அரவிந்த் ஆகாஷ், எம் எஸ் பாஸ்கர், விச்சு என்கிற விஸ்வநாத், யோகி பாபு, சாந்தினி , அஸ்வதி , கல்யாண், கௌதம் ஆகியோர் நடிக்க, எஸ் ஜி எஸ் கதைக்கு ராதா கிருஷ்ணன் வசனம் எழுத ,
திரைக்கதை எழுதி மேஜர் கௌதம் இயக்கி இருக்கும் படம் கண்ல காச காட்டப்பா. காட்றாங்களாப்பா? பார்க்கலாம் .
வீட்டுக்கொரு கழிப்பறை என்ற அரசாங்கத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் நூறு கோடி கொள்ளை அடிக்கும் ஓர் அமைச்சர்,
அதை மலேசியாவுக்கு ஹவாலா முறையில் அனுப்பி, அங்கே டாலராகப் பணத்தைப் பெற்று அதை அங்கே இருந்து கோலம்பியாவிலோ கொலராடோவிலோ பதுக்க நினைக்கிறார்.
அதற்காக நம்பிக்கையான ஆள் என்று ஜாக் (விச்சு) என்பவனை அனுப்புகிறார் . மலேசியாவில் பாதி கிழிச்ச டாலர் நோட்டு கொண்டு வருபவனிடம் ,
தன்னிடம் உள்ள கிழிச்ச டாலர் நோட்டு பொருந்தினால் பணம் கொடுக்கும் முறையில் முதல் இருபது கோடியை கொடுக்கிறார் அங்கு உள்ள நபர் (இயக்குனர் மேஜர் கவுதம்) .
நூறு கோடி ரூபாயை மாற்ற வந்திருப்பதை அறிந்த மூன்று கோஷ்டிகள் …
ஒன்று…. ஜாக்குக்கு தெரிந்த டான்சர் ஷாலு (சாந்தினி) , இன்னொன்று…. சின்னப் பையன் என்ற தாத்தா ( எம் எஸ் பாஸ்கர்), ஜெய் (நாயகன் அரவிந்த்), மது (அஷ்வதி),
மூன்று…… ஒரு டான் (டான்ஸ் மாஸ்டர் கல்யான்) மற்றும் அவனது அடியாள் கெட்டவன் (யோகி பாபு ) ….. ஆகியோர்அந்தப் பணத்தை அபகரிக்க முயல , அப்புறம் என்ன நடந்தது என்பதே கதை .
பெருந்தொகை பணத்துக்கான போட்டி என்பதில் வெகுஜன மக்களுக்கு உள்ள ஆர்வம், கொஞ்சம் காமெடி , கொஞ்சம் கிளாமர்
இவற்றை நம்பி படத்தை எடுத்துள்ளனர் .( ஆனால் நம்பும் அளவுக்கு நம்பிக்கையும் தரணுமே . ) g
ang theft என்ற ஆங்கிலப் படத்தின் உல்டா என்றும் சொல்கிறார்கள் . (இருக்கட்டும். அதை புல்ட்டா இல்லாமல் புல்லட்டா சொல்லணும்ல ….)
அரவிந்த் , சாந்தினி , அஸ்வதி ஆகியோர் ஆர்வமாக நடித்துள்ளனர் . ஓரிரு இடங்களில் மட்டும் காமெடி சிரிக்கும்படி இருக்கிறது .
“ஒரு நோட்டை கிழிச்சு கொடுத்தா இருபது கோடி தருவான்னா அந்த இருவது கோடியையும் கிழிச்சு கொடுத்த எவ்ளோ தருவான் ?” என்று யோகி பாபுவும் எம் எஸ் பாஸ்கரும் டிஸ்கஸ் செய்வது,
வயிறு குலுங்க வைக்கும் காமெடி . இதை விட்டால் சில இடங்களில் யோகி பாபுவால் புன்னகைக்கு மட்டுமே வாய்ப்பு .
ஓரிடத்தில் எம் எஸ் பாஸ்கரை பார்த்து வாய்யா சொட்டை என்று சொல்லப்பட , உடனே பாஸ்கர் “நான் சொட்டை இல்லை . வழுக்கை ” என்று சொல்கிறார் .
இது காமடியாம் . படம் பாக்கறவங்க சிரிக்கணுமாம் . என்ன பாஸ்கர் விளையாடறீங்களா ?
எனினும் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனம் வைக்காமல் படம் எடுத்துள்ள கவுதம் பாராட்டுக்குரியவர் . மேஜரின் பிள்ளை அல்லவா ?
படம் முழுக்க ஒரு low key தன்மை நிலவுவதை தவிர்த்து , இன்னும் கொஞ்சம் சீரியஸ்னஸ் இன்னும் கொஞ்சம் சிரிக்கும்படியான காமெடியை காட்டி இருந்தால்…..
கண்ல காச பாத்துருக்கலாம்