மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிபிரியன் விஷ்வா நடிப்பில் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கி இருக்கும் படம்.
விசாலமான பழமையான மேன்ஷன் ஒன்றில் வாழும் வயதான பிரம்மச்சாரி எழுத்தாளர் ஒருவருக்கும் ( சத்யராஜ்) அங்கு குடி இருக்கும் இளம்பெண்ணுக்கு கதைகள் பற்றிய உரையாடலின் தொடர்ச்சியாக ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தின் கதை சொல்லப்படுகிறது.
மகளையும் (ரோஷினி ஹரி பிரியன்) ) மகனையும் (விஷ்வா) நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக குப்பை அள்ளும் வேலை வரை செய்யத் தயங்காத ஆட்டோ ஓட்டுனத் தகப்பன் ( காளி வெங்கட்) , அவனுக்கு ஏற்ற அன்பான மனைவி (ஷெல்லி)) .
தவறான சகவாசத்தால் முரடனாக வளரும் மகன் அப்பாவை எதிரியாகப் பார்க்கிறான். மகள் காதலித்த நபர் தகப்பனுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னதால் மகளுக்கு அப்பா மேல் வருத்தம் .
‘தப்போ சரியோ அப்பா அப்பாதான்..’ என்று இந்தப் பிள்ளைகளால் புரிந்து கொள்ள முடிகிறதா? இது போன்ற எளிய குடும்பங்களின் மீது அரசியல், அதிகார வர்க்கம் , அட்வைஸ் என்ற பெயரில் சுய அரிப்பை சொரிந்து கொள்ளும் நபர்கள் …. இவர்களின் தாக்கம் என்ன என்பதே படம்.
எந்த அழுத்தமும் இல்லாத சாவகாசமான கதை சொல்லல் , அதனால் சில மென் புன்னகைகள், வழக்கமான் விசயங்களை வேறு கோணத்தில் பார்க்கும்போது ஏற்படும் மீச்சிறு சுவாரஸ்யங்கள் என்று ஜஸ்ட் லைக் தட் நகர்கிறது .
ஓரிடத்தில் குடும்பமோ உறவுகளோ நட்போ ஒன்றாக இருந்து மகிழ்ந்த நாட்கள் நம்மால் மறக்க முடியாது. ஆனால் கடைசியாக அப்படி எப்போது இருந்தோம் என்பது ஞாபகம் இருக்காது . ஆனால் அந்தக் கடைசி நிகழ்வு ஒரு ஆவணப்படுத்தப்படாத வரலாறாய் மீட்டெடுக்க முடியாத இலக்கியமாய் இருந்திருக்கும் என்ற ரீதியில் படத்தின் கிளைமாக்ஸ் சொல்லும் விசயம்தான் இந்தப் படத்தின் ஆக்சிஜன் .
ஆனால் ஆக்சிஜன் அளவு ஒட்டு மொத்த படத்தின் ஆரோக்கியத்துக்கும் போதுமானதா இல்லை என்பதுதான் பரிதாபம் .
இன்னொரு மகா எரிச்சல் .. படம் துவங்கிய கொஞ்ச நேரம் சத்யராஜ் கேமரா முன்னாள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார் . அப்புறம் பின்னணி குரலில் படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் பேசுகிறார் . அப்புறம் அது காட்சியாக வருகிறது . அப்புறம் ஒரு விஷயம் சொல்கிறார் . அதுவே காட்சியாக வருகிறது . எதாவது ஒண்ணு போதுமே? ரெண்டும் எதற்கு? அப்படி ஓர் அசதி தரும் எடிட்டிங் பேட்டர்ன் .
இந்தப் படத்தில் இவர் என்றால் பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் படம் முழுக்க பின்னணியில் பேசிக் கொண்டே இருக்கும் பவா செல்லத்துரை படம் முடியும்போது கேமரா முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் .
சினிமா என்பது கதா காலட்சேபமா? இல்லை வில்லுப் பாட்டா? அது திரை மொழி இல்லையா? இவ்வளவு நச நசவென்று பேசினால் அப்புறம் எதற்கு காட்சிகளை எடுக்க வேண்டும்? நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் . மொத்தக் கதையையும் சத்யராஜையோ பவா செல்லதுரையையோ பேச வைத்து ரெக்கார்ட் பண்ணி யூ டோயூபில் போட்டு விடலாமே ?
எல்லாம் காக்க காக்க படத்தில் கவுதம் மேனன் ஆரம்பித்து வைத்த வேலை . அதில் அவர் செய்ததில் ஒரு கவிதை இருந்தது . சுடப்பட்டு ரத்தம் தண்ணீரில் கலக்க மயங்கி ஆழத்துக்குள் போய்க் கொண்டிருக்கும் சூர்யா பேச ஆரம்பிக்கிறார் என்பது ஒரு விசுவல் மேஜிக் .
ஆனால் அதற்காக கண்ட கருமத்துக்கு எல்லாம் பின்னணியில் யாராவது பேசிக் கொண்டே இருந்தால் எப்படி?
உண்மையில் இப்போது எல்லாம் எந்தப் படத்திலாவது யாராவது மூன்று நிமிடத்துக்கு மேல் பின்னணிக் குரலில் பேசிக் கொண்டு இருந்தால் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது .
ஆக இந்தப் படத்தில் சத்யராஜ் இப்படி பின்னணியில் எண்டு கார்டுவரை பின்னணியில் பேசிக் கொண்டே இருப்பது ஒரு பிரச்னை என்றால் ( இதை எப்படி சத்யராஜ் ஒத்துக் கொண்டார் என்றே புரியவில்லை) ,
முழுமையான கடைசி நேர இருத்தல்கள் என்ற அந்த அற்புதமான விஷயத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறார்கள் . உண்மையில் அதன் பின்னர் துள்ளும் வால்களை எல்லாம் ஒட்ட நறுக்கி, அந்த வாலில் முக்கியமானவை என்று நினைக்கும் விசயங்களை அந்தக் நல்ல காட்சியிலேயே சொல்லி அதோடு இந்தப் படத்தை முடித்து இருந்தால் கூட இந்தப் படம் கொஞ்சம் கணம் ஏறி இருக்கும் . அதுவும் இல்லை. எப்படா படம் முடியும் என்ற ஏக்கமே வருகிறது
” A GOOD FILM IS MADE BETWEEN TABLES” என்பார்கள் . WRITING TABLE மற்றும் EDITING TABLE . இங்கே ரெண்டு டேபிளுமே உளுத்துப் போய்க் கிடைக்கிறது.
உதிரிப் பூக்கள் அஸ்வினியை நினைவு படுத்தும் ஷெல்லியும் , இயல்பாக நடிக்கிறேன் என்று காட்டிக் கொள்ளாமல் நிஜமாகவே இயல்பாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்ரியனும் , காமெடியில் முதன் முதலில் களம் இறங்கி சேதாரம் இல்லாமல் தப்பித்து வந்திருக்கும் கீதா கைலாசமும் இந்தப் படத்தின் பெயின் கில்லர்கள். பால சாரங்கனின் இசையும் ஆனந்தின் ஒளிப்பதிவும் பழுதில்லை.
இந்தப் படத்துக்கு மெட்ராஸ் மேட்னி என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று சொல்லும் நபருக்கு ஆயிரம் பொற்காசுகளை படக் குழு தரவேண்டும் .
மொத்தத்தில் மெட்ராஸ் மேட்னி …… ஷோ கேன்சல் ஆகவில்லை என்றால் சந்தோஷம்.