ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, அஸ்மின், ஆர் வி உதயகுமார், அனுமோகன் நடிப்பில் பொன் பார்த்திபனின் எழுத்தில் கே ஆர் வினோத் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
அடாவடி அமைச்சர் ஒருவர் . தனக்கு எதிரானவர்களிடம் இனிமையாகப் பேசுவது போலவே பேசி, அவர்களை குற்றவாளியாகச் சித்தரித்து சிறைக்கு அனுப்புவதில் வல்லவர் . அவரது மகன் கல்லூரியில் எல்லா ரவுடித்தனங்களையும் செய்பவன். தட்டிக் கேட்கும் பேராசிரியையே புடவை இழுத்து அவமானப்படுத்துபவன் ..
அமைச்சர் மகளும் அதே கல்லூரியில் படிக்கிறாள் . அவளுக்கு அண்ணனின் நடவடிக்கைகள் பிடிக்காது. ஆனால் அவனது நடவடிக்கைகளுக்கு காரணமே அமைச்சர் கொம்பு சீவி விடுவதுதான் என்பது அவளுக்குத் தெரியாது.
கல்லூரித் தேர்தலில் அமைச்சர் மகனுக்குப் பதிலாக வேறொரு நல்ல மாணவனை ஜெயிக்க வைக்க திட்டமிடுகிறார் பாதிக்கப்பட்ட பேராசிரியை.
அவருக்கு நண்பரும் சக விரிவுரையாளருமான ஒருவர் உதவுகிறார். அமைச்சர் மகனை வீழ்த்த – இது போன்ற சூழ்நிலைகளை முன்பே சமாளித்து ஜெயித்தவனான – தங்கள் கல்லூரி நண்பன் ஒருவனை வரவழைக்கின்றனர் . இவர்கள் எல்லோருமே முன்பு இதே கல்லூரியில் படித்தவர்கள்தான்.
அந்த சீனியர் மாணவன் கல்லூரிக்கு வந்து தற்போது தேர்தலில் நிற்கும் நல்ல மாணவனை ஜெயிக்க வைக்க செயல்படுகிறார் . அந்த சீனியர் மாணவர் மேல் அமைச்சர் மகளுக்கு காதல் வருகிறது.
அமைச்சர் மகனுக்கு ஆதரவாக வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் சீனியர் மாணவனைப் பார்த்து, ” உன் மேல் முன்பே இரண்டு கேஸ் இருக்கிறது . இன்னொரு கேஸ் வந்தால் நீ குறைந்தது பத்து வருடம் உள்ளே இருப்பாய்” என்று மிரட்டுகிறார்.
கல்லூரி தேர்தலில் நல்ல மாணவனை ஜெயிக்க வைக்கிறார் இந்த சீனியர் மாணவர்.
அமைச்சர் தனது மகளுக்கு தன் உறவில் ஒருவனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அந்த உறவினர் மாப்பிள்ளை பெண்கள் விஷயத்தில் மிக கொடூரமானவன். அவனுக்கும் சீனியர் மாணவருக்கும் முன்வே ஆகாது.
இந்த மோதலில் ஒரு விபரீதம் நடக்க, அதன் விளைவு என்பதே படம்.
படத்தில் முதலில் கவர்வது பொன் .பார்த்திபனின் எழுத்து.
தன்னைப் பார்க்க வந்தவனுக்கு சுவீட் பாக்ஸ் கொடுத்து அதன் மூலமே அவனை குற்றவாளியாக்கும் காட்சியே எழுத்தில் கவனிக்க வைக்கிறது.
இந்த இடத்தில் இப்படி கதை முடியும் என்று பார்த்தால் அதற்கு அடுத்து தொடரும். அதோடு முடியும் என்றால் அடுத்தும் தொடரும். இப்படி மூன்று நாங்கள முறை அடுத்தடுத்த வளர்ச்சி என்று திரைக்கதை தொடர்வது நல்ல உத்தி. இப்போதும் கூட படம்தான் முடிந்ததே தவிர கதை முடியவில்லை.
இறந்தவர்களை மெக்கானிக்கலாக நடக்க வைப்பது…. அதுவும் முடியாமல் போய்விட அடுத்து ஒன்று….. என்று நுணுக்கமாக காட்சிகள் போகின்றன. கைரேகை குறித்த விஷயங்களும் அருமை.
ஒரு கதாநாயகன் தயாரிப்பாளராகவும் இருந்தால் எடுத்துக் கொள்ள முடிந்த அத்தனை சலுகைகளையும் எடுத்துக் கொள்கிறார் லெனின்.
ஆனால் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. கேரக்டருக்கு என்னவோ அதை மட்டுமே செய்ய வேண்டும். (சிறை படத்தில் நடித்த அக்ஷய் குமார் உதாரணம்)
இன்வெஸ்டிகேஷன் போகும் சூழலில் அசந்தர்ப்பமாக சண்டைக் காட்சிகள் எல்லாம் வரக் காரணம், ஹீரோ லெனின் தயாரிப்பாளராகவும் இருப்பதால்தான்.
இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் . படம் தயாரிக்க எவ்வளவு முயற்சியும் உழைப்பும் போட்டு இருப்பார். நடிப்புக்கும் அந்த சிரத்தை இருக்க வேண்டும்.
கதாநாயகி அஷ்மின் இயல்பாக உற்சாகமாக நடிக்கிறார். ஆனால் அவர் நடந்து போவதை பின்னால் இருந்து காட்டும் காட்சியில் கொஞ்சம் மனசு வைத்திருக்கக் கூடாதா ஒளிப்பதிவாளரே?
ஆர் வி உதயகுமார் அரசியல்வாதியாக சற்று மெருகேறிய நடிப்பைக் கொடுத்த்திருக்கிறார் . அனுமோகனும் அப்படியே.
மற்றவர்கள் எல்லோரும் சொன்ன வசனத்தை பேசிப் போகிறார்கள்.
யாருங்க அந்த, அமைச்சர் மனைவி? மத்தவங்க நடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்கிறார்.
பொதுவில் கைலாஷ் மேனன் இசை, சதீஷ் மெய்யப்பன், லாரன்ஸ் கிஷோர் ஒளிப்பதிவு எல்லாம் ஜஸ்ட் ஓகே.
இன்றைய கல்லூரி மாணவர்கள் இன்றைய கல்லூரி ஆசிரியர்கள் , அன்றைய கல்லூரி மாணவன் அவன் மீது இன்றைய மாணவிக்கு வரும் காதல்,இவற்றை எல்லா ரசிகருக்கும் புரியும்படி காட்சிப் படுத்த இயக்குனர் தவறி இருக்கிறார்.
காட்சிகளுக்கு இடையேயான இணைப்பும் இயைபும் சரியாக இல்லாத காரணத்தால் காட்சிகள் துண்டு துண்டாக இருக்கின்றன.
இப்படி சில குறைகள் இருந்தாலும் பெரிதாக போர் அடிக்காமல் போகிறது என்பதே இந்தப் படத்துக்கு பலம்தான்.
மொத்தத்தில் ரெட் லேபிள்.. யெல்லோ சிக்னல்
