பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க,
சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ்காந்த் நடிக்க , அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாநகரம்’
மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
காதல்,குற்றங்கள், அடிதடி எல்லாம் கலந்து தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தது முன்னோட்டம்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “இது வரை மாநகரம் திரைப்படத்தை பார்த்த அனைவரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
படத்தை பார்த்த பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் வெளியிட்ட விமர்சனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
அவர் அதை வெளியிட்டதை தொடர்ந்து பிரபலங்கள் பலர் எங்கள் குழுவில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் மாநகரம் திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
நடிகர் ஸ்ரீ “மாநகரம் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கதை சார்ந்த முக்கிய விஷயங்களை வெளியே வந்து பிறரிடம் பகிர வேண்டாம்.
பாக்கறவங்களுக்கு சஸ்பென்ஸ் போய்டும் ” என்று வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்
சந்தீப் தன் பேச்சில் ” எனக்கு இங்கே உள்ள உண்மையான நண்பர்களில் மிகசிறந்த நண்பர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள்.
மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் தயாரிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டேன்.
நம்மிடம் பணம் இல்லையே எப்படி தயாரிக்க போகிறோம் என்று யோசித்து கொண்டு இருந்தபோது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறேன் என்று என்னிடம் கூறினார்
யாருடா மகேஷ் படத்தில் நான் ஹீரோவாக நடித்து அந்தப் படம் வந்து நான்கு வருடம் ஆகி விட்டது . நான் மூன்று மொழிகளில் நடித்தேன் .
தெலுங்கில் என் படங்கள் ஓடின . இந்தியும் ஒகே . ஆனால் என் முதல் தமிழ்ப் படமான் யாருடா மகேஷ் ஓடவில்லை .
எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன் , என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில்தான் உள்ளது.
என்னுடைய அம்மா , அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில்தான் இருக்கிறார்கள்.
நான் வேலை பார்ப்பதுதான் ஹைதராபாத்தில். நான் வயிற்றுக்காக தெலுங்கில் நடிக்கிறேன். மனசுக்காக தமிழில் நடிக்கிறேன் .
இந்தப் படத்தில் என்னோடு நடித்துள்ள ஸ்ரீ, நாயகி ரெஜினா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். ரெஜினாவோடு தெலுங்கில் மூன்று படம் நடித்து விட்டேன்.
ரெஜினா எங்கள் வீட்டில் ஒரு நபர் போல என் அம்மாவுடன் பழகுவார் சார்லி சாரோடு நடித்தது பெருமையான விஷயம்.
தமிழில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள மாநகரமும் , அடுத்து வரவிருக்கும் மாயவன் போன்ற படங்களும்,
நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும். நான் நேற்று தான் மாநகரம் படத்தை பார்த்தேன். படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியபோது
” காதலில் காத்திருப்பது மகிழ்ச்சியான தருணம் , சினிமாவில் காத்திருப்பது அப்படி அல்ல \இந்தப் படத்தை மார்ச் பத்தாம் தேதி திரைக்குக் கொண்டு வருகிறோம்.
மாநகரம் திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் மனதார பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். எப்போதும் எங்கள் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் மாநகரம் திரைப்படத்துக்கும் கொடுக்க வேண்டும்.
படத்தை அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசித்து பைரசியை ஒழிக்க உதவ வேண்டும். என்றார் .
படக் குழுவைப் பார்த்து ” சென்னை என்பது இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரம் . இதை உலகமே ஒத்துக் கொள்கிறது. ஆனால் தமிழ் சினிமாவில் சென்னை பற்றி வரும் படங்கள் எல்லாம்,
சென்னை என்றாலே வன்முறைக் கூடம் என்பது போலவே காட்டுகின்றன . இந்தப் படத்தின் முன்னோட்டமும் அதையே சொல்கிறது .
சென்னை என்றாலே வன்முறை என்ற மாயையை தோற்றுவிக்கும் ஆபத்தில் இந்தப் படமும் சிக்கிக் கொண்டதா?” என்று நான் கேட்டேன்
அதற்கு மிக திறந்த மனதோடு இயல்பாகப் பதில் சொன்ன தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ” உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு .
எனினும் வரும் கதைகளில் சிறந்த கதையைத்தான் படமாக எடுக்கிறோம்.. அதே நேரம் இந்தப் படம் எல்லாரையும் கவரும் ” என்றார்
நடிகர் சந்தீப் “இந்தப் படம் சென்னையை களங்கப் படுத்தும் படம் அல்ல. சென்னையின் பெருமையை பற்றி பேசும் படமாக இருக்கும்.
படம் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும் போது சென்னையை பற்றி நீங்கள் அனைவரும் பெருமையாக எண்ணுவீர்கள் என்பதுதான் உண்மை” என்றார்.
அப்படியே ஆகட்டும் !