கல்சன் மூவீஸ் சார்பில் ராகவேஷ் என்பவர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் என்பவர் இயக்கி இருக்கும் படம் பென்சில் .
இந்தப் பென்சில் ரசிகனின் மனதில் நல்ல விதமாக எழுதுமா? பார்க்கலாம் .
ஐ எஸ் ஒ என்ற தர முத்திரையை பெறுவதன் மூலம், மார்க்கெட்டில் தங்கள் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டு, அதன் மூலம் இன்னும் அதிக ஃபீஸ் வாங்கத் துடிக்கிறது , தனியார் பள்ளி ஒன்று .
மிக நன்றாகப் படிப்பதன் மூலம் யுனெஸ்கோ அமைப்பின் பாராட்டுக்கு உள்ளாகும் மாணவன் ஒருவன் (ஜி வி பிரகாஷ் குமார் ) அந்தப் பள்ளியில் படிக்கிறான் .
அவனுக்கு புத்திசாலி மாணவியும் , கமிஷனரின் மகளுமான ஒரு பெண் (ஸ்ரீதிவ்யா) மீது காதல் .
அதே பள்ளியில் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகன் ஒருவனும் (ஷாரிக் ஹுசைன்) படிக்கிறான்.
அவன் சக மாணவிகளை காதல் என்ற பெயரில் மயக்கி பாலியல் ரீதியாக நாசம் செய்வது, ஆபாசமாகப் படம் பிடிப்பது போன்ற தவறான செயல்களைச் செய்கிறான் .
வாட்ச் மேனுடன் சண்டை போடுகிறான் . பலரையும் அடித்து பலரின் பகைக்கும் ஆளாகிறான் .
‘சூப்பர் ஸ்டாரின் மகன் தங்கள் பள்ளியில் படிப்பது பெருமை’ என்று கூறி, அவனை கண்டிக்காமல் கொஞ்சுகிறார் பிரின்சிபல் . கவனிக்காமல் இருக்கிறது பள்ளி நிர்வாகம் .
பள்ளியின் ஆசிரியர்களில் ஒரு காதல் ஜோடி (திருமுருகன் – சுஜா வாருணி) பாத்ரூமுக்குள் முத்தம் கொடுத்துக் கொள்வதை படம் எடுக்கும் சூப்பர் ஸ்டாரின் மகன்,
அதை வைத்து ஆசிரியையை மிரட்டி தனக்கு வேண்டிய மாணவர்களுக்கு முதல் மார்க் போட வைக்கிறான் .
நன்றாக படிக்கும் மாணவனுக்கு கம்மியாக மார்க் போட வைக்கிறான் .
அதன் உச்சமாக அந்த அறிவாளி மாணவன் யுனெஸ்கோ நிறுவனத்துக்கு சமர்பிக்க வைத்து இருந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எரிக்கிறான் .
அதன் காரணமாக இருவரும் பலரும் பார்க்க சண்டை போடுகிறார்கள் .
இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் மகனான அயோக்கிய மாணவன் வகுப்பறையில் கூரான பென்சிலால் குத்திக் கொலை செய்யப்படுகிறான் .
உண்மையான கொலைகாரனை கண்டு பிடிக்காவிட்டால் அந்தப் பழி நன்றாகப் படிக்கும் மாணவன் மேல் விழும் என்ற நிலை .
எனவே கொலை விசயம் மற்றவர்களுக்குத் தெரிவதற்கு முன்பு கொலைகாரனைக் கண்டு பிடிக்க ,
அந்த புத்திசாலி மாணவனும் அவன் காதலிக்கும் மாணவியும் முயல்கிறார்கள். யார் கொலைகாரன் என்பதே இந்த பென்சில்
2009 ஆண்டு வெளியான 4th Period Mystery என்ற கொரியப் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டு ( கொரியப் படம் பற்றிய முழு விவரங்களுக்கு :https://en.wikipedia.org/wiki/4th_Period_Mystery)…
‘தமிழ் நாட்டில் நம்ம படங்களை நிறைய திருடுறாங்கப்பா..’ என்ற கோபத்தில், கொரிய ஆட்கள் சென்னையைக் கவனிப்பதாக வந்த தகவலை நம்பி நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வேனல்ஸ் ஆகி ,
ரிலீசை தள்ளிப் போட்டுத் தள்ளிப் போட்டு , பிரச்னை ஏதும் இல்லை என்று ஒரு வழியாக கன்ஃபார்ம் செய்து கொண்ட பிறகு, இப்போது வெளிவந்து இருக்கும் படம் இது .
அப்புறம் என்னத்த விமர்சனம் எழுத …
பிரகாஷ்குமாரும் ஸ்ரீதிவ்யாவும் யூத்தாக ஃபிரஷ்ஷாக இருப்பதை பாராட்டலாம் . ரியாஸ்கான் மகன் ஷாரிக் ஹுசைன், அந்தக் கேரக்டர் மீது கோபம் ஏற்படுத்தும் அளவுக்கு நடித்து இருப்பதைப் பாராட்டலாம் .
ராஜீவனின் கலை இயக்கம் நைஸ் .
பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஒகே . பாடல்களுக்கான சூழல்கள் அழுத்தம் இல்லாமல் இருப்பதால் பாடல்கள் “சீக்கிரம் முடிங்கப்பா..” என்று கதற வைக்கிறது .
டீச்சர் கேரக்டருக்கு கவர்ச்சி நடனம் ஆடும் நடிகையான சுஜாவை போட்டு இருகிறார்கள். அவர் வேறு மாணவர்களுடன் சேர்ந்து இடுப்பை ஆட்டிக் குத்தாட்டம் வேறு போடுகிறார்.
எனவே அவருக்கு வரும் அவமானம் படம் பார்ப்பவரைப் பாதிக்கவில்லை .
பள்ளியில் நடக்கும் செயல்பாடுகள் எல்லாமே நம்ம ஊரோடு ஒட்டாமல் ரொம்ப அன்னியமாக இருக்கிறது .
பள்ளி மாணவர்கள் பற்றிய படத்தில் , அவர்கள் கல்விக்கு சகஜமாகப் பயன்படுத்தும் பொருளான பென்சிலை கொலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்திய கொடுமையைதான் மன்னிக்க முடியவில்லை .
இத்தனைக்கும் ஒரிஜினல் கொரியப் படத்தில் கூட , முத்தக் காட்சியே இருக்கும்போதும் கூட, கத்தியால் குத்தி கொலை செய்வது போலத்தான் காட்டுகிறார்கள்.
பென்சிலை கொலை ஆயுதமாகப் பயன்படுத்தி படம் எடுத்தால் அது மாணவர்களையும் அப்படியே செய்யத் தூண்டும்.
நம்ம படத்தைப் பார்த்து விட்டு எந்த மாணவனாவது பென்சிலை ஆயுதமாகப் பயன்படுத்தினால் அது சமுதாயத்துக்கு நல்லது இல்லை என்று கொரிய இயக்குனர் lee sang – yong யோசித்து இருக்கிறார்.
அதுதான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய நிஜமான சமூக அக்கறை
ஆனால் பென்சிலை எடுத்தவர்களுக்கு அது இல்லை .
ஓர் இனத்தையே அழித்த பினும் புலி என்ற வார்த்தை தமிழ் சினிமாவில் வந்து விட்டால் , துள்ளிக்குதித்து அதை கட் செய்யும் சென்சார் போர்டு,
இந்த பென்சில் படத்தைப் பார்க்கும்போது என்ன புல் பிடுங்கிக் கொண்டு இருந்தது என்று தெரியவில்லை .
4th Period Mystery முழு படத்தையும், பைசா செலவில்லாமல் பார்க்க https://www.youtube.com/watch?v=XkspfAW26Ps