ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர் பி பாலா தயாரிக்க, கலையரசன், தீபா பாலு, கஜ ராஜ், ஆதவ் சந்திரா, விஜய் சத்யா, பால சரவணன், வி ஆர் துதிவாணன் இயக்கி இருக்கும் படம்.
அம்மன் சாமிகளில் ஒன்று நிறைசூலி . அதாவது கர்ப்பவதி நிலையில் வீற்றிருக்கும் தெய்வம். பெண்கள் கர்ப்பமான நிலையில் இந்த நிறைசூலி அம்மன்களுக்கு கோழி அறுத்து, பொங்கல் வைத்து கும்பிடுவது வழக்கம்.
அப்படி ஒரு புதுமணத் தம்பதி (கலையரசன் – தீபா பாலு), கணவனின் உறவுகளோடு நிறை சூலி கோவிலுக்கு கோழி அறுதது பொங்கல் வைக்க கிளம்புகிறார்கள்.
மிக அடர்ந்த காடு உள்ள பகுதி அது . பகலிலேயே பயம் கவ்வும். அந்த வழியே போன ஒரு சிறுமியை கரிய பெண் உருவம் ஒன்று வந்து மிரட்டி , அலறி ஓட வைத்த விஷயமும் ம காட்டப்படுகிறது.
தம்பதி கோவிலுக்குவரும் அதே நேரம் , ஒரு நடுத்தர வயது மனிதரும் ஒரு சிறுவனும் இறுகிய முகத்தோடு கிளம்பி வருகிறார்கள்.
முன்பே இன்னொரு குழு அங்கு வந்து குடித்து விட்டு சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறது.
இது வரை அந்தப் பகுதிக்கே வந்து சேராத அந்த கர்ப்பிணி மனைவி கோவிலைப் பார்த்ததும், ‘ நான் இங்கு முன்பே வந்தது போல இருக்கிறது’ என்கிறாள். அதுவரை காதல் கணவனை வாடா போடா என்று அழைத்துப் பேசுபவள், முதன் முதலில் மாமா என்று அழைக்கிறாள்.
அந்த கோழியை அறுக்கும்போது அவளுக்கு என்னவோ போல இருக்கிறது.
ஒரு வழியாக சாமி கும்பிட்டு விட்டு கிளம்பும் சூழலில் அந்த விபரிதம் நடக்கிறது. என்ன ? ஏன்? அதன் விளைவு என்ன என்பதே கொலை சேவல்
எழுத்தாளர் இமயம் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் பெயர் கொலைச் சேவல். ஒரு கிராமத்துப் பாட்டிக்கு நவீன வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் உணர்வுகளே இந்தப் படம்.
பண்ணையில் இருந்து நீக்கி, கொன்று சாப்பிடப்படும் தேவையற்ற அல்லது பலவீனமான சேவல்களுக்கும் கொலைச் சேவல் என்று பெயர் . சேவல்களை மட்டுமல்ல.. கோழிகளையும் அப்படி நீக்குவது உண்டு என்கிறது இந்தப் படம்.
படத்தின் மாபெரும் பலம் அந்த அடர்ந்த காடு மலை லொக்கேஷன்தான்.
ஜவ்வாது மலை அடிவாரத்தின் அந்த பிரம்மிப்பு, பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. எங்கே கேமரா வைத்தாலும் பொருத்தமாக அழகாக இருக்கும் அந்த சூழலை தனது அட்டகாசமான ஒளிப்பதிவால் தூக்கி நிறுத்துகிறார் பி ஜி முத்தையா. சாந்தனின் இசையும் அடுத்தபடியாக அசத்துகிறது.
கதாநாயகி தீபா பாலு கிராமத்துக் கதாநாயகி கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார். குடும்பப் பாங்கான அழகிய முகம், செண்டிமெண்ட் காட்சிகளுக்கு வலுவேற்றும் தோற்றம் . சிறப்பான நடிப்பு. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகி கிடைத்துள்ளார். வாழ்த்துகள் .
கலையரசன் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளார்.
பால சரவணன் எல்லா படங்களிலும் ஒரே கேரக்டரில் நடிக்கிறார். இதிலும் அதே பேச்சு அதே பார்வை.
செயற்கையான கட்டமைப்பு என்றாலும் அந்த முதிய தம்பதியின் காதல் சண்டை அருமை.
”இந்த அருவி கிட்ட கேமரா வை. நடிகர்களை கூப்பிடு. ஏதாவது எழுது. அதை படம் எடுத்துக்கோ. …
அந்த மரத்துக்கு கீழ நாலு கேரக்டரை உட்கார வை ஏதாவது பேசச் சொல்லு. அதை படம் எடுத்துக்கோ …”
என்ற ரீதியிலேயே காட்சிகள் நகர்வது கொடுமை.
பெண் வீட்டார் யாரும் கோவிலுக்கு வரவில்லை. என்பதும் நாயகியின் சொந்தக்காரத் தோழி ஒரு வருடம் கழித்து பேசுகிறாள் எனும்போதே கதை எல்லோருக்கும் புரிந்து விடும் . அது பெரிய சஸ்பென்ஸ் என்று படக்குழு நம்பி இருப்பதும்தான் பரிதாபம்.
எதற்கு பேய் வந்து சிறுமியை மிரட்டுது? புரியல.
இயக்குனர் சில விஷயங்களை ரொம்ப மென்மையாக ”புரிஞ்சா புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கலைன்னா போ” என்ற ரீதியில் சொல்லி விட்டுப் போகிறார் . ஏன் அதை வெளிப்படையாகவே சொல்லி எல்லோருக்கும் புரிய வைக்கலாமே.
உண்மையில் நிறை சூலி என்ற அம்மன், படத்தில் காட்டப்படும் சூழல்கள் இவற்றை வைத்து இரண்டு அட்டகாசமான திரைக்கதைகள் படம் பார்க்கும்போதே தோன்றுகிறது. உள்ளே அதற்கான விஷயம் இருக்கு, ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு வழக்கமான ஓட்டத்துக்குள் போய் விட்டது படம்.
சரி அதையாவது கிளைமாக்சில் வித்தியாசமாக , தெய்வத்தோடு சம்மந்தப்படுத்தி செய்தார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்படி ஒரு குரூரமான கிளைமாக்ஸ்.
நல்ல கதை அல்லது கரு இருந்தும் திரைக்கதை செய்யத் தெரியாத காரணத்தால்… சீக்கு வந்து செத்த கோழியாகி விட்டது கொலைச் சேவல்.
