கட்டப்பாவ காணோம் @ விமர்சனம்

kattappa 4

விண்ட சிம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் என்பவர்  தயாரிக்க, சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் , சாந்தினி நடிப்பில்

 மணி செய்யோன் என்பவர் எழுதி இயக்கி  இருக்கும் படம் ‘கட்டப்பாவக் காணோம்’ .

ரசிகர்கள் காணலாமா ? பார்க்கலாம் .

பிரபல ஜோதிடரான தன அப்பாவால் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று சொல்லியே வளர்க்கப்படும் ஓர் இளைஞனுக்கு (சிபி) , பாரில் சரக்கு அடிக்க வந்த ஒரு பெண்ணோடு (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதல் .

குடும்பங்களை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்டு இருவரும் வேலைக்குப் போய் பொருளாதாரத்துக்காக போராட்டம் .

தன்னிடம் இருக்கும் வாஸ்து மீன்தான் தன் செழிப்புக்கு காரணம் என்று நம்பும் ஒரு ரவுடி (மைம் கோபி),  அதிர்ச்சி அடையும்படி, அந்த மீன் அவன் வீட்டில் இருந்து காணமல் போகிறது .

பல்வேறு கைகள் மாறி , கல்லூரித் தோழியின் (சாந்தினி) பரிசாக நாயகன் –  நாயகி வீட்டுக்கு வருகிறது .

kattapppa 3

இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஒருவனை அவர்கள் காப்பாற்ற முயல, அவன் நாலு கோடி ரூபாய் பணம் இருக்கும் இடத்தை குறுங் குறிப்புகளாக சொல்லி விட்டு சாகிறான்

அந்த பணம் சம்மந்தப்பட்ட ஒரு குழு  பணத்துக்காக வீட்டுக்குள்ளே வந்து கணவன் மனைவி இருவரையும் டார்ச்சர் செய்ய ,

அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .

அப்புறம் மட்டுமல்ல .. ஆரம்பம் முதலே உருப்படியாக ஒண்ணும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை .

சவ சவ காட்சிகள், சலிப்பூட்டும் திரைக்கதை , தொடர்போ இயல்போ இல்லாத செயற்கையான வசனங்கள் என்று படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலே படுத்து விடுகிறது

ஏதோ ஓர் இரண்டாம் கட்ட சபாவில் இருபது வருடம் முந்தைய மூன்றாம் தர டிராமா பார்ப்பது போல இருக்கிறது .

இடைவேளையிலேயே டீ அல்லது காபி கட்டாயம் ஆகிறது .

இதுதான் இப்படி என்றால் , இன்னொரு பக்கம் படம் முழுக்க வரும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் அநியாயம் . அதில் துளி கூட காமெடி இல்லை . அவர்கள் நோக்கமே ஆபாசம்தான் என்பது ஆகப் பெரிய அருவருப்பு .

kattappa 1

படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம் வருகிறது . (மனசை எல்லாம் கவரவில்லை என்றாலும்) அது தொடர்பாக பல காட்சிகள் வருகின்றன .

அப்படி உள்ள படத்தில் இவ்வளவு முகம் சுளிப்பான வசனங்களை படம் முழுக்க வைத்திருப்பதை என்ன சொல்லி திட்டுவது ?

அல்லது இப்படி படத்துக்கான டார்கெட் ஆடியன்சுக்கு எதிராகவே காட்சிகளை வைக்கும் மடமையை என்ன சொல்லி கிண்டல் செய்வது ?

ஒரு காட்சியில் மூன்று பேர் நாயகனை வீட்டுக்குள் நுழைந்து அடிப் பின்னி புரட்டி எடுப்பார்கள் .ரசிகர்களும் அந்த நாயகன் நிலையில்தான் இருக்கிறார்கள்  !

இரண்டு மணி நேரம் ஆறு நிமிட படம் முடிவதற்குள் இரண்டு வருஷம் போவது போல இருக்கிறது .

சிபி ராஜ் வழக்கம் போல நடிக்கிறார் .

kattappa 2

படத்தின் பாரட்டத்தக்குந்த ஒரே விஷயம் ஒளிப்பதிவுதான் . ஆனால் அவரே ஐஸ்வர்யா ராஜேசுக்கு ஆப்பு வைக்கிறார் . பல குளோசப்புகள் கொடுரம் . ஒளிப்பதிவும் மேக்கப்பும் சக்களத்தி சண்டை போடுகிறது . 

(ஸ்லீவ் லெஸ் டாப் , முழு முதுகு ஜாக்கெட் .. இதெல்லாம் நமக்கு செட் ஆகல ஐஸ்வர்யா ….!)

ஒரு மீனின் வழியே பல இடங்கள் பல கேரக்டர்களை சந்திக்கும் திரைக்கதை என்பது எப்பேர்ப்பட்ட அல்வாத்துண்டு சமாச்சாரம். பட்டையைக் கிளப்பி இருக்க வேணாமா ? இப்படியா மட்டையாக்குவது ?

படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் ஒரு ஹோட்டல் முதலாளி . ஒரு ரூமை கொடுத்து நல்ல திரைக்கதை பண்ண சொல்லி இருக்கலாமே ……

நாயிக்கு பேரு வச்சியே சோறு வச்சியா என்பார்கள் அல்லவா ? அது போல கட்டப்பாவ காணோம் என்று பெயர் வைப்பதில் காட்டிய ஆர்வத்தில் லட்சத்தில் ஒரு பங்கை கதை திரைக்கதை வசனத்தில் காட்டி இருக்கலாமே …..

மொத்தத்தில்

கட்டப்பாவ காணோம் … கதை, திரைக்கதை வசனம் , சுவை,  சுவாரஸ்யம், பொழுதுபோக்கு , ரசனை எதுவமே காணோம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *