E5 என்டர்டைன்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்க, பாராட்டப்படும் சினிமா படைப்பாளிகளில் ஒருவரான தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் , ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா நடிப்பில் சிவ ஜெயப்பிரகாஷ் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
ரேணுகா தேவி அம்மனின் வழிபாட்டிற்குப் பின்னால் எப்படி, ” சாமியாவே இருந்தாலும் நீ பொட்டச்சிதான.. ” என்ற ஆணாதிக்க அடாவடி இருக்கிறதோ, அப்படி முத்தாலம்மன் வழிபாட்டின் பின்னால் சாமியே ஆனாலும் நீ கீழ்சாதி என்றால் கீழ் சாதிதான் ..” என்ற சாதியப் பெருமிதம் இருக்கிறது .
அப்படி முத்தாலம்மனைக் கும்பிடும் ஓர் ஊரில் மேல்சாதிப் பெண் ஒருத்தி தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் காதலிக்க,பையன் உடம்பில் பெட்ரோல் ஊற்றித் துள்ளத் துடிக்க எரித்து, அப்படி எரியும்போதே கட்டையால் அடித்து அடித்துக் கொல்கிறார்கள். பெண்ணின் காதில் விஷம் ஊற்றிக் கொல்லும் முயற்சியில் அவள் மன நோயாளியாகிறாள்.
அந்தக் காதலுக்கு உதவிய மகனை (விஜித் பச்சான்) , ஊரில் இருந்தால் பிரச்னை என்று கேரளாவுக்கு வேலைக்கு அனுப்புகிறாள் தாய் (சுபத்ரா) .
போன இடத்தில் அவளுக்கும் கேரளா கிறிஸ்தவ பெண் ஒருத்திக்கும் (ஷாலு) காதல் . இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்க, பெண்ணின் மலையாள உறவினர்கள் அதை தடுக்க நினைத்துத் தேட, பெண்ணோடு அவன் மீண்டும் தனது ஊருக்கு வந்து கல்யாணம் செய்து கொண்டு வாழ,
சாதிப் பிரச்னை இவர்களின் வாழ்விலும் தலை தூக்க, ஊர் சாதிப் பிரமுகர்கள் அவர்கள் வாழ்வை சீரழிக்க முயல, அதனால் பல விபரீதங்கள், பின்னர் இழப்புகள் நிகழ , சாதி வெறியர்களை நாயகன் சரி செய்ய முடியாத வகையில் பழிவாங்குகிறான் . அது என்ன அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
முத்தாலம்மன் கதையை படத்தில் சொன்னது , நாயகனின் சாதிப் பின்னணியை முதலில் ஒரு விதமாக உணர வைத்து , அப்புறம் கொஞ்சமும் உறுத்தாமல் திருப்பிப் போட்ட விதம்… முக்கியமான விபரீதக் காட்சியை ஒரு கனவு போல பாதியிலேயே கட் செய்து பிறகு அந்தக் காட்சியின் தொடர்ச்சி வரும்போது நிஜம் என்று உணர வைத்த விதம் , சில காட்சிகளில் அசத்தலான மேக்கிங் என்று இயக்குனரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு . சபாஷ்
ஜாதி உணர்வு என்பது பிறப்பால் வருவது இல்லை ; வளர்ப்பால் வருவது என்று சொல்லும் விதம் அருமை . இதுவரை சொல்லப்படாத கோணம் இயக்குனருக்கு மீண்டும் பாராட்டுகள்
விஜித் பச்சான் , தங்கர்பச்சானை விட சிறப்பாக நடிக்கிறார். ஒரு தகப்பனாக தங்கர் பெருமைப்பட வேண்டும் . சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் கூட சிக்சர் அடிக்கிறார் ஷாலு . நேரில் பார்ப்பதை விட கேமராவில் அழகாக இருப்பது இவரது பிளஸ் பாயின்ட்.
மைம் கோபி, அருள்தாஸ் , சுபத்ரா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் .
இளையராஜாவின் இசை , தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு எல்லாம் ஓகே ரகம்தான்,
படம் துவங்கியதில் இருந்தே பவா செல்லத்துரை படம் முழுக்க பின்னணி குரலில் படம் தொணதொண என்று பேசிக் கொண்டே இருக்கிறார். அப்புறம் படம் முடிந்து எல்லாரும் வீட்டுக்குப் போன பிறகு, ஓர் குழந்தைகள் இல்லத்தில் உட்கார்ந்து கேமரா பார்த்துப் பேசிக் கொண்டே இருக்கிறார். அதையும் நாலு பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் (படத்தில்தான்.)
இந்தப் படத்தில் இவர் என்றால் மெட்ராஸ் மேட்னி படத்தில் படம் துவங்கிய கொஞ்ச நேரம் சத்யராஜ் கேமரா முன்னால் உட்கார்ந்து பேசிக் கொண்டேஇருக்கிறார் . அப்புறம் பின்னணி குரலில் படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் பேசுகிறார் . அப்புறம் அது காட்சியாக வருகிறது . அப்புறம் ஒரு விஷயம் சொல்கிறார் . அதுவே காட்சியாக வருகிறது
சினிமா என்பது கதா காலட்சேபமா? இல்லை வில்லுப் பாட்டா? அது திரை மொழி இல்லையா?
இவ்வளவு நச நசவென்று பேசினால் அப்புறம் எதற்கு காட்சிகளை எடுக்க வேண்டும்? நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் . மொத்தக் கதையையும் சத்யராஜையோ பவா செல்லதுரையையோ பேச வைத்து ரெக்கார்ட் பண்ணி யூ டோயூபில் போட்டு விடலாமே ?
எல்லாம் காக்க காக்க படத்தில் கவுதம் மேனன் ஆரம்பித்து வைத்த வேலை . ஆனால்அதில் அவர் செய்ததில் ஒரு கவிதை இருந்தது . சுடப்பட்டு ரத்தம் தண்ணீரில் கலக்க மயங்கி ஆழத்துக்குள் போய்க் கொண்டிருக்கும் சூர்யா பேச ஆரம்பிக்கிறார் என்பது ஒரு விசுவல் மேஜிக் .
ஆனால் அதற்காக கண்ட கருமத்துக்கு எல்லாம் பின்னணியில் யாராவது பேசிக் கொண்டே இருந்தால் எப்படி?
உண்மையில் இப்போது எல்லாம் எந்தப் படத்திலாவது யாராவது மூன்று நிமிடத்துக்கு மேல் பின்னணிக் குரலில் பேசிக் கொண்டு இருந்தால் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது .
இது தவிர பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் பிரச்னை முழுக்க முழுக்க திரைக்கதையிலும் அப்புறம் படத் தொகுப்பிலும்தான் .
ஆரம்பத்தில் ஜெயிலில் இருக்கும் விஜித் , முத்தாலம்மன் வழிபடும் ஊரின் ஜாதிக் கொடுமை , ஜெயிலில் இருந்து தப்பிப்பது. கிளைமாக்ஸ் விசயத்துக்கு தேவையான ஒரு அவுட் ஆப் ஃபோகஸ் ஷாட் , அப்புறம் சைலன்ட் ஷாட்டில் பேசிக் கொள்ளும் போலீஸ் அதிகாரிகள், போலீசிடம் பேசும் சில நபர்கள், ”நாம அவனை கைது செய்ய முடியாது ; அவன் எப்ப கைதாகனும் என்று அவன்தான் முடிவு செய்வான்” போன்ற வசனங்கள் எல்லாம் சேர்ந்து….
அடுத்தடுத்து நாயகன் , எதிர்தரப்பு, இவர்களின் போட்டா போட்டி காட்டா குஸ்தி சுவாரஸ்யங்களுடன் படம் போகும் போல என்று நம்ப வைத்து விட்டு ,
மாறாக கேரளா போய் ஸ்வீட் நத்திங்ஸ் காட்சிகள், அப்புறம் ‘ஒன்லி நத்திங் நோ ஸ்வீட்’ காட்சிகள்….. இவற்றோடு மொத்தை மொத்தையாய் பிளாஷ்பேக் சொல்லி எதிர்பார்ப்பை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.
ஆரம்பத்திலேயே ஆற அமரச் சொல்ல வேண்டிய முத்தாலம்மன் கதையை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் சூடான முட்டை போண்டாவை வாயில் போட்டு மெல்லாமல் அவசர அவசரமாக ஊதி ஊதி விழுங்குவது போல ஓவர் லாப்பில் சொல்கிறார்கள் .
எதை நிறுத்தி நிதானமாகச் சொல்ல வேண்டும் எதை வேகமாகச் சொல்ல வேண்டும் என்ற தெளிவு இல்லை.
என்ன செய்து இருக்க வேண்டும் ?
ஆரம்பத்தில் காட்சிகளாகவே பூடகமாக ஆனால் அழுத்தமாக முத்தாலம்மன் கதையைச் சொல்லி அப்புறம் அந்த முதல் காதல் ஜோடி கொல்லப்படுவதை மட்டும் சொல்லி, போலீஸ் விசாரணையை எல்லாம் தூக்கி எறிந்து வ விட்டு..
நாயகன் கேரளா போவது, காதல், அதில் அங்கே வரும் பிரச்னையை சொல்லி, தான் காதலித்த பெண்ணை தன் ஊருக்கே அவன் அழைத்து வந்தான் என்று சொல்லி இருந்தால்/..
படம் பார்ப்பவருக்கு பேரதிர்ச்சி. இன்டர்வல்.
அப்புறம் மற்ற விசயங்கள் என்று சொல்லி இருந்தால் இன்னும் சுவாரசியம் வந்து இருக்கும்.
அப்போதும் கூட, எல்லாம் தெரிந்த அவன் எப்படி அவளை சொந்த ஊருக்கு அழைத்து வந்தான் ? இப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் காதலியின் பின்புலம் பற்றி ஆராயவே இல்லை என்றால் எப்படி ? சுற்றிலும் எரியும் நெருப்பு வளையத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ? மனைவி ஏன் கணவனைப் பிரிந்தே வாழ வேண்டும் என்ற கேள்விகளை எல்லாம் தவிர்த்திருக்க முடியாதுதான் . எனினும் இவ்வளவு சவசவ படமாக வந்திருக்காது
இன்னொரு குறை . இப்படி ஒரு கதை உள்ள படத்துக்கு ஏற்ற தெறிக்கும் வசனங்கள் படத்தில் இல்லை . பவா செல்லத்துரையின் அம்புலி மாமா பாணி உரையிலேயே படமே முடிந்து விட்டது . ஓர் ஆளை எரிக்க ஒரு காட்டையே எரிக்கும் கூட்டம் இது என்பதை எல்லாம் வசனத்தில் இன்னும் கூர்மையாகச் சொல்லி இருக்க வேண்டும்
மொத்தத்தில் பேரன்பும் பெருங்கோபமும்.. அரை அன்பும் குறை கோபமும்