கொலை @ விமர்சனம்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பிரதீப், தனஞ்செயன், சித்தார்த் உள்ளிட்டோர்  தயாரிக்க விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங், ராதிகா , முரளி சர்மா, சித்தார்த், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், ஜான் விஜய், சம்கீத் போரா நடிப்பில் 

இதற்கு முன்பு விடியும் முன் என்ற காட்சி அனுபவப் படத்தை இயக்கிய பாலாஜி குமார்  எழுதி- அதை விடவும் சிறப்பாக  இயக்கி இருக்கும் படம். 
 
வழக்கமாக நாம் திரையரங்குகளில் பார்க்கும் சினிமாஸ்கோப் அளவீட்டில் இருந்து மாறுபட்ட புதிதான வித்தியாசமான புலன் விகிதத்தில் ( ASPECT RATIO) வெளிவந்துள்ள இந்தியாவின் முதல் திரைப்படம் இது . 
 
பாடகியாக இருக்கிற- அழகு காரணமாக மாடலின் துறைக்குள் இழுக்கப்படுகிற ஓர் இளம் பெண் (மீனாட்சி சவுத்ரி) கொல்லப்படுகிறாள். 
 
சம்மந்தப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி  (ஜான் விஜய்) யார் மேலாவது பழி போட்டு வழக்கை முடிக்க சொல்கிறார். ஆனால் உயர் அதிகாரி (ஆனந்த்) , மேற்படி கொலை விசாரணையில் இடம் பெறும் பெண் போலீஸ் அதிகாரியிடம் ( ரித்திகா சிங்) , புலன் விசாரணையில் மிகப் புகழ் பெற்ற ஒரு  நபரை ( விஜய் ஆண்டனி) இந்த வழக்குக்குள் கொண்டு வரச் சொல்கிறார். 
 
தனிப்பட்ட வாழ்வில் சில இழப்புகள், பின்னடைவுகள் , குற்ற உணர்ச்சி ஆகியவற்றோடு வாழும் அவர் ஆரம்பத்தில் மறுத்து ஒரு சூழலில் ஒத்துக் கொள்கிறார். 
 
பாடகியை யார் கொன்று  இருக்க முடியும் என்ற கேள்வி வளையத்தில் அவளது காதலன் (சித்தார்த் ஷங்கர்),  அவளை மாடலிங் துறைக்குள் இழுப்பதோடு தவறாக நடக்க முயலும் முகவர் (முரளி ஷர்மா), அவளின் வெளிச்சத்துக்கு காரணமான – கோபக்கார போட்டோகிராபர் ( அர்ஜுன் சிதம்பரம்) , மும்பையில் அவளுக்கு உதவி செய்த ஒருவன் ( கிஷோர் குமார்) , அவளது மன நலம் குன்றிய ஒரு டீன் ஏஜ் இளைஞனான நண்பன்  ( சம்கீத் போரா) ஆகியோர் வருகிறார்கள். 
கொலை செய்தது இவர்களா வேறு யாருமா என்ற கேள்விக்கான பதிலை ரெட்ரோ பாணியில் சொல்லும் படமே கொலை. 
 
சினிமா என்பது கதை கேட்கும் இடமாக இருந்து, அப்புறம் பார்க்கும் இடமாக மாறி, அப்புறம் உணரும் இடமாக மாறியது . அதற்கான நிகழ்வுகளின் நிமிடங்களை அந்த நிமிடங்களுக்கு இடையே உள்ளே நொடிகளை கூட தேவையான இடத்தில் விட்டு விடாமல் காட்சியால் விவரிக்கும் உத்தி, அதிலும் ஒரு தனித்துவம், அந்த தனித்துவமும் எந்த காட்சியிலும் தவறாமல் இருப்பது என்ற ஆழத்தில் பாலாஜி குமார் இயக்கி இருக்கும்  படம் இது .  விடியும் முன் , இப்போது  கொலை.. இந்தப் படங்களுக்குப் பிறகு தமிழில் பாலாஜி குமார் பாணி என்று ஒன்று உருவாகலாம் . வாழ்த்துகள். 
 
நடந்த ஒரு சம்பவத்தை பல்வேறு நபர்கள் தங்களுக்குத் தெரிந்ததை , அல்லது யூகிப்பதை, அல்லது தங்களுக்கு வசதியான முறையில் திரித்துச் சொல்ல.. அதில் இருந்து கதாபாத்திரமோ அல்லது ரசிகர்களோ உண்மையைப் பகுத்தோ அல்லது தங்களுக்குப் பிடித்த வகையிலோ உணர்ந்து கொள்ளும் அல்லது எடுத்துக் கொள்ளும் பாணி,  அகிரோ குரோசோவாவின் ராஷோமான் படம் மூலம் உருவானது . அப்படி வரும் படங்களை ராஷோமான் விளைவுப் படங்கள் என்கிறார்கள் .  (ஒரு சம்பவத்தின் முழு உண்மையை அறிய எல்லா செய்தித்தாள்களையுமோ அல்லது எல்லா தொலைக்காட்சிகளையுமோ படிக்க/ பார்க்க வேண்டி இருக்கிறதே … ஒரு வகையில் அது கூட ராஷோமான்   எஃபெக்ட்தான்) 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்து ,பீம் சிங் இயக்கி 1970 இல் வந்த பாதுகாப்பு படத்தை தமிழின் ( இந்தியாவின்?) முதல் ராஷோமான் பாணிப் படம் என்பார்கள். கமலின் விருமாண்டி கூட அந்த வகையறாதான். இந்த கொலை படத்தில் அதுவும உண்டு .
 
வெவ்வேறு கதாபாத்திரங்களின் வெவ்வேறு சரியான உடல் மொழிகளிலும்,  இயக்குனர் பார்வையில் உருவாகும் ஓர் ஒத்திசைவை இந்தப் படத்தில் பார்க்கலாம் . இப்படி  காட்சி அனுபவத்தில் ரசிகனை வேறு நீள, அகல, ஆழ , உயரங்களுக்குக் கொண்டு போகும் படம் இந்தக் கொலை . 
 
முற்றிலும் வித்தியாசமான சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் இதுவரை பார்க்காத தோற்றத்தில்,  அளக்கப்பட்ட நடை உடை பாவனைகள் மற்றும் உடல் மொழிகளில் விஜய் ஆண்டனி. ரித்திகா சிங் உட்பட நாம் மற்ற படங்களில் பார்த்த – இந்தப் படத்தில் இருக்கிற அனைத்து நடிகர்களிடமும்  ஓர் புதிய மாறுதலைப் பார்க்க முடிகிறது- ஜான் விஜய்யைத் தவிர . 
 
சிவகுமார் விஜயனின் உயிர்ப்பும் ஆழமும் கொண்ட ஒளிப்பதிவை,  இயக்கத்தில் இருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு செம்புலப் பெயல் நீராக இயக்கத்தோடு கலந்து விரிகிறது  . அற்புதம். 
 
புதிய பறவை படத்தில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை வேறு இசைக் கருவிகள் பயன்பாட்டில் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் . அதே நேரம் இந்தப் படத்தில் இந்தப் பாடல் தரும் உணர்வுக்கு இணையாக மற்ற பாடல்களிலும் தன்னை நிரூபித்துள்ளார் இசையமைப்பளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன்.  
 
பின்னணி இசையும் உணர்வின் அலையாகப் பாய்கிறது. சிறப்பு 
 
பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் துவக்கத்தில் வந்த அந்த ஹம்மிங் இந்தப் படம் முழுக்க தீம் மியூசிக் ஆக வருகிறது. எனில் பின்னணி இசையில்  விஸ்வநாதன் ராம மூர்த்தி பெயரும் வந்திருக்க வேண்டும் இல்லையா? (குறைந்த பட்சம் குறிப்பிட்டு இருக்கவாவது வேண்டாமா?)
 
படத்தின் அடிப்படைக் கதையை  விட , விஜய் ஆண்டனி கதாபாத்திரத்துக்கு இயக்குனர் வைத்திருக்கும் காட்சிகளும் அந்தக் கதைப்போக்கின் முடிவும் நெகிழ்வுக் கவிதையாக இருக்கிறது. 
 
உண்மையில் சிம்பாலிக் டைரக்ஷன் என்பது ஒரு மிகச் சிறந்த இலக்கியம். நம்ம ஊரில் பீம்சிங்கும் பாரதிராஜாவும் அதில் சிகரம் தொட்டவர்கள். பாசமலரிலும் கருத்தம்மாவிலும் மொத்தக் கதையின் பரிமாணத்தை  ஒரே ஷாட்டில் சொல்லி விட்டுப் போன மேதைகள் அவர்கள் 
 
ஆனால் மனிதனும் எந்திரமான பிறகு அதை childish style  என்று ஒதுக்கி விட்டார்கள் அறிவு சீவிகள் ( எழுத்துப் பிழை அல்ல) . ரொம்ப  நாளுக்குப் பிறகு கொலை படத்தில் ஒரு அற்புதமான சிம்பாலிக் ஷாட் வைத்திருப்பதோடு அதை தொழில் நுட்ப உத்தியோடு சேர்த்து அதையும் பொருத்தமாகப் பயன்படுத்திய விதத்தில் உள்ளம் கொள்ளை கொள்கிறார் இயக்குனர் பாலாஜி குமார் . 
 
பாலாஜி குமார்

தனது ஆசையில் அமைந்த பயணத்தால் தன் மகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான சம்பவத்தின் துவக்கத்தை , விஜய் ஆண்டனி கதாபாத்திரமே தன் கண் முன் நடப்பது போல  மீண்டும் உருவகித்து, ” போக வேண்டாம்”  என்று தன்னிடமும் தன் மகளிடமும் கெஞ்சுவதும் , இப்போது தான் கெஞ்சும் குரலின் பிரதிபலிப்பாக ,சம்பவம் நடந்த அன்று மரத்தில் இருந்து கத்தும் காக்கைகளின் கரைதலை உவமித்து இருப்பதும் , இயக்க உத்திகளின் புதிய விழி திறப்பாக சிகரம் தொடுகிறது . 

ஒரு படைப்பின் சிறப்பு என்பது எதைப் படைப்பது ..  எந்த ஊடகத்தில் சொல்கிறோம் என்பதற்கு ஏற்ப எப்படி படைப்பது … இவற்றின் இணைவில் பிணைவில் இருக்கிறது . 
 
எதைச் சொல்வது என்பதில் நான்கடி பாய்ந்து , எப்படிச் சொல்வது என்பதில் நானூறு அடி பாய்ந்திருக்கிறது கொலை 
 
வாழ்த்துகள் பாலாஜி குமார் & டீம். 
 
கொலை… ஒரு அற்புதமான,  திரையரங்கக் காட்சி அனுபவம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *