பி வி கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஜயன் தயாரிக்க, கன்னிமாடம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக், மற்றும் மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம் , வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ரமேஷ் இலங்காமணி இயக்கி இருக்கும் படம் .
சின்சியராகக் காதலித்த பெண் தீப்தி குமாரி ( மனிஷா ஜஸ்னானி) கை விட்டு விட்டு வேறொரு காதலனைத் தேடிக் கொள்ள தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் ஐ டி இளைஞன் சக்திவேலன்( ஸ்ரீராம் கார்த்திக்). அப்போது அவனது போனில் உள்ள ஃபேஸ்புக் மெசெஞ்சரில் வரும் செய்தி ஒன்று ”நான் இருக்கேன் . தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்” என்று சொல்கிறது .
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தனி அறையில் விட்டத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டிருக்கும் நம்மை யார் கவனிக்க முடிகிறது என்ற குழப்பத்தில் அவன் நிற்க, ”நான் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறேன் . ஆனால் என்னை நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால் நான் இறந்து சில மாதங்கள் ஆகிறது ‘ என்று அடுத்த மெசேஜ். தவிர தன் பெயர் ஊர் எல்லாம் சொல்கிறது அந்த மெசெஞ்சர் செய்தி அருவம்.
ஏதோ ஹேக்கர்ஸ் செய்யும் வேலை என்று எண்ணி சக்திவேலன் போலீசிடம் போக , போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகருடன் ( லிவிங்ஸ்டன்) அவன் அந்த ஊருக்குப் போக ,
அங்கே அப்படி ஆனந்தி என்ற ஒரு பெண் (பாத்திமா நஹீம்) இருந்ததும்,அவள் ஒரு விபத்தில் செத்துப் போனதும், இவனுக்கு மெசேஞ்சரில் செய்தி வரும் போன், அந்தப் பெண்ணின் சமாதியோடு புதைக்கப்பட்டது என்றும் சொல்.. திகில் !
ஆனால் புதைக்கச் சொன்னபோது போனை எடுத்துக் கொண்டு புதைத்த வெட்டியான், தன் மகள் கயல்விழிக்கு (வைசாலி ரவிச்ச்சந்திரன்) அந்த போனைக் கொடுத்து விட, அவளைப் போய் பார்க்க, அவளுக்கு தற்கொலை செய்து கொள்ளப் போன ஐடி இளைஞனை அடையாளம் தெரிகிறது .
செத்துப்போன பெண் ஆனந்திக்கு அவளது அப்பா செல்வராஜ் (ஜீவா ரவி), கல்வியின் தேவைக்காக ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்க, அவள் அதில் ஃபேஸ்புக் கணக்கு வைத்து சாட் செய்வது , ரீல்ஸ் போடுவது என்று இறங்கி மூழ்க, அப்போது இந்த ஐ டி இளைஞனின் முகநூல் கணக்கைப் பார்த்து அவன் மேல் காதல் கொள்கிறாள் ஆனந்தி. அதே நேரம் சக்தி வேறொரு பெண்ணைக் காதலிப்பதை அறிந்து வேதனை கொள்கிறாள் .
ஆனால் சக்தியின் காதல் தோல்வியும் ஆனந்திக்கு முகநூல் மூலம் தெரிய வர, அந்த சந்தோஷத்தில் இருக்கும்போது அவள் ஒரு லாரி மோதி செத்துப் போய் விடுகிறாள் .
அதனால்தான் ஆனந்தியின் ஆவி சக்தி வேலனிடம் மட்டும் செல்போன் மெசேஞ்சரில் பேசுகிறது என்பது தெரிய வர, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்
கதையாக மிக இன்டரஸ்டிங் ஆன கதைதான். ஒரு நிலை வரை சஸ்பென்ஸ் திரில் எல்லாம் இருக்கிறது . பால கணேசனின் ஒளிப்பதிவு அவுட்டோர் காட்சிகளில் அசத்துகிறது . குறிப்பாக பறவைப் பார்வை ட்ரோன் ஷாட்களில்.!
கார்த்திக் ஸ்ரீராம், மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , யமுனா, ராஜேஸ்வரி ஆகியோர் நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. நன்றாகவே நடித்துள்ளனர்
பிரியதர்ஷினியின் ஆவி காமெடி கலகல.
ஆனால் முக்கியமான கட்டத்தில், தானே கயிறு மாட்டிக் கொண்டு தூக்கில் தொங்க ஆரம்பிக்கிறது திரைக்கதை . சுமார் ஒரு மணி நேரம் முக்கால் மணி நேரம் மட்டும் ஓடும் படத்துக்கே ஒழுங்காக காட்சிகள் எழுதாமல் ஓ பி அடித்து இருக்கிறார்கள் .
அபூபக்கரின் இசை வெகு சுமார்தான . எடுத்த படமே போதாததாக இருக்க, அதை அப்படியே கோர்த்துக் கொடுத்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரசாந்த் .
நாயகன் தூக்கில் தொங்க முயல்வதையும் அப்போது மெசேஞ்சரில் ஆவி வந்து பேசுவதையும் விளக்கமாகக் காட்டுகிறார்கள் . பிறகு அவன் இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது வேற , நடந்ததை எல்லாம் முழுக்க வசனத்தில் விலாவாரியாக, “நான் போனேன் .. கயிறை எடுத்தேன் . நாற்காலி மேல ஏறினேன் என்கிற அளவுக்கு சொல்கிறார் . எதற்கு? எதுக்கு இந்த ரிபபிட்டேஷன்?
அதே போல செத்துப்போன ஆவியின் போட்டோவை தெளிவாக காட்டி விடுகிறார்கள் . அப்புறம் இன்ஸ்பெக்டர் வாங்கிப் பார்க்கும்போது மீண்டும் என்னவோ அறிமுக ஷாட் போல அவுட் ஆஃப் ஃபோகஸில் இருந்து ஃபோகஸ் செய்து அதே போட்டோவைக் காட்டி பில்டப் கொடுக்கிறார்கள் . அப்போ முதலில் முகத்தை காட்டுவது தேவை இல்லை
இப்படி கூறியது கூறல், காட்டியது கூறல் , காட்டியது காட்டுதல் என்று… ஆரம்பம் முதலே படம் இழுப்பதால் ஒரு மணி நாற்பத்து நிமிட படம், மூணு மணி நேரம் பார்க்கும உணர்வை கொடுக்கிறது
ஒருவேளை நிஜமாகவே பிணத்தோடு போன் புதைக்கப்பட்டு இருந்தால் அவள் ஆவியாக மெசேஜ் செய்கிறாள் என்பது அட்டகாசமான விஷயம். ஆனால் அடுத்த சீனிலேயே போன் அவள் தோழியிடம் இருக்கிறது என்று அவர்களே நீர்த்துப் போகச் செய்கிறார்கள் .
அந்தத் தோழி வெட்டியான் மகள் என்கிறார்கள் . ஆனால் அவள் செத்துப் போன பெண்ணின் வீட்டுக்குள் எப்போதுமே வளைய வருகிறாள் . அவர்கள் சாதி வேறுபாடு பார்க்காதவர்கள் என்றால் அதைச் சொல்ல வேண்டாமா? நல்ல காட்சிகள் எழுதினா இன்னும் அரை மணி நேரம் வரை படம் நீளமாக இருக்கலாமே ?
தன்னைக் காதலித்து செத்தவளை எண்ணி உருகும் சக்தி , அவனை ஏமாற்றி விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்ட தீப்தி மறுபடியும் இவனிடம் வந்து ”என் புருஷன் சரி இல் . அவனுக்கு நீயே மேல்..” எனும் போது அவளிடம் இயல்பாகப் பேசுகிறான். அதன் பிறகும் ஆவியை லவ் பண்ணுகிறான் .
அதே நேரம் ஏமாற்றிய அந்த முன்னாள் காதலியை அம்மாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறான். ஆனந்தியின் ஆவி ஆவி இருப்பதை உணர்ந்து மயங்கி விழுகிறாள்.
அடுத்து ஒரு காட்சியில் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று அவன் வீட்டுக்கு போக , ”நானும் வருகிறேன்..” என்று பயப்படாமல் போகிறாள் இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரச் சீர்குலைவுகள்.
செத்துப் போன பெண்ணின் தோழியாக வரும் கயல்விழி ”இப்போ என் உடம்பில்தான் என் தோழி இருக்கா. நாம ஒண்ணு சேர்ந்தா செத்துப் போன என் ஃபிரண்டு சந்தோஷமா இருப்பா..” என்கிறாள் .
” நீ இன்னொருத்தன் கூட வாழப் போற பொண்ணு . அப்படிப் பேசாத” என்று சக்தி சொல்ல, “பரவால்ல .. என் ஃபிரண்டுக்காக ஒரு தடவை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டனா ?” என்கிறாள்
.”என்னை சாதாரண பொண்ணா நினைக்காத . நான் டி என் பி எஸ் சி எழுதி ஆபீசர் ஆகப் போகிறேன் ” என்கிறாள்
தலை சுத்துது
இப்படியாக முன்னே உள்ள காட்சிகள் என்ன என்பதையே பார்க்காமல் அடுத்தடுத்து காட்சிகள் எழுதுவது , ஒரு கேரக்டரையும் முழு வடிவம் கொடுத்து எழுதாமல் சீர் குலைப்பது என்று பாலைவனத்தில் அலையும் ஆவி போல அலைகிறது திரைக்கதை.
நல்ல திரைக்கதை அமைந்து இருந்தால் இந்தப் படம் வித்தியாசமான வெற்றிப் படம் ஆகி இருக்கும். . ஆனால் நடக்கல.
