வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிக்க, சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேல் வெளியிட , வருண் , சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு நடிப்பில் முரட்டு சிங்கிள் எனப்படுகிற நட்டு தேவ்இயக்கி இருக்கும் படம் பப்பி .
பள்ளி கல்லூரி நாட்களில் பாலியல் விவகாரத்தில் வரம்பு மீறும் மாணவர்களைப் பார்த்து ஏங்குகிற — பயம் காரணமாகவோ அல்லது சூழல் காரணமாகவோ வாய்ப்பு அமையாத — மாணவர்களில் ஒருவன் ( வருண்) . தான் வளர்க்கும் நாயான பப்பி மீது மிகுந்த பாசம் கொண்டவன். அவனது சீனியர் நண்பன் ஒருவன் ( யோகிபாபு).
சீனியரின் உதவியோடு வரம்பு மீற முயல்கிற வாய்ப்புகள் தவற — ஒரு நிலையில் அவன் வீட்டு மாடியில் குடியேறும் ஒரு குடும்பத்தைச் பெண்ணோடு ( சம்யுக்தா) நட்பு காதல் என்று வந்து எல்லை மீறுகிறது .
பப்பியை ஆண் நாயோடு இணை சேர்க்க அது கர்ப்பம் ஆகிறது .
பெண்ணுக்கு நாள் தள்ள , கர்ப்பம் ஆகி விட்ட பயத்தில் டாக்டரை பார்க்கப் போன இடத்தில் , முறை தவறி கர்ப்பமாகி கருவைக் கலைத்த மற்றொரு பெண்ணை அந்த பெண்ணின் அம்மா திட்டுவது கண்டு , மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறாள் காதலி .
காதலன் திட்ட , எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவள் விலக, மனப் பிரிவு!
இந்த நிலையில் கர்ப்பமான பப்பி உயிராபத்துக்குப் போக, அதைக் காக்க துடிக்கும் நாயகன் அதன் வழியே புரிந்து கொள்ளும் விஷயம் என்ன? அதன் விளைவு என்ன என்பதே பப்பி .
ஆரம்பத்தில் விடலை இளைஞர்களை குறிவைத்து பலான விசயங்களை முன்னிறுத்தி காட்சிகள் நகர்கின்றன . அதில் நகைச்சுவையும் வருகிறது.
கடைசி வரை இது ஹரஹர மகாதேவகி பாணி படமோ என்று எண்ணும் போது , பாசம் , உயிர்ப்பு , சமதர்மம் என்று மடை மாற்றி படத்தைக் கொண்டு போகிறார் இயக்குனர் நட்டு தேவ்.
மேற்சொன்ன பலான விஷய காட்சிகளை விட அது போன்ற காட்சிகள் சிறப்பாக உள்ளன . குறிப்பாக கால்பந்தில் திறமை உள்ள யோகி பாபுவை கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் என்று பலரும் ஒதுக்குவதும் அதன் முடிவும் அருமை .
இது போன்ற காட்சிகளில் இயக்குனரின் படமாக்கல் திறமை நன்றாகவே வெளிபடுவதைப் பார்க்கும்போது , இவர் பலான விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது.
சற்றே மெச்சூரிட்டி இல்லாத நாயகன் கதாபாத்திரத்தில் குரல் நடிப்பிலும் அக்கறை செலுத்தி நடித்திருக்கிறார் வருண். சம்யுக்தா இயல்பாக இருக்கிறார் . யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். மாரிமுத்து , நித்யா ஒகே .
தரன்குமார் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன .
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும் ரிச்சியின் படத் தொகுப்பும் ஒகே
பப்பி … ஜொள்ளும் சொல்லும்
