வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி, கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தோமஸ்,
வரலக்ஷ்மி, ரோபோ ஷங்கர், வினோத் நடிப்பில் பாலாஜி மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் மாரி 2. முத்துமாரியா ? கோமாரியா? பேசலாம் .
மாரி முதல் பாகத்தில் மாரி (தனுஷ்) கதாநாயகியை தேடி தேடி காதலித்தார் . இதில் அராத்து ஆனந்தி,
என்ற ஆட்டோ ஓட்டுனர் ( சாய் பல்லவி) மாரியை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் .

தவிர இதில் நெருங்கிய நண்பன் ஒருவன் ( கிருஷ்ணா )
மாரியும் நண்பனும் ரவுடித்தனம் செய்தாலும் போதைப் பொருள் கடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் .
காரணம் நண்பனே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி உயிராபத்து வரை போய் மீண்டதுதான் .
ஒரு பெண் பித்தன் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயல மாரி அதை தடுத்து அவளைக் காப்பாற்றுகிறான் . மாரி அடித்த அடியில் பெண் பித்தன் செத்துப் போக,

அவனது தம்பியான ஒரு போதை மாஃபியா தலைவன் ( டோவினோ தோமஸ்) மாரி மீது வஞ்சம் வைக்கிறான் .
மாரி காப்பாற்றிய பெண்ணின் தங்கைதான் ஆனந்தி . இதை சொல்லாமலே அவனை காதலிக்கிறாள் ஆனந்தி .
ஆனால் போதை மாஃபியா நபர், மாரியின் நண்பனின் ஆள் ஒருவனை கையில் போட்டுக் கொண்டு மாரி பெயரால் போதைப் பொருள் கடத்துகிறான் .
நமக்கு தெரியாமல் மாரி போதைப் பொருள் கடத்துவதாக நண்பன் சந்தேகிக்க , பகை வருகிறது .

நண்பனை போதை மாஃபியா தூண்டிவிட, மாரியையே கொல்ல முயல்கிறான் நண்பன் .
அந்த துப்பாக்கி குண்டை தான் வாங்கி மாரியை காப்பாற்றுகிறாள் ஆனந்தி . ஆனால் பக்கவாதம் வந்து நடக்க முடியாமல் போகிறது அவளுக்கு.
அவளை திருமணம் செய்து வாழும் மாரி ஒரு பேரிழப்புக்குப் பிறகு ஒரு பிள்ளைக்கு தந்தையாகிறான் .
அமைதியாக வாழ விரும்பும் மாரியை ஒரு பெண் அரசு அதிகாரியும் (வரலக்ஷ்மி சரத் குமார்),

போதை மாஃபியாவும் சேர்ந்து மீண்டும் பழைய வாழ்க்கைக்கு இழுக்க முயல, நடந்தது என்ன ? என்பதே மாரி.
முதல் பாகத்தைவிட இதில் இன்னும் கெத்து காட்டுகிறார் தனுஷ் .
அராத்து ஆனந்தியாக அசத்துகிறார் சாய் பல்லவி .
கிருஷ்ணா ஒகே .
ரோபோ சங்கரும் வினோத்தும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள் .
அந்த போதை மாஃபியா கேரக்டருக்கு உள்ளூரிலேயே பல உருப்படியான ஆட்கள் இருக்கே . எதுக்கு இந்த செங்கல் பார்சல் ?

“IF YOU ARE BAD , I AM UR DAD ” என்று ஒரு பஞ்ச் டயலாக் படத்தில் வருகிறது . ஆனால் இது கே ஜி எஃப் படத்திலும் வருகிறது . ஒரிஜினல் யாருதோ ?
கோலி சோடா என்ற பாடலில் பிரபுதேவாவின் அட்டகாசமான நடன இயக்கத்தில் தனுஷும் சாய் பல்லவியும்
பிரம்மாதமாக ஆடி பின்னிப் பெடல் எடுக்கிறார்கள் . வாவ் ! சூப்பர் ! எக்சலன்ட் ! அஸ்ஸ்ஸ்சத்தல் !
அட்டகாசமான மெட்டு . பிரம்மாதமான இசைக் கருவிகள் பயன்பாடு பாடலில் உடைகள் ,

கலை இயக்கம் யாவும் அருமை . ஒன்ஸ் மோர் கேட்டு ஓலமிடுகிறது மனசு .
இந்தப் படத்தின் ஒரே ஆகாகா விஷயம் அந்த பாடல்தான் .
யுவன் ஷங்கர் ராஜா இசையும் படம் முழுக்க சிறப்பு . இளையராஜாவும் ஒரு பாடல் பாடி இருக்கிறார் ( பாடல்கள் ‘பொயட்டு’ தனுஷ்)
ஓமபிரகாஷின் ஒளிப்பதிவு சில்வாவின் சண்டை இயக்கம் இவையும் சிறப்பு .