இளமி @ விமர்சனம்

ilami-3

யுவன் அனுகிருஷ்ணா, அகில் ,  கிஷோர் , ரவி மரியா  ஆகியோர் நடிக்க ,  

ஜூலியன் பிரகாஷ் என்பவர் ஜோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  தயாரித்து இருப்பதோடு,கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்  இளமி, 

இளமி என்றால் இளமையான பெண் என்று பொருள் .  இந்த இளமி ரசிக்கத் தகுந்தவளா பார்ப்போம் . 

மதுரை வட்டாரத்தில் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கிராமங்கள் . 

இரண்டு ஊருக்கும் பொதுவான தெய்வமான கருப்பசாமி  சிலையை ஒரு கிராமத்து ஆட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்துக் கொள்ள , அந்த விசயத்தில் இரண்டு ஊருக்கும் பிரச்னை . 

சாமியை வைத்து இருக்கும் ஊர்  தலைவர் வீரய்யனின்  (ரவி மரியா) மகள் இளமிக்கும் (அனு கிருஷ்ணா ) , சாமியை இழந்த ஊரில் உள்ள வேட்டைக்கார  இளைஞன் கருப்புக்கும் (யுவன்) காதல் . 

ilami-6

சாமியை இழந்த ஊரின் வில்லங்கமான இளைஞன் சடைப் புலி (அகில்) எப்படியாவது சாமியை தங்கள் ஊருக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதோடு ,கருப்பு காதலிக்கும் இளமிக்கும் குறி வைக்கிறான். 

இந்நிலையில் சாமியை  தூக்கிக் கொண்டு போன விசயம் சீரியஸ் ஆகிறது . 

வடம் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டில் யாராலும் அடக்க முடியாத காளை ஒன்றை வைத்து இருக்கும் வீரய்யன் , தனது காளையை அடக்கி விட்டால் சாமியை கொடுத்து விடுவதாக கூறுகிறான் .

சடை புலி வீரய்யனிடம் ” சாமியோடு உன் பெண்ணையும் தருவாயா ?” என்று கேட்க , வீரய்யன் சம்மதிக்கிறான் . ஜல்லிகட்டுக்கு  நாள் குறிக்கப் படுகிறது . 

மைதானத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்து விட்டு ஒரே நேரத்தில் பலரும்  தங்கள் கையில் சிக்கும் காளையை  அடக்குவது போலவோ ,

ilami-5

வாடி வாசல் வழியாக ஒவ்வொன்றாக வரும் மாட்டை பாய்ந்து சென்று அடக்குவது போலவோ…. வடம் ஜல்லிக்கட்டு சாதாரண விளையாட்டு அல்ல . 

ஒரு வலுவான வடக் கையிற்றை ஒரு பெரிய கல்லில் கட்டி மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள் . கயிற்றின் மறுமுனை காலையின் கழுத்தில் கட்டப் படும் .

கயிற்றையே ஆரமாகக் கொண்டு மாடு வட்ட வடிவில் ஓடிக் கொண்டு இருக்கும் . அந்த வட்டத்துக்குள் நுழைந்து காளையை அடக்க வேண்டும் .  வீரார்களுகாக இரண்டடி ஆரம் அதிகம் வைத்து, 

மேலே  ஒரு வட்டம் வரையப்படும். அந்த  வெளி வட்டத்துக்கு  வெளியே வந்து விட்டால் திரும்ப உள்ளே போகக் கூடாது . எனவே வட்டத்துக்கு வெளியே வராமல் மாட்டை அடக்க வேண்டும் 

ilami-9999

மிக ஆபத்தான  இந்த விளையாட்டில் சடை புலிக்கு பழக்கம் இருக்க , கருப்புவுக்கோ பழக்கம் இல்லை . 

இந்த நிலையில் வேட்டை இரவுகளில் மதுரை மன்னரின் அரச பிரதிநிதி ஒருவர் (கிஷோர்) கருப்புவுக்கும் அவனது நண்பர்களுக்கும் பழ்கக்கமாக,  

அவர் கருப்புவுக்கு வடம் ஜல்லிக்கட்டு நுணுக்கங்களை கற்றுத் தருகிறார்  

அதை வைத்து கருப்பு  காளையை அடக்க முயல , சடைப் புலியும் அதை அறிகிறான் . களத்தில் கடைசி நேரத்தில் சடை புலி வெல்கிறான் . காதலர்கள் தப்பிப் போக முயல ,

அவர்களை பிடிக்கும் சடை புலி அவர்கள் இருவரின் கை கால்களையும் வெட்டி எறிகிறான் . அவர்கள செத்துப் போகின்றனர் .

ilami-99

இந்த 2016 இல்  இப்போதைய காதலர்கள் அவர்களின் கோவிலுக்கு வந்து தங்கள் காதலை நிறைவேற்றித் தரும்படி வேண்ட , படம் முடிகிறது . 

(பொதுவாக விமர்சனத்தில் முழு கதையையும் முக்கிய திருப்பங்களையும் சொல்வது சரி இல்லைதான் . ஆனால் இந்தப் படத்தின் விமர்சனத்தில் சொல்வதற்கு இயக்குனரே காரணம் . அது இறுதியில் உங்களுக்கே புரியும் )

கல் மலைகளின் பின்னணியில் காட்டில்,  கிராமம் ஒன்றை செட் போட்டு மிக அட்டகாசமாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

 நவீன வாசனை எங்கும் படாத பின்புலங்கள் . மேல் சட்டையே இல்லாத ஆண்கள் . உடைகள் , அணி கலன்கள் யாவும் மிக அருமை . 

ilami-9

யுகாவின் ஒளிப்பதிவு மற்றும்   ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்த பாடல்கள் இனிமை . வசனத்தில் அக்கால மதுரை வட்டார வழக்கு அற்புதம் . சபாஷ் !

வெயிலில் மேல் சட்டை இல்லாமல் மிக கஷ்டப்பட்டு நடித்துள்ளனர் யுவன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும்.  

அணு கிருஷ்ணா , இளமி கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார் . நடிக நடிகையர் தேர்வும்  நடிப்பும் சிறப்பு . 

இவ்வளவு பார்த்தவர்கள் நடிகர்களின் சிகை அலங்காரத்தில் அலட்சியமாக கோட்டை விட்டுள்ளனர் . நடன அசைவுகள் , உடற் பயிற்சி  செய்வது போன்றவற்றில் நவீனத் தன்மை இருப்பது அபத்தம் . 

ilami-4

வட  ஜல்லிக்கட்டில் ஜெயிக்க , அரச பிரதி நிதி சொல்லும் உத்தி , அலெக்சாண்டரின் குதிரையை அடக்கும் உத்தி .  ஏங்க , உங்களுக்கு  எல்லாம் சொந்தமாக யோசிக்கவே தெரியாதா?. 

ஆனால் இது எல்லாம் கூடப் பரவாயில்லை . ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம் என்று , இந்தப் படக் குழுவினரால் அடையாளப்படுத்தப்படும் இந்தப் படம் ,

உண்மையில் ஜல்லிகட்டுக்கு குழி பறிக்க நினைக்கும் குள்ளநரிகளுக்கு உதவும் படமாகவே வந்துள்ளது . 

”ஜல்லிக்கட்டில் தோற்றுப் போன மாட்டை கொன்று விடுவார்கள் . அல்லது அந்த மனிதனைக் கொன்று விடுவார்கள் ” என்று பின்னணிக் குரலில் இயக்குனரே சொல்கிறார் .

அட பாதகரே ! ஜல்லிக்கட்டில் தோற்றுப் போன மாட்டை எப்போ யாரு கொன்னு இருக்காங்க . மேற்கத்திய  நாடுகளின் குதிரைப் பந்தயத்திலும்

ilami-7

செய்யப்படும் — செய்யப்பட்ட கொடுமை அது. அதை ஜல்லிக்கட்டோடு சம்மந்தப் படுத்திய அநியாயத்தை என்ன என்று சொல்ல ?

தவிர 1700களிலேயே ஜல்லிக் கட்டுக்கு முன்பு மாட்டை பட்டினி போட்டு கொடுமைப்படுத்துவார்கள் என்பது போன்ற ஒரு வசனம் .

இப்படியெல்லாம் முதுகில் குத்தி விட்டு கழுத்தறுத்து விட்டு இது ஜல்லிகட்டுக்கு ஆதரவான படம் என்றால் எப்படி ?

எம் ஜி ஆர் பானுமதி நடித்த மதுரை வீரன் படத்தில் கூட , கிளைமாக்சில் வீரனை (எம் ஜிஆர் ) மாறு கால் மாறு கை , (அதாவது ஒரு கால் , அதற்கு மறு பக்கம் ஒரு கை ) மட்டுமே வாங்குவார்கள் . 

ilami-8

ஆனால் இந்த இளமியில் நாயகனின் ரெண்டு கையையும் ரெண்டு  காலையும் வெட்டுகிறார்கள் . அது போதாது என்று நாயகியின் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளையும் கூட வெட்டுகிறான் வில்லன் . 

காரணம் , ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டி . 

இப்படி கதை சொல்லி ஒரு படம் எடுத்த்தால் என்ன அர்த்தம் ?

இந்தப் படத்தை விஷயம் தெரியாதவர்கள் பார்த்தால் , ‘இவ்வளவு காட்டுமிராண்டிதனத்துக்கும் காரணமாக இருக்கிற (து என்ற இந்தப் படத்தில் அநியாயமாக சொல்லப் படுகிற ) ஜல்லிக்கட்டை,

தடை செய்யாமல் விடவே கூடாது என்றுதான் சொல்வார்கள் . 

ilami-2

இப்படி பண்ணி விட்டு ,நாங்கள் இந்தப் படத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எடுத்துள்ளோம் என்று சொல்ல , என்ன ஒரு மன சாட்சி இல்லாத குணம் வேண்டும் !!!

நடந்திருக்கும் அநியாயத்தைப் பார்த்தால் , ஜல்லிக் கட்டை ஒழிக்க நினைக்கும் பீட்டா  உள்நாட்டு , வெளிநாட்டு  அமைப்புகள் இந்த படம் எடுக்க  காசு கொடுத்து இருப்பார்களோ என்ற நியாயமான சந்தேகம் வருகிறது . 

மொத்தத்தில் இளமி …. குடிகேடி! வஞ்சகி!! சூனியக்காரி!!! , கிராதகி!!!!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *