஆக்ரோஷம் .
அழுத்தமும் ஈர்ப்பும் இல்லாத திரைக்கதை, அதிக நேரத்துக்கும் நீளும் காட்சிகள் , செயற்கையான கதைப் போக்கு இவற்றால் கா விட வைக்கிறான் காவியன் .