தேசிய தலைவர் @ விமர்சனம்

லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் எஸ் எஸ் ஆர் சத்யா மற்றும் ஜெனிஃபர் மார்கரெட்  தயாரிப்பில் முத்துராமலிங்கத் தேவராக பஷீர் நடிக்க, மற்றும் பாரதிராஜா, ராதாரவி, வாகை சந்திரசேகர் , எஸ் எஸ் பாஸ்கர் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அரவிந்தராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் . 
 
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வில் நடந்த சிறு வயது சம்பவங்கள் முதல் இறந்த போது வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி அவர் அடக்கம் செய்யப்பட்டு,  குரு பூஜைக்குரிய தெய்வத்தன்மை வாய்ந்தவராக ஆக்கப்பட்டது வரையிலான படம் . 
 
இம்மானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டதற்கான வழக்கின் விசாரணையின் போது,  தேவருக்கு எதிரான தரப்பில் வாதடும் வக்கீல்கள் தரப்பில் பணியாற்றி  , பின்னர் தேவரின் பெருமைகளை உணர்ந்த ஒரு வக்கீல்,  பின்னர் தனது ஜூனியர் வக்கீல்களிடம் தேவரின் வாழ்வை சொல்வதாக படம் விரிகிறது .
 
அந்த வக்கீலாக இயக்குனர் அரவிந்தராஜே நடித்துள்ளார் 
 
சிறு வயதிலேயே தேவர் அம்மாவை இழந்து இஸ்லாமியப் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தது, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது , சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது , சர்தார் வல்லப பாய் பட்டேலைப் பின்பற்றியது  , மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்ய முக்கியக் காரணமாக இருந்தது, 
 
சொத்து வரி கட்டாதவர் ஓட்டுப் போடவோ தேர்தலில் நிற்கவோ முடியாது என்ற அன்றைய நிலையில் சொத்து ஏதும் இல்லாத காமாரஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க,  முத்துராமலிங்கத் தேவரே  காமராஜர் பெயரில் இரண்டு ஆடுகள்  வாங்கி , அதைகே காமராஜரின்  சொத்தாகக் காட்டி,  காமராஜர் தேர்தலில் நிற்க உதவியது , பின்னர் காமராஜருக்கும் தேவருக்குமே முரண்பாடு வந்து இரண்டு அணிகளாக நின்றது ..அதனால் நாடார்களுக்கும் முக்குலத்தோருக்கும் ஏற்பட்ட மோதல்கள்,
 
குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை அந்த கோரப்பிடியில் இருந்து விடுவித்து அவர் செய்த சாதனை…
 
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு தென்னகத்தின் தளபதியாக முத்துராமலிங்கத் தேவர்   இருந்தது . நேதாஜியின்  அம்மாவை சந்தித்து அவரது அன்புக்குப் பாத்திரமானது, , நேதாஜி இறந்து போன போது வருந்தியது, நேதாஜிக்கு எதிராக நேரு செயல்பட்டதாக  தேவர் குற்றம் சாட்டியது , 
 
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று தேவர் தனக்கு வந்த செய்தியை சொல்ல, அவர் மீது நேரு தீராக் கோபம் கொண்டது, 
 
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்  இம்மானுவேல் கொலை  வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் தரப்பு என்ன?
 
தேவர் ஜெயிலில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதால் உடல் நலிவுற்றாரா?  
 
மருத்துவமனையில் அவர் ஆங்கில மருத்துவத்தையும் பெண் நர்ஸ்கள் தன்னை தொடுவதையும் மறுத்தது 
 
உட்கார வைக்கப்பட்ட நிலையில் ஜோதியால் எரிக்கப்பட்டு குரு பூஜை செய்யப்படும் தெய்வத்தன்மை கொண்டவராக ஆனது ஆகிய நிகழ்வுகள் படத்தில் இருக்கின்றன
 
பீரியட் காட்சிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ் , 
 
முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்ப்படும் வழக்கில் நீதிபதியாக பாரதிராஜா, அவர் தரப்பு வக்கீலாக ராதாரவி, தேவரின் விசுவாசிகளாக வாகை சந்திரசேகர் , எஸ் எஸ் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு . 
 
இது போன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா . ஒரு ஆவணப் படம் போல போகும்  படத்தை திரைப்படமாக்குவது அவர்தான் 
 
 கலை இயக்கம்  பாராட்டும்படி இருக்கிறது.
 
தேவரின் அபிமானிகள் சிலிர்க்கவும் பொதுவான தரப்பினர்  உணர்ந்து நெகிழவும் சில காட்சிகள் .உள்ளன.
 
காமராஜருக்கு எதிராக வந்திருக்கும் முதல் படம் இது . காந்தியாகவும்  நேருவாகவும் நடித்து இருப்பவர்களின்   தோற்றப் பொருத்தம் அருமை நேருவை வில்லனாகவே காட்டி இருக்கிறார்கள்.(தப்பில்லை) 
 
இம்மானுவேல்  கொலை வழக்கில்  தேவரின் தரப்பு மட்டுமே சொல்லப் படுகிறது. 
 
இம்மானுவேல் கொலை தேவருக்கு தெரியாமல் நடந்தது என்பது  எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு தேவர் சந்தோஷப்படுவார் என்று எண்ணி அவரது விசுவாசிகள் செய்தது என்பதும் உண்மை.
 
அன்றைய கலெக்டர் பணிக்கர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இம்மானுவேல் சேகரன் மற்றும் நாடார் தரப்பு நபர்கள் வந்த பிறகு தேவர் வருவார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது என்றும், 
 
ஆனால்  இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் வந்த பிறகே வந்ததோடு ,   கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தது பிடிக்காத தேவர், பிறகு, ” என் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த அவனை சும்மா விடக்கூடாது ” என்று சொன்னார் என்று,  தேவருக்கு வெப்பு நோய்க்கு சிகிச்சை அளித்த ஒரு வைத்தியரே சாட்சி சொன்னது வரலாறு. 
 
உண்மையில் அப்போது கலெக்டராக இருந்த பணிக்கர் என்பவர், தென் தமிழ்நாட்டில்  தேவர்களும் நாடார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒற்றுமையாக இருந்தால்  அது தென் மாவட்டங்களில் செட்டில் ஆக வரும் மலையாளிகளுக்கு பாதகம் ஆகும் என்பதால் அந்த ஒற்றுமை வரக்கூடாது என்பதில் பணிக்கர் தீர்மானமாக இருந்தார் என்பார்கள். அந்த முக்கியமான இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் எல்லாம் படத்தில் இல்லை
 
தேவரின் சொத்து அவரிடம் வேலை செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது . அவர்களில் சில தாழ்த்தப்பட்ட மக்களும் உண்டு (ஆனால் அந்த சொத்துகளில் சில பின்னர் அவர்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கப்பட்டது . சிலர் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என்று ஒரு தகவல் உண்டு)
 
பசும்பொன் தேவரின் வரலாற்றுக்கு உரிய அழுத்தமான படமாக்கல் இல்லாமை , இணைப்பு இல்லாமல் சிதறி சிதறிப் போகும் காட்சிகள், தெறிப்பு இல்லாத வசனங்கள் , முக்கிய நடிகர்களைத் தவிர பலரின் செயற்கையான நடிப்பு ஆகியவை பலவீனங்கள். 
 
பஷீர் தோற்றத்தில் நடை  உடை பாவனைகளில் முத்துராமலிங்கத் தேவரை பிரதிபலிக்கிறார் . ஆனால் .  முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையை அவரால் நடிப்பில் கொண்டு வர முடியவில்லை.  வரலாற்று நாயகன் என்று தேவரை சொன்னால் கூட ஓகே . ஆனால் இந்த முதல் படத்திலேயே பஷீருக்கு ‘வரலாற்று நாயக’ என்ற பட்டத்தை பஷீருக்கு டைட்டிலில் கொடுத்து இருக்கிறார்கள்.
 
காமராஜர் படத்தில் காமராஜர் போல தோற்றம்  கொண்ட ஒருவர் காமராஜராக நடித்தார் , ஆனால் அவரால் காமராஜரின் பர்சனாலிட்டியை கொண்டு வர முடியவில்லை. சாயாஜி ஷிண்டே பாரதியாராக தோற்றம் காட்டியதோடு  பாரதியை உணரவும் வைத்தார் . 
 
அவ்வளவு ஏன் . மிகப் புகழ் பெற்ற நடிகரான சத்யராஜ் பெரியாராக நடித்தபோது அவருக்கு அதுவரை இருந்த இமேஜையும் மீறி பெரியாராக மாறினார் . அப்படி முத்துராமலிங்கத் தேவராக நடிப்பவரும் தேவரை உணர வைக்க வேண்டாமா?
 
தேசியத்  தலைவர் என்பதுதான் சரியான தமிழ் . ஆனால் தேசிய தலைவர் என்று ஒற்று எழுத்து இல்லாமல் தவறாக பெயர் வைத்து இருக்கிறார்கள் . 
 
முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்படும் ஒரு காட்சியில் கும்பலில் முதல் வரிசையில் நிற்கும் ஒரு பெண் சிரிக்கிறார் . 
 
முதல் மாநில மாநாடு என்பதற்குப் பதில் ‘முதல்மாநிலமாநாடு’ என்று வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடாமல் ஒரு பேனர் வருகிறது. 
 
கருப்பான ஓர் ஆளுக்கு முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டிப் பூசி வெள்ளைக்கார அதிகாரியாக நடிக்க வைத்து இருக்கிறார்கள் . இயக்குனர் அரவிந்த்ராஜின் கெட்டப்பே செயற்கையாக இருக்கிறது 
 
தவம் செய்யும் காட்சியில் தேவராக நடிக்கும் பஷீர்  சின் முத்திரையை தவறாக வைத்திருக்கிறார். 
 
சில இடங்களில் பஷீர் பேசும் இடங்களில் ஒழுங்காக தப்பின் செய்யாமல் அவர் வெறும் வாயை அசைத்துக் கொண்டு இருக்கிறார் . 
 
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் …!  அந்தப் பெயருக்கும்  வரலாற்றுக்கும் உள்ள  உரிய கம்பீரம் படத்தில் இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *