லவ் ஓ லவ் @ விமர்சனம்

ஸினிமா  மீடியா அன்ட் என்டர்டைன்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் , கிரியேட்டிவ் என்டர்டைன்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்  சார்பில் தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்க, பவிஷ் , நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார்  , வனிதா விஜயகுமார் , ஐஸ்வர்யா, ரம்யா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

ஒரு, நடுத்தரக் குடும்பத் தம்பதிக்கு (கே எஸ் ரவிக்குமார் – ஐஸ்வர்யா) மகனாகப் பிறந்த – ஒரு தங்கை உள்ள இளைஞனுக்கு (பவிஷ்) – சிங்கிள் மதரால் (ரம்யா) வளர்க்கப்பட்ட ஓர்  இளம்பெண் (நாக துர்கா) மீது காதல். 
 
வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட அந்தக் காதலி , காதலனுக்கு அவன் பொருளாதாரத் தகுதிக்கு மேல் செலவு வைக்கிறாள்.   நினைத்த உடன்  லட்ச ரூபாய் பட்டுப்புடவை ,தங்க நகை , ஊட்டி பயணம் என்று போகிறது,
 
‘ எங்கே எப்படி என்ன வேலையில் இருந்தாலும் நான் அழைத்த உடன் நோ சொல்லாமல் உடனே வர வேண்டும்’ என்று எல்லாம்  அவனது நேரத்தை முழுக்க ஆக்கிரமிக்கிறாள்.
 
இடையில் காதலியின் அம்மா போலீசில் புகார் கொடுத்து அவன் குடும்பமே போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படுகிறது   அவன் வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை . கடன்காரர்கள் நெருக்குகிறார்கள்.அடி உதைக்கு ஆளாகிறான். அவன் குடும்பமே அவமானத்தில் சிக்கி,  ஊருக்குப் போய் விடுகிறது. 
 
ஒரு நிலையில் அவன் வேலையும் போய் விட, அப்போதும் காதலி செய்யும் டார்ச்சர் காரணமாக ஒரு நிலையில் அவன்  அவளை அறைந்து விட, விஷயம் மாதர் சங்கம் வரை போகிறது. மாதர் சங்கத் தலைவி (வனிதா) போலீஸ் ஸ்டேஷன் வரை (மீண்டும்) கொண்டு போகிறார் 
 
போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் (செல்வராகவன்) காதலன் ஒரு கோரிக்கை வைக்கிறான் .”கடந்த நான்கு வருடங்களாக  இவள் கேட்டதை எல்லாம் நான் எப்படி செய்தேனோ, அப்படி நான்கு மாதம் இவள்  எனக்கு செய்ய  வேண்டும். அப்படி  செய்ய முடியாமல் போனால் இனி என்னை எப்போதும் தொந்தரவு செய்யமாட்டேன் என்று L 3 (Love Leaving  Letter )  எழுதிக் கொடுத்து விட்டுப் போகவேண்டும்” என்கிறான் 
 
அவள் அதை ஏற்கிறாள் . அவன் தனக்கு  வேண்டும் என்று டாஸ்மாக்கில் சரக்கு  வாங்கித் தருவது வரை,அவள் போராடிப் போராடி செய்ய , அவனோ அவள் வேண்டாம் என்ற முடிவுக்கே போய்க் கொண்டு இருக்க, ஒரு நிலையில் நாயகியின் அம்மாவும் களத்தில்  குதிக்க , அவள் மனம் உடைய,  இந்தக் காதல் என்ன ஆனது என்பதே படம். 
 
பெண்கள் மேல் கொண்ட ஆசை அல்லது காதலால்,  அவர்களைக் கவர,  அவர்கள் விரும்பும் எல்லாமும் செய்து,  விட்டு உள்ளுக்குள் புலம்பி நொந்து நூலாகி ஒரு நிலையில் வெடிக்கும் — அல்லது வெடிக்க முடியாமல் விம்மும் இளைஞர்கள்…
 
அப்படி ஆண்கள் செய்வதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அப்புறம் குழம்பும் பெண்கள்….
 
 இவர்களை குறி  வைத்து எழுதப்பட்ட கதை திரைக்கதை . 
 
ஆரம்பத்தில் ஆண்கள் பக்கம் பேசுவது போல இருந்து பிறகு பெண்கள் பக்கம் பேசும் எழுத்து. ஒரு நிலையில் மனம் பற்றி பேசுகிறது . ஆனால் இன்னும் அழுத்தமாக பேசி இருக்க வேண்டும். எனினும் ஒருவர் தரப்பை மற்றொருவர் உணரும்படியான  காட்சிகள் அழுத்தம். 
 
காதலின் பெயரிலோ  பெண்ணாக இருப்பதன் வசதியைப் பயன்படுத்தியோ  கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் கவுரவத்துக்காக வீணாக்கப்படும்  உணவை,  ஒருவேளை உணவுக்கு கஷடப்படும் ஏழைக்கு குழந்தைகள் பக்கம் திரும்புவதும்,   அதை வாங்கிக் கொடுத்தவரின் உழைப்பை அந்தக் குழந்தைகள்  கவுரவப்படுத்துவதும் அற்புதமான காட்சி.
 
“வேலையும் சம்பாத்தியமும் பெண்களுக்கு உரிமை; ஆனா ஆணுக்கு அது கடமை . என்னால ரெண்டையும் உணர முடியும் ” என்று சொல்லும் கேரக்டர்,  யாராக இருக்கும் என்று உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால்,  உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள் 
 
‘ஆணும் பெண்ணும் சமம் என்று ஒரு ஆண் சொல்வதே ஆணாதிக்கம்தான்’  என வசனம்  சிகரம் ( ஆணை விட பெண் உயர்ந்தவள் என்பதோ  அல்லது குறைந்தபட்சம் பெண்ணும் ஆணும் சமம் என்ற வார்த்தை வரிசையில் வரும் சிந்தனையே சரியானது)
 
கலர்புல்லான ஒளிப்பதிவில் கவர்கிறார் பி ஜி முத்தையா. பின்னணியில் உற்சாகமூட்டும் இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன், பிரபல பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கும் பலம் சேர்க்கிறார்  மகேந்திரனின் கலை இயக்கமும் சிறப்பு. 
 
உற்சாகமாக ஆடி, இயல்பாக நடிக்கிறார் பவிஷ்.  சாதாரண முகப்பொலிவு, ஓகே சொல்லும்படியான  நடிப்பு  என்று இருந்தாலும்  ஹேண்டியான  உருவம் , அட்டகாசமான நடனம் இவற்றில் அசத்துகிறார் அக்கட தேசத்தில் புகழ் பெற்ற  சோஷியல் மீடியா செலிபிரிட்டியான  நாக துர்கா  . நடனத்தில் எல்லா ஸ்டெப்களையும் முழுமையாக ஆடுவது அழகு. கியூட். 
 
பிரபல டைரக்டர் என்ற இமேஜ் காரணமாக செல்வராகவன் இந்த கேரக்டருக்கு ஓகே ஆகிறார். 
 
கேரக்டருக்கு கொடுக்க வேண்டிய எரிச்சலை எடுத்த எடுப்பிலேயே கொடுக்கிறார் வனிதா. 
 
நாயகியின் அம்மாவாக ரம்யா , சிறப்பு. 
 
முதல் பகுதி  மிகவும் சாதாரணமாக கடக்கிறது. அங்கே விட்ட விஷயத்தை இழுத்துப் பிடிப்பதிலேயே இரண்டாம் பகுதி திரைக்கதைக்கும் – ஹீரோ போல ,கடன் அடைக்க வேண்டிய– ஒரு சுமை ஏற்படுகிறது.
 
நன்றாக எடுக்கப்பட்ட பாடல்களை குதறாமல் அப்படியே விட்டிருக்கலாம். வசன ஆளுமை கொண்ட விஷயத்தில் அது முக்கியம் அல்லவா?    அதான் படம் பூரா பேசுறோமே. பாடல் காட்சிகள் இடையிலும் அவற்றை  திணிக்க வேண்டுமா?
 
பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் சில வவிஷயங்கள் அழுத்தமாக அமையாமல் மேம்போக்காக போவதற்கு காரணமாகி விட்டது. 
 
“ஆண்கள் காதலித்து விட்டு அப்புறம் காதலை உதறினால் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்கள் அல்லவா? அதே போல பெண்கள் ஏமாற்றினால் ஆண்கள் புகார் செய்யக் கூடாதா /” என்றவாதத்தை அடிப்டையாகக் கொண்டு தனுஷ் நடித்த தேவதையைக் கண்டேன் படம் பெரு வெற்றி பெற்றது. 
 
அந்தப் படத்தில் இருந்த ஓர் உயிர்ப்பு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனாலும் முதலுக்கு மோசமில்லை. 
 
மொத்தத்தில் லவ் ஓ லவ் படத்துக்கு லவ் ‘லுக்’ விடலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *