நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சிங்கா, அனன்யா, ரோபோ ஷங்கர், எம் எஸ் பாஸ்கர் , மாரி முத்து, சிங்கமுத்து , போஸ் வெங்கட் நடிப்பில் ராஜா செல்வம் என்பவர் தயாரித்து இயக்கி இருக்கும் படம்.
கொடைக்கானலில் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் மீது (அனன்யா) இளைஞன் ஒருவனுக்கு (கார்த்திக் சிங்கா) காதல்.
பயன்படுத்தப்பட்டு இனி வேண்டாம் என எல்லோரும் நினைக்கும் பொருட்களை சேகரித்து இல்லாதவர்களுக்கு அதைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் அந்த இளைஞன் அநாதை இல்லத்தில் படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவுவதைப் பார்த்து , ஒரு நிலையில் அவளுக்கும் காதல் வருகிறது .
பெரும்பணம் கடன் கொடுப்பதாகச் சொல்லி அந்த பெருந்தொகைக்கு செக் வாங்கிக் கொண்டு , அந்த பெருந்தொகையின் கால் பங்கை முதலில் கொடுப்பதாகச சொல்லி , அதற்கான செயல்பாட்டுக் கட்டணம் என்று ஐந்து லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு , பணத்துக்குப் பதில் டம்மி பேப்பர்களைக் கொடுத்து போலி போலீசை வைத்து அதையும் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றும் ஒரு நபரால் (அஜய் ரத்னம்) பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
அனாதை இல்லத்துக்கு வரும் சொத்து விசயமாக , நாயகியின் உறவினரிடம் அந்த நபர் கைவரிசையைக் காட்ட நாயகன் களம் இறங்க … இதுதான் கொடை.
நாற்பது வருடத்துக்கு முன்பு எடுக்க வேண்டிய படத்தை முப்பது வருடத்துக்கு முன்பு எடுத்து அதை இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம் .
கார்த்திக் சிங்கா சிறப்பாக நடனம் ஆடுகிறார் . ஆனால் நடிப்பு ரொம்ப செயற்கை .
சுபாஷ்கவியின் இசையில் இயக்குனரே எழுதி இருக்கும் என்னா உன் கணக்கு பாடல் ஆறுதல்.
கதாநாயகியை விட பல காட்சிகளில் கதாநாயகியின் தோழியாக வருபவர் நன்றாக இருக்கிறார் . அட்லீஸ்ட் அந்த தோழிக்கு டல் மேக்கப் சாதாரண காஸ்டியூமாவது கொடுத்திருக்க வேண்டும் . அதையும் செய்யல.
முழுப்படத்தையும் கொடைக்கானலில் எடுத்தும் ஒரு காட்சி கூட, ஆகா என்று சொல்லும்படி இல்லை.
கதை , காட்சி அமைப்பு , வசனங்கள் , நடிப்பு எதுவும் ஈர்க்கும்படி இல்லை .
அட, புன்னகை அரசி கே ஆர் விஜயா!
சின்ன கதாபாத்திரம் . இயல்பான நடிப்பு. சற்றே தளர்ந்திருந்தாலும் அடையாளம் மாறாத அந்தக் குரல் . வணக்கம் மேடம். வாழ்க !!
உங்கள் ஜென்ம விரோதி பரம்பரை துரோகி யாராவது இருந்து அவர் முடியைப் பிய்த்துக் கொண்டு சட்டையை கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்க்க வேண்டும் என்றால்…
அவரை ரோபோ சங்கரிடம் பிடித்துக் கொடுத்து, ”பேசுங்க ரோபோ சங்கர்” என்று மட்டும் சொல்லி விடுங்கள். போதும். இந்த ஒரு விசயத்துக்கு ரோபோ சங்கர் என்ன தொகை கேட்டாலும் தயங்காமல் கொடுக்கலாம் . அதை விட பெஸ்ட் ஆப்ஷன் கிடைக்கவே கிடைக்காது.
”பேசாம இருடா .” என்ற ரெண்டு வார்த்தை டயலாக்கை ரோபோ சங்கரிடம் கொடுத்து, ”இதான் டயலாக் . சொல்லுங்க ரோபோ சங்கர்” என்று சொன்னால் கூட…
“டேய்… முட்டாப் பயலே. ஏண்டா பேசுற.. எதுக்குப் பேசுற .. சொல்லுடா .. பேசாம இருக்க மாட்டியா … நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்க… உனக்கு வாய் வலிக்காம இருக்கலாம் . ஆனா எனக்கு காது வலிக்குதுடா … பேசாம இருடா .. இப்படி ஓவரா பேசுனா பக்கத்துல இருக்கறவன் என்னடா ஆவறது? பேசமா இருடா.. உன்னால பல பேர் மென்டலா ஆயிட்டான் .. இன்னும் ஆவப் போறான் . பேசாம இருடா.. மெண்டல் ஹாஸ்பிட்டல் டாக்டர் வேற ஒரு வாரம் லீவு . அவரு மாமியார் மெண்டல் ஆயிருச்சாம் .அதுக்கு சிகிச்சை பாக்கப் போனவர் வர இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் …பேசமா இருடா … ஹலோ.. என்னது டாக்டருக்கு ஆக்சிடென்டா? பாத்தியாடா? அந்த டாக்டருக்கு வேற ஆக்சிடென்ட்டாம் . இனிமே உன்னால மென்டலா ஆகறவங்களுக்கு யாரை வச்சு ட்ரீட்மென்ட் பண்றது? பேசாம இருடா …. அடுத்த டாக்டர வேற உடனே அப்பாயின்ட் பண்ண மாட்டாங்க , பேசாம இருடா.. அரசுக்கு வேற நிதி நெருக்கடி.. அதனால …. ” என்று பேசிக் கொண்டே ஏ ஏ ஏ…
இருப்பார் போல.
ரோபோ சங்கர் என்ற பெயரை ஸ்பீக்கர் சங்கர் என்று மாற்றிக் கொள்ளலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மீன்வளர்ப்புக் குட்டையில் ஹீரோவும் அடியாட்களும் மோதுவார்கள். குட்டையில் உள்ள மீன்கள் திகைத்து சிதறி தறிகெட்டு துள்ளிக் குதித்து அலையும். அந்த மீன்களை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் சொத் சொத் என்று அடித்துக் கொள்(ல்)வார்கள்
படம் பார்ப்பவர்கள்தான் அந்த மீன்கள் .
