ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நிதி அகர்வால், ஆரவ் மற்றும் பலர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் படம் .
கட்டுமானம், ஆலைத் தொழில் , வாகன உற்பத்தி என்று பல்வேறு தொழில்களை அகில இந்திய அளவில் அரசின் ஆதரவோடு செய்து வரும் வஜ்ரா என்ற நிறுவனம், குறைந்த எரிபொருள் பயன்பாடு என்ற சிறப்பம்சத்தோடு சாலையில் இறக்கிய புது வாகனத்தில், மக்களுக்கு ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தும் காற்று மாசு அதிகம் இருப்பதாகத் தெரிய வருகிறது .
இந்த விஷயம் தனது நிறுவனத்தின் ஆட்கள் மூலம்தான் வெளியே போயிருக்கிறது என்று நம்பும் வஜ்ரா அதிபர், அவர்களைக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்துகிறார் .
கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றி மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் உளவு சொல்கிற நபர்களைக் கண்டு பிடிப்பதில் வல்லவனான – அதற்காக போகிற போக்கில் கொடூர கொலைகளைக் கூட செய்யத் தயங்காத ஒரு கொடிய நபரை (ஆரவ்) நியமிக்கிறார் .
எந்த பாதகத்தையும் தயங்காமல் செய்து நூல் பிடித்தது போல விசாரணை செய்து வரும் அந்த நபர் , அதே வஜ்ரா நிறுவனத்தில் பணிபுரியும் புகழ் என்ற இளைஞன்தான் ( உதயநிதி) அதைச் செய்கிறான் என்பதை பல மிருகத்தனமான செயல்பாடுகள் மூலம் கண்டு பிடிக்கிறார் .
புகழுக்கு ஒரு காதலியும் ( நிதி அகர்வால்) உண்டு .
புகழ் ஏன் அதை செய்தான்? கொடூர கார்ப்பரேட் உளவாளி மற்றும் குழு புகழை நெருங்கிய பின் என்ன நடந்தது என்பதே கலகத் தலைவன்.
நிறைய கதாபாத்திரங்கள் அதன் வழியே மற்ற நடிக நடிகையருக்கும் நிறைய காட்சிகள்… இவற்றுக்கான இடம் கொடுத்து , புகழ் பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் உதயநிதி . அருமை. கதாபாத்திரத்துக்கு ஏற்ற பாதிக்கப்பட்ட ஒரு எளிய – ஆனால் அறிவான லட்சியம் தளராத இளைஞன் கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறார் . சில காட்சிகளில் அவர் பார்வை காட்சிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது .
அட்டகாசமான மேக்கிங் , சிறப்பான பிரேமிங் , மற்ற தொழில் நுட்பங்களை சரியாகப் பயன்படுத்துதல் என்று சிறப்பான இயக்கத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி . சுற்றுச் சூழல் சீர்கேடு பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிகளை சதிராட்டங்களை சொல்லும் கதையும் அருமை . வசனங்களிலும் ரசனை. கதாநாயகியை வில்லியை என்று பெண்களை ரசனையோடு படமாக்கி இருக்கிறார்.
தில்ராஜின் ஒளிப்பதிவு ஜொலிக்கிறது . வஜ்ரா நிறுவனக் கட்டிடத்தைக் காட்டும் முதல் ஷாட், , கண்ணாடிப் பிரதிபலிப்பைக் கொண்டு உருவாக்கி இருக்கும் ஷாட்கள் என்று பாராட்ட பல இடங்கள். அதிக மேக்கப் இல்லாமல் ஒளியின் மூலமே எல்லா நடிகர் நடிகையரையும் அழகாகக் காட்டி இருக்கிறார் . ஒரு காட்சியில் வீட்டுக்குள் இருக்கும் சுழல் மாடிப்படி தரையில் பிரதிபலிக்கும் காட்சி ஆகா ஓகோ… !
நிதி அகர்வால் இளமை. ஆரவ் மிரட்டல். கலையரசன் நெகிழ்வு.
இனிய பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அசத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த் . படத்துக்கு பரபரப்புக் கூட்டும் பின்னணி இசை துவக்கம் முதல் ரோலிங் டைட்டில் வரை ஆட்சி செய்கிறது.
கலை இயக்கம் , உடைகள் , லொக்கேஷன் எல்லாமும் அருமை .
நாயகனின் இவ்வளவு வலிகளும் இழப்புகளும் நிறைந்த தியாக மனம் கொண்ட போராட்டத்துக்கான அடிப்படைக் காரணத்தையும் வஜ்ரா நிறுவனம் செய்யும் செயலின் விளைவையும் விஷுவலாகவும் இந்தத் திரைக்கதையில் அழுத்தமாகக் காட்டி இருக்க வேண்டும். முக்கிய விஷயம் வசனத்திலேயே போகிறது. . என்றாலும்
வித்தியாசமான காட்சிகளோடு தொழில் நுட்ப மேட்டிமை நிறைந்த – இயக்குனரின் படமாக வந்திருக்கிறது கலகத் தலைவன்
