ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, பாபி சிம்ஹா, நிக்கி கல்ரானி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் சரத் என்பவர் இயக்கி இருக்கும் படம் கோ 2 . படம் கோமகனா ? கோவலனா ? பார்க்கலாம்
சமூக அக்கறை உள்ள இளைஞன் குமரன் (பாபி சிம்ஹா) , முதலமைச்சரை (பிரகாஷ்ராஜ்) கடத்துகிறான் . அதற்கு உதவுவது,
ஒரு நல்ல அமைச்சரின் (ஜி.கே. வெங்கடேஷ் ) மகனும் பத்திரிக்கையாளனுமான ஒருவன் (பால சரவணன்) .
முதல்வரைக் குமரன் கடத்தக் காரணம் ?
தேர்தலில் தோற்றுப் போன மாநில உள்துறை அமைச்சர் (இளவரசு), பணத்தைக் கொடுத்து ஜெயிதததாகக் காட்டி விட, அதைத் தோண்டி எடுத்து உண்மையை நிலைநாட்ட முயல்கிறார் குமாரசாமி (நாசர்)
குமாரசாமி ?
சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சேவகரும் பலகோடி மதிப்புள்ள பங்களாவை அரசுக்கு எழுதிக் கொடுத்தவருமான நல்ல மனிதர் .
குமாரசாமியை உயிரோடு விட்டால் தனக்கு பிரச்னை என்று முடிவு செய்கிறார் உள்துறை அமைச்சர். எனவே குமாரசாமியையும் அவரது மாற்றுத் திறனாளி மகனையும் (கருணாகரன்) அநியாயமாகக் கொலை செய்கிறார் .
குமாரசாமியால் அனாதை இல்லத்தில் ஸ்பான்சர் செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட குமரன் , குமாரசாமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வரைக் கடத்துகிறான் .
குமரனின் நோக்கம் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே இந்தப் படம் .
சற்று அதிகமாகவே ரஜினி ஸ்டைலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா . நிக்கி கல்ரானி அல்ட்ரா மார்டன் பத்திரிக்கையாளராக காஸ்மாபாலிட்டன்தனம் காட்டுகிறார் .
அப்பாவி மாதிரி நடிக்கும் நண்பனாக பால சரவணன் .
உள்துறை மந்திரியாக யதார்த்தம் காட்ட முயல்கிறார் இளவரசு .
‘அமெரிக்காவில் பிறந்து ஐரோப்பாவில் பள்ளிப் படிப்பை முடித்து ஆஸ்திரேலியாவில் போலீஸ் டிரைனிங் எடுத்த’ போலிஸ் அதிகாரியாக ஜான் விஜய் !
இசை ஒளிப்பதிவு இரண்டும் ஒகே ரகம்
ஏடி எம் மில் வரும் கள்ள நோட்டுக்களால் பாதிக்கப்படும் பொது ஜனம்,
98 ரூபாய் 62 காசு, 47 ரூபாய் 36 காசு, 103 ரூபாய் 15 காசு போன்ற விலை நிர்ணயங்களால் வருடத்துக்கு மக்கள் ஏமாறும் 85 ஆயிரம் கோடி ரூபாயை,
அந்தந்த மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பினால் கிடைக்கும் பலன்கள்,
ஆறு குளங்களை ஆக்கிரமிப்பதால் மழை என்ற வரமே சாபமாகிப் போன கொடுமை,
இப்படி பல நல்ல விசயங்களை படத்தில் சொல்கிறார்கள். யோசிக்கவும் வைக்கிறார்கள்
மக்களின் சோம்பேறித்தனம் மற்றும் அயோக்கியத்தனத்தை அரசியல்வாதியின் பார்வையில் இருந்து கண்டிக்கும் சிந்தனைக்கு(ம்) ஒரு சபாஷ் .
ஆனால் அந்தக் காட்சியை முடிக்கும் விதத்தில் சமூக அக்கறை நேர்மை இல்லை.
ஒரு முதல்வர் கடததப்பட்டதற்கான சீரியஸ்னஸ், பரபரப்பு காட்சிகளில் இல்லை .
ஒரு முதல்வரைக் கடத்தி வைத்து கோரிக்கைகள் வைப்பதன் மூலம் நாட்டில் செய்ய முடிகிற நல்ல காரியங்கள் என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்க,
ஒரு குற்றவாளி அமைச்சருக்கு தண்டனை வாங்கித் தர முயல்வது என்று ஒற்றை விசயத்துக்கு மட்டும் அதைப் பயன்படுத்தும் வகையில், மிகவும் குறுகிப் போய்விடுகிறது திரைக்கதை
கதை, திரைக்கதை, வசனம் , காட்சி உருவாக்கம் என்று எல்லா வகையிலும் இன்னும் லட்சிய நோக்கமும் சமூக அக்கறையும் சமூக அரசியல் தெளிவும் நல்ல காட்சிகளும் ,
தெறிக்கும் வசனங்களும் பரபரப்பான படமாக்கமும் இருந்திருக்கலாம் .
சமூகத்தை பற்றி அக்கறையோடு பேசும் வகையில் பாராட்டுப் பெறுகிறது கோ 2