தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் வடிவம் ஆதித்ய வர்மா. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஒளிப்பதிவாளர்ரவி.கே.சந்திரன் பேசுகையில், என் மகன் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது ” என்றதோடு . படக்குழுவை பாராட்டியவர், நாயகன் துருவ்வின் நடிப்பு குறித்து பேசும்போது, “சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம்” என்றார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், ”நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரை துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றி. இந்த பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றி” என்றார்
இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று. அது விக்ரம் ” என்றார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில்,” எஸ்ரா மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி . நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது,” என்றார் .
படத்தின் கதாநாயகி பனிதா, “விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி. துருவ்வின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.”
துருவ் தனது பேச்சில், ” எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.” என்றார்
இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்தார். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி தெரிவித்தார்.
தந்தை பற்றி பேசுகையில், “அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.” என்றார்.
மேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் , “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது” என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார். இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன். காரணம் துருவ். ” என்றார்.
