UAN பிலிம் ஹவுஸ் சார்பில் ராஜதாஸ் குரியாஸ் தயாரிக்க கதிர், ஆனந்தி, நரேன், நட்டி , பவித்ரா லக்ஷ்மி நடிப்பில் ஜாக் ஹாரிஸ் இயக்கி இருக்கும் படம் .
முதல் காட்சியில் அழுது கொண்டே ஒரு காரில் ஏறிக் காணமல் போன ஒரு பெண்ணை (கயல் ஆனந்தி) ஒரு பிரைவேட் டிடெக்டிவ், ஒரு தாதா அவனது டீம் உள்ளிட்ட பல பேர் (நரேன், நட்டி, கதிர், ஆத்மிகா) தேடுகிறார்கள் .
இடைவேளையில் மீண்டும் காட்சி கொடுக்கும் அவள் விபத்தில் சிக்கிய தன் கணவனை காப்பாற்ற பணம் வேண்டி, ஒரு பெரிய நடிகரின் ( ஜான் விஜய்) மனைவிக்காக பதிலித்தாயாக ஒரு டாக்டர் மூலம் ( வினோதினி) மாறியவள் என்பதும்,
வயிற்றில் குழந்தை வளரும் போது நடிகருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து அவர்கள் பிரிய, வயிற்றில் இருக்கும் குழந்தையை என்ன செய்வது என்று புரியாமல் பல சிக்கல்களுக்கு ஆளானவள் என்பதும் சொல்லப் படுகிறது .
அதன் காரணமாக சில கொலைகள் விழ அதற்குக் காரணம் யார் என்பதை எல்லோரும் யூகித்துக் கண்டு பிடிப்பதுதான் கதை .
முதல் பாதி முழுக்க யாரவது எந்த வீட்டுக்குள்ளாவது நுழைந்து ஆனந்தியின் புகைப்படத்தைக் காட்டி போட்டோவில் இருக்கும் இந்தப் பெண்ணைத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் . நமக்கே தெரியாதுப்பா தெரியாது என்று கத்தத் தோன்றுகிறது .இரண்டாம் பகுதியில்தான் மேட்டருக்கே வருகிறார்கள் . ஆனால் அதையும் கொத்திக் குதறி இருக்கிறார்கள் .
ஆனந்தி , கதிர் ஆகியோர் நன்றாக நடித்து உள்ளனர் .
நல்ல கதைதான் . ஆனால் திரைக்கதைதான் கொடுமை .
எனினும் பதிலித்தாய் விசயத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வுக்காக படத்தைப் பாராட்டலாம் .