அவரது மகன் அருண் சிதம்பரம் கதாநாயகனாக நடித்து , கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் கனவு வாரியம் .
கனவு வாரியம் வெற்றி வாரியமாக மாறுமா ? பார்க்கலாம்
இந்த ஆண்டும் விரைவில் வரலாம் என்று அஞ்சப்படுகிற அந்த கொடிய மின்வெட்டுதான் இந்தப் படத்தின் கதைக்களம் .
தமிழ்நாட்டின் ஒரு பின் தங்கிய கிராமம் . கிராமத்துப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் சுய சிந்தனையோடு இருக்கிறான் . மனப் பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை அவனுக்கு பிடிக்கவில்லை
எனவே எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் பள்ளிப் படிப்பு வேஸ்ட் என்ற முடிவுக்கு வருகிறான் . மகனின் சுய அறிவை உணரும் தந்தை (இளவரசு) அவனை ஆதரிக்கிறார் . தாய்க்கு (செந்தி குமாரி ) அதில் விருப்பம் இல்லை
சிறுவன் ஒரு ரேடியோ கடையில் சேர்ந்து ரேடியோ மெக்கானிசம் கற்க ஆரம்பித்து செல்போன் மெக்கானிசம் கற்று இளைஞனாகி (அருண் சிதம்பரம்) , பழுது நீக்கக் கடை வைத்து வாழ்கிறான் .
சென்னையில் ஐ டி நிறுவனம் ஒன்றில் மாதம் இரண்டு லட்ச ரூபாய் செலவில் இருக்கும் வேலையை விட்டு விட்டு , இயற்கை விவசாயம் செய்ய அந்த ஊருக்கு வருகிறார் , அந்த ஊர்க்காரர் ஒருவர் (யோக் ஜேப்பி )
அவரது தங்கை (ஜியா சங்கர்) மெக்கானிக்கை காதலிக்கிறாள்.
அதே ஊரில் சொந்தக் காசைப் போட்டு இலவச நூலகம் நடத்தும் வாத்தியார் ஒருவர் (பேராசிரியர் கு.ஞான சம்மந்தன்) நாயகனின் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறார் .
இந்த நிலையில் அந்த ஊர் இருபது மணி நேர மின்வெட்டில் சிக்குகிறது .
எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று தெரியாத நிலையில் விவசாயம் உடபட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகின்றன .
வருமானம் இல்லாததால் , மெக்கானிக் கடையில் வேலை இல்லை . கடனை கட்ட முடியவில்லை . இயற்கை விவசாயம் செய்ய வந்தவரும் பாதிக்கப்படுகிறார் .
நாயகனின் அப்பா மின்சார வாரிய அலுவலகத்துக்கு நடையாய் நடந்து ”எப்போது கரண்டு விடுவீங்க என்பதை ஒரு முறைப்படுத்துங்க . அதை முன்பே சொல்லுங்க ” என்று போராடியும்,
அரசு எந்திரம் , கரண்டே பார்க்காத கரண்ட் கம்பி போல சோம்பிக் கிடக்கிறது . அதிகாரிகளின் அலட்சியம் ஒரு பக்கம் .
நாயகன் பெரிய காற்றாடி நிறுவி சொந்த எந்திரவியல் அறிவில் அதில் இருந்து மின்சாரம் தயாரிக்க முயல்கிறான் ஊரே அவனை கிறுக்கன் என்கிறது .
இயற்கை விவசாயம் செய்ய வந்த ஐ டி நிறுவன அதிகாரியும் பலத்த இழப்புக்கு ஆளாகிறார் . ஒரு நிலையில் நாயகன் தெய்வக்குத்தம் செய்வதாக எண்ணி ஊரே அவனுக்கு எதிராக திரள்கிறது .
அப்புறம் நடந்தது என்ன ? நாயகன் மற்றும் இயற்கை விவசாயி இருவரின் முயற்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதே இந்த கனவு வாரியம்
திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்ற பெருமைகுறிய படம் இது . தவிர ஏழு உலகப் பட விருதுகளையும் பதினைந்து நாடுகளின் சினிமா விழாக்களில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது
இது மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வாங்கி வெளியிடும் முதல் தென்னிந்தியப் படமும் இதுதான்.
தொடர் மின்வெட்டு நாட்களில் மின்சாரம் என்பதே கனவு என்பதை உணர்த்தும் வகையில் மின்சார வாரியத்தயே கனவு வாரியம் என்று மாற்றி அதையே படத்துக்குப் பெயர் ஆக்கி இருக்கும் கிண்டல் ரசிக்கத் தகுந்தது .
திரை அரங்குகளில் தேசிய கீதம் போடுவதை மோடி அரசு கட்டாயம் ஆக்கி இருக்கும் நிலையில் , தமிழ்த்தாய் வாழ்த்து போட்டு படத்தைத் துவங்கும் அந்த மொழி, இன உணர்வுக்கு உவகை மிகுந்த பாராட்டுகள் !
சென்ற தலைமுறைவரை பள்ளிகளில் நடத்திக் காட்டப்பட்ட அறிவியல் விளையாட்டுகள்தான் மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்தி ,
சர் சி வி ராமன், அப்தில் கலாம் , சந்திர சேகர், மயிலசாமி அண்ணாதுரை , சிவன் போன்ற தமிழக விஞ்ஞானிகளை உருவாக்கியது .
அந்த அறிவியல் விளையாட்டுக்களை படம் பிடித்துக் காட்டி சுவாரசியம் ஊட்டுகிறார் இயக்குனர் அருண் சிதம்பரம்.
குழந்தைகள் பாடும் பாடல் ஒன்றில் இன்றைய தமிழ்க் குழந்தைகள் பலரும் அறியாத பல தமிழ்க் கலாச்சார விளையாட்டுக்களை பெயர் சொல்லி படம் பிடித்துக் காட்டுவது அருமை
படத்தின் மிகப் பெரும் பலம் வசனங்கள் . நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு பற்றி படத்தில் வரும் வசனங்கள் மிக சிறப்பு. அதோடு நகைச்சுவையிலும் விளையாடுகிறது வசனம் .
அறிவியலை உணர்வுகளோடு கலந்து சொல்லும் காட்சிகள் ஆக போட வைக்கிறது .
இறுதியில் சொல்லப்படும் ” இனிமே எல்லாம் சொந்தமா விவசாய நிலம் வச்சிருக்கறவன்தான் கோடீஸ்வரனா இருக்க முடியும் ” என்ற வசனம் மகுடம் .
குப்பைக்கு போன பழைய இரும்புகளை வைத்தே நாயகன் கரண்ட் தயாரிக்க முயலும்காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன .
நடிப்பில் அருண் சிதம்பரம் ஒகே . நாயகியும் அப்படியே
இயற்கை விவசாயியாக வரும் யோக் ஜேப்பி சிறப்பு . நாயகனின் அம்மா அப்பாவாக வரும் இளவரசு – செந்தி குமாரி , நண்பனாக வந்து அங்காங்கே சிரிக்க வைக்கும் பிளாக் பாண்டி ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் .
சில பல இடங்களில் நாயகன் நாயகி இருவரும் செயற்கையாக நடிப்பது , சில இடங்களில் வசனம் பேசும் முறையில் உள்ள செயற்கை ,
வளர்ச்சி இல்லாமல் சில சமயம் தேங்கி நிற்கும் திரைக்கதை ஆகியவை பலவீனம்.
திரைக்கதையும் படமாக்கலிலும் உள்ள செயற்கைத்தனம் படத்துக்கு வில்லனாக வருகிறது .நல்ல கதை . எனினும் புதிய சிந்தனைகளை சொல்லும் விதத்தில், இது தவற விடக் கூடாத படம் .
பள்ளி , கல்லூரி மற்றும் முதுகலை வகுப்பு மாணவர்கள் மட்டுமல்ல , ஆசிரியர்களும் , அரசு எந்திரமும் அவசியம் பார்க்க வேண்டிய படம் கனவு வாரியம் !