லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர், தயாரிக்க, சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ், மனோபாலா, மயில்சாமி நடிப்பில் ஸ்ரீஜர் இயக்கி இருக்கும் படம் .
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பரம்பரை பரம்பரையாக காப்பாற்றி வரும் ஒரு குடும்பம். காரணம் அந்த குடும்ப ஆண்களின் பக்குவமும் நிதானமும்.
அந்தக் குடும்பத்தின் இப்போதைய இளைஞன் ஒருவனுக்கு (சாந்தனு) . திருமணம் நடக்கிறது. இளைஞனின் தாத்தா ( பாக்யராஜ்) , ”முதலிரவில் கணவன் மனைவி இருவரும் கட்டுப்பாட்டோடு தொட்டுக் கொள்ளாமல் ஒரு நாள் இருக்க வேண்டும் . அப்போதுதான் சொத்தை உனக்குத் தருவேன். இல்லை என்றால் அநாதை இல்லத்துக்கு எழுதி வைத்து விடுவேன் ” என்கிறார் .
மனைவியிடம் ( அதுல்யா ரவி) அவரது அத்தை (ஊர்வசி ), நம்ம பரம்பரையில் முதல் இரவிலேயே சங்கமம் நடக்க வேண்டும். இல்லை என்றால் குழந்தை பிறக்காது ” என்கிறார் .
முதலிரவை ஒரு நாள் தள்ளிப் போடும் முடிவில் நாயகனும், அன்றைக்கே எல்லாம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் பெண்ணும் முதல் இரவு அறைக்குள் நுழைகிறார்கள். என்ன நடந்தது என்பதுதான் படம் .
அடல்ட் காமெடி படம்.
படம் கலர்ஃபுல்லாக இருக்கிறது . ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும் தரன்குமாரின் இசையும் நன்றாக இருக்கிறது. பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது . கலை இயக்கம் நடனம் இவையும் நேர்த்தி .
சாந்தனு , அதுல்யா ரவியின் நடிப்பும் சிறப்பு .
காமெடி படம் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாதுதான். ஆனால் அதுக்கும் அளவில்லையா? அந்த முதல் இரவு அறைக்குள் ஒரு சரவணா ஸ்டோர்ஸ் கடையே இருக்கிறது . அதே போல ஒரு இரவு நேரத்துக்குள் படத்தில் ஒரு அகில இந்திய மாநாட்டையே கூட்டும் அளவுக்கு என்னென்னவோ செய்கிறார்கள்.
இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜிடம் மனோரமா பேசிய வசனத்தை இந்தப் படத்தில் சாந்தனுவிடம் பாக்யராஜையே பேச வைத்திருக்கிறார்கள் .
கடைசி அரை மணி நேரத்தில் தனது வசனங்களால் சிரிக்க வைக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர் . உதாரணமாக கல்யாணம் ஆன கன்னிகள் டயலாக் செம.
முருங்கைக்காய் சிப்ஸ் .. கடைசி சிப்சுகள் நேரத்தில் கொஞ்சம் ருசிக்கின்றன.