பிரித்திவிராஜ் புரடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ் சார்பில் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாரன், பூ பார்வதி , ஹக்கீம் ஷாஜகான், அசோகன் , விஜயராகவன் , நடிப்பில் சமீர் அப்துல் எழுத்தில் நிஸாம் பஷீர் இயக்கி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் படம்.
ராஜீவன் – மீரா தம்பதிக்கு (பிருத்விராஜ் சுகுமாரன் — பூ பார்வதி) இரண்டு மகள்கள் . மீராவுக்கு வங்கி மேனேஜர் ஒருவரோடு கள்ளக் காதல் . அந்த மேனேஜரைக் கொலை செய்ய துப்பாக்கியோடு அவன் பணிபுரியும் வங்கிக்குப் போகிறான் ராஜீவன். அந்த நேரம் பார்த்து வங்கிக்கு கொள்ளையடிக்க வரும் சிலர் பணத்தைக் கொள்ளையடித்து ஏற்றும் நிலையில், ராஜீவனிடம் துப்பாக்கி இருப்பதை பார்த்து, அவன் போலீஸ் ஆள் என்று எண்ணி, அவனையும் கண்ணைக் கட்டி காரில் ஏற்றிக் கொண்டு போகின்றனர்.
ஒரு நிலையில் ராஜீவன் தப்பிக்க முயல, அந்தக் களேபரத்தில் நடந்த விபத்தில் கொள்ளையடித்த மூவரும் இறந்து விடுகின்றனர். ஆனால் அவர்கள் வண்டியில் ஏற்றிய பணம் எங்கேயும் இல்லை.
அந்த வங்கியில் கணக்கே இல்லாத ராஜீவன் அங்கே போனது ஏன் என்ற கேள்வி, போலீசுக்கு. சி சி டிவி மூலம் கொள்ளையர்களும் ராஜீவனும் பேசிக் கொண்டு இருப்பது… இவற்றை எல்லாம் வைத்து ராஜீவனும் கொள்ளையர்களில் ஒருவன் என்று சந்தேகிக்கிறது போலீஸ்.
மனைவியின் கள்ளக்காதலனை கொல்லப் போனதை போலீசிடம் சொல்ல முடியாமல் ராஜீவன் தவிக்க, மீராவே வந்து போலீசிடம் சொல்கிறாள்.
எனினும் பல கோடி ரூபாய் பணம் என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் ராஜீவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தாலும் பின் தொடர்கிறது.
லஞ்சம் காரணமாக கெட்ட பெயர் வாங்கிய ஒரு போலீஸ்காரரை (ஹக்கிம் ஷாஜகான்) இந்த வழக்கில் ஈடுபடச் செய்கிறது காவல்துறை.
செய்திகள் மூலம், மொத்த பணமும் ராஜீவனிடம் இருக்கிறது என்று மொத்த கேரளாவும் நம்புகிறது.
அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் ராஜீவனின் ஃபிளாட்டில் அந்தப் பணம் இருப்பதாக நம்பி திருட முயல்கிறார்கள். ராஜீவனுக்கு நன்கு தெரிந்த நபர் ஜேக்கப்பும் (அசோகன்) அவர்களில் ஒருவர். அவரது மகள் உடல்நிலை சரியில்லாமல் போக, சிகிச்சைக்கு எழுபது லட்சம் கடன் வாங்கி சிகிச்சை அளித்த நிலையில் மகள் இறந்து விட , அந்தக் கடனை அடைக்க ஜேக்கப்புக்கு எழுபது லட்சம் தேவைப்படுகிறது.
தவிர ராஜீவனின் மகள்கள் படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் ‘செலவுக்கு பணம் தராவிட்டால் மகள்களை சும்மா விட மாட்டோம்’ என்று ராஜீவனை மிரட்டுகிறார்கள். அவர் காரின் மீது ஆட்டோவை மோதி விட்டு, புது ஆட்டோ வாங்கித் தரச் சொல்லி அடிக்கிறார்கள்.
”அதான் அத்தனை கோடி வச்சிருக்கியே ; எனக்கும் கொடேன்”. என்ற ரீதியிலேயே எல்லோரும் அவனை டீல் செய்கிறார்கள்.
ஒரு நிலையில் பணம் யாரிடம் இருக்கிறது என்று தெரிய வருகிறது.
பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, தன் மகளை வைத்து ஒரு கடத்தல் நாடகத்தை ராஜீவன் அரங்கேற்ற , அதன் விளைவு கேரள முதல்வர் வரை போகிறது. நடந்தது என்ன என்பதே படம்.
நிறுத்தி நிதானமாக நகர்கிற நீண்ட படம்,
ராஜீவனின் குடும்ப சூழல், அவனை உலகம் பார்க்கும் பார்வை , கடன் அடைக்க போராடும் ஒருவர் பணம் திருட முயல்வது என்று நிறைய வித்தியாசமான வினோதமான சூழல்கள் சமீர் அப்துல் எழுத்தில் . சபாஷ் அப்துல்.
கணவன் மனைவிக்கு இடையேயான காட்சிகளை உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் நிஸாம் பஷீர். காட்சியமைப்புகளும் ஆழம் .
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். ஜேக்ஸ் பிஜாய் இசையும் அப்படியே .
அற்புதமாக நடித்துள்ளனர் பிரித்வியும் பார்வதியும்.
சற்றே இருண்மையான கேரக்டரில் கச்சிதமான நடித்துள்ளார் பூ பார்வதி. மனைவியை மன்னிக்கிறோமா தண்டிக்கிறோமா என்று தனக்கே புரியாத கேரக்டரில் பிரித்வி அழகாக பொருந்திப் போகிறார்.
மூத்த மகள் ஜியாவாக நடித்துள்ள நக்ஷத்ரா, அந்த குட்டி செல்லம் இருவரும் இரண்டு கவிதைகள்
முண்டியடித்து முன்னால் தெரியும் முகத்தோடு ஹக்கீம் ஷாஜகான் கவர்கிறார் . இயக்குனர் பாசிலின் ஜாடையில் இருக்கும் அசோகன் நல்ல நடிப்பு.
ஒரு தனி மனிதனின் பிரச்சனை எப்படி கொள்ளை , மக்களின் பண வெறி, கொள்ளையர்களை விட மோசமான அரசியல் கொள்ளையர்கள் என்று விரிந்து முடிகிறது.
ஒரு காட்சியில் பினராய் விஜயனை நேரில் போட்டோ காட்டி தாக்குகிறார்கள். சங்கிகளின் குத்து.
படத்தின் அதீத நீளம் பொறுமையை சோதிக்கிறது. எடிட்டர் ரமீஸ் இன்னும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்திருக்கலாம் .கொஞ்சம் வித்தியாசமான சூழல்களை படைத்தவர்கள் பின்பாதியில் இன்னும் யோசித்து இருக்கலாம்.
I, NOBODY…. ACTUALLY SOMEBODY