தல பட்டமே தேவை இல்லை என்று துறக்கும் அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அஜித்தை முதன் முதலில் ஆல் ஏரியா மாஸ் ஹீரோவாக மாற்றிய படம் சிட்டிசன் . அந்த படத்தை இயக்கியவர் ஷரவண சுப்பையா .
அடுத்து அவர் இயக்கிய ஏ பி சி டி நல்ல பெயரைப் பெற்றது .
நல்ல பேச்சாளரும் தந்தி டிவியில் உலக சினிமா விமர்சனம் செய்தவருமான ஷரவண சுப்பையா , அடுத்து இப்போது, மணிகண்டன் தயாரிப்பில் , கதிரவன் நாயகனாக நடிக்க, டிக்கி லோனா மற்றும் நட்பே துணை படங்களில் நடித்த அனகா கதாநாயகியாக நடிக்க, தானும் ஒரு நாயகனாக நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம் மீண்டும்.
ஒரு பெண் இரண்டு கணவர் அதன் வழியே ஒரு ஒரு குழந்தை இரண்டு தந்தை என்று சர்ச்சைக்குரிய கதைப்போக்கோடு, இன்னொரு இலங்கை கடற்படையிடம் தமிழக மீனவர்கள் படும் சித்திரவதைகளை தத்ரூபமாக சொல்லும் படம் இது .
இதோடு இந்தியா மீது இலங்கை சைனா பாகிஸ்தான் நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்துவது பற்றியும் பேசி இருக்கிறாராம் ஷரவண சுப்பையா
விஜய் நடித்த புலி மற்றும் பந்தா பரமசிவம், தாமிர பரணி, போக்கிரி ராஜா, ஜெயில் ஆகிய படங்களைத் தயாரித்தவரும் இரும்புத் திரை , தென்மேற்குப் பருவக்காற்று, வாலு, காவலன், ஆகிய [படங்களை வெளியிட்டவருமான பி டி செல்வகுமார் படத்தை வெளியிடுகிறார்.
மீண்டும் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில், திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத் , ரங்கராஜ் பாண்டே இப்படி வழக்கத்துக்கு மாறான சிறப்பு விருந்தினர்களோடு இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகர் பேரரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன. வித்தியாசமான சூழல்கள், அழுத்தமான காட்சிகள், நெகிழ்வான உணர்வுகள் மட்டுமின்றி , பரபரப்பு, விறுவிறுப்பு , என்று வேகமும் கலந்து இருந்தது முன்னோட்டம் .
இனிய இசையில் அருமையான வரிகளில் சிறப்பாகப் படமாக்கப்பட்ட பாடல்கள் ஈர்ப்பாக இருந்தன .
நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஏ சந்திரேகர், ” ஷரவண சுப்பையாவின் சிட்டிசன் எனக்கு மிகவும் பிடித்த படம். அஜித்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு போன படம் அது . அப்படிப்பட்ட ஷரவண சுப்பையா சார் இன்னும் அடைய வேண்டிய உயரங்களை அடையவில்லை. இந்தப் படம் மூலம் அவர் அந்த உயரங்களை அடைவார் ” என்றார் .
ரங்கராஜ் பாண்டே ஷரவண சுப்பையாவின் பல்வேறு திறமைகளை புகழ்ந்து பேசி, ”சிட்டிசன் படம் இயக்கிய ஷரவண சுப்பையா மீண்டும் வந்து விட்டார் . இனி அவருக்கு எப்போதும் வெற்றிதான்” என்றார் .
“ஷரவண சுப்பையாவின் சிறந்த படங்கள் இனிதான் வரப் போகிறது ” என்று பாராட்டிய பேரரசு” சினிமா பாடல்களை நக்கலடித்த லியோனி சினிமாவுக்கு வந்து விட்டார் ” என்றார் .
“நான் அர்த்தமில்லாத சினிமா பாடல்களை விமர்சித்து பேசியது எல்லாம் நல்ல பாடல்கள் வர வேண்டும் என்கிற ஆசையில்தான் ” என்று விளக்கம் சொன்ன லியோனி, நகைச்சுவை வெடிகளை வெடிக்க விட்டு அரங்கை கலகலப்பாக்கியதோடு ,
சிட்டிசன் படத்தில் அஜீத்தை ஷரவண சுப்பையா பயன்படுத்திய விதம் பற்றி வியந்து பாராட்டி, அந்தப் படத்தில் வந்த மேற்கே புதைந்த சூரியனே .. ” பாடலைப் பாடி பாராட்டி, ஷரவண சுப்பையாவைக் கொண்டாடி ”அவர் திறமைக்கு இனி பெரிய படங்கள் வரும் “என்றார் .
“கருத்து ரீதியாக மாறுபட்டபோது கூட பண்பால் கவர்ந்தவர் ” என்று ஷரவண சுப்பையாவைப் புகழ்ந்த நாஞ்சில் சம்பத. ”அவர் பல சாதனைப் படங்களை எடுப்பார்” என்று வாழ்த்தினார் .
ரவி மரியா ஷரவண சுப்பையாவின் திறமைகளை பாராட்டி இந்தப் படம் பெரும் வெற்றி பெறும் என்றார்
நாயகன் கதிரவன் , ” மிக அருமையான கதையம்சம் உள்ள படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஷரவண சுப்பையா. எனக்கு இது மிக முக்கியமான படம் ” என்றார் .
படத்தின் சிறப்புகளைப் புகழ்ந்த பி டி செல்வகுமார், ” இந்தப் படம் எல்லோரையும் கவரும் . கண்டிப்பாக வெற்றி பெறும். அதனாலதான் நான் வெளியிடுகிறேன் ” என்றார் .
கண்ணில் நீர் தளும்ப உணர்வுப் பூர்வமாகப் பேசிய ஷரவண சுப்பையா, ” எஸ் ஏ சந்திரசேகர் சார் என் அப்பா போல. ரங்கராஜ் பாண்டே தந்தியில் நான் வேலை பார்த்தபோது என்னை மிக சுதந்திரமாக யோசிக்க செயல்பட அனுமதித்தார் . பேரரசு மிகச் சிறந்த நண்பர் நாஞ்சில் சம்பத் அவர்களின் எளிமையும் பழகும் பண்பும் வியப்பான ஒன்று. திண்டுக்கல் லியோனி அய்யா வந்து வாழ்த்தியது மிக பெருமையாக இருக்கிறது .
ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக ஆறு நாள் நிர்வாணமாக நடித்த கதிரவனின் அர்ப்பணிப்பு உணர்வு சொல்லால் விளக்க முடியாதது. அனகா பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சபிதா ரெட்டி, தர்ஷினி, மணிகண்டன் எல்லோரும் மிக சிறப்பாக நடித்து உள்ளார்கள். ஒரு வில்லி உட்பட நான் இந்தப் படத்தில் அறிமுகபடுத்தி உள்ள சிலர் மிகப் பெரிய அளவில் புகழ் பெறுவார்கள் .
இயக்குனர்கள் யார் கண்ணன், சுப்ரமணிய சிவா, ஸ்டான்லி , கேபிள் சங்கர் ஆகியோர் எனக்காக வந்து நடித்துக் கொடுத்தார்கள் .
வைரமுத்து அற்புதமான கொடுத்துள்ளார். எனது எடிட்டர் ராஜா முகமதுவும் , இசை அமைப்பாளர் நரேன் பாலகுமாரும் இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கவே முடியாது . அவர்கள் அப்படி தாங்கி இருக்கிறார்கள். சீனிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவும் சிறப்பாக வந்துள்ளது .
எல்லோருக்கும் நன்றி ” என்றார் .
டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஷரவண சுப்பையாவின் மீண்டும்