ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர் தயாரிக்க,
விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க,
பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் நெருப்புடா. படம், ரசிப்புடா என்று சொல்கிற மாதிரி இருக்கா ? பார்க்கலாம் .
சென்னையின் குறைந்த வருவாய்ப் பிரிவுக் குடியிருப்பு ஒன்றில் வாழும் நண்பர்கள் குரு (விக்ரம் பிரபு) மற்றும் நால்வர் . 
குருவின் தந்தை (பொன்வண்ணன்) கழிவு நீர்த் துப்பரவுத் தொழிலாளி .
சிறுவயதில் நடந்த தீ விபத்து ஒன்றில் தீயணைப்புத் துறையினர் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சேவையைப் பார்த்த காரணத்தால்,
நண்பர்கள் அனைவருக்கும் தீயணைப்புத் துறையில் சேர ஆசை .
வளர்ந்த பிறகு அதற்கான தேர்வு எழுதாத நிலையிலும் வேலைக்குப் போகும் முன்பாகவே தீயணைப்பு வண்டியில் பயணித்து பல உயிர்களை காக்கின்றனர்.
இதனால் தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு ( நாகி நீடு ) இவர்களை தேர்வு எழுத வைத்து வேலையில் சேர்த்துக் கொள்ள ஆசை . 
அவருக்கு ஒரு மகள் (நிக்கி கல்ராணி ). அவளுக்கும் குருவுக்கும் காதல் .
தேர்வு எழுத நாள் நெருங்கும் வேளையில் இரவில் தனியாக வரும் — நண்பர்களில் ஒருவனை , இரண்டு ரவுடிகள் வழிமறித்து வம்பிழுத்து அடிக்கின்றனர் .
பதிலுக்கு இவன் அடித்தவனை தள்ளிவிட போதையில் கீழே விழுந்த ரவுடி தலையில் அடிபட்டு இறக்கிறான் .
விஷயம் வெளியே தெரிந்து போலீஸ் கேஸ் ஆனால் தேர்வெழுதி வேலைக்குப் போக முடியாது என்பது இவர்கள் பயம் .
தங்கள் ஏரியா சில்லுண்டி ரவுடி ஒருவனிடம் (நான் கடவுள் ராஜேந்திரன்) உதவிக்குப் போகின்றனர் .
அப்போதுதான் தெரிகிறது செத்துப் போன ரவுடி , மிகப் பெரிய தாதாவான புளியந்தோப்பு ரவி என்பவனின் நெருங்கிய நண்பன் என்பது .
ஒரு பக்கம் போலீஸ் குறித்த பயம் , இன்னொரு பக்கம் துரத்தும் ரவியின் ஆட்கள் இவர்களிடம் நண்பர்கள் ஐவரும் சிக்கினார்களா ? தப்பினார்களா ?
லட்சிய வேலை என்னாச்சு ? காதல் என்னாச்சு ? ரவுடியின் கோபம் என்ன ஆச்சு ? போலீஸ் நடவடிக்கை என்னாச்சு என்பதே இந்த நெருப்புடா . 
சும்மா ஊறுகாய் போலவும் கமல் உட்பட பலரால் கூட (மைக்கேல் மதன காமராஜன் ) இதுவரை காமெடியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த —
ஆனால் கமர்ஷியல் சினிமாவுக்கு மிக அருமையாக செட் ஆகும் விஷயம், தீயணைப்பு வீரன் என்ற கதாநாயகத்தனம் .
முதல் படத்திலேயே அதை வைத்து கதை சொல்லி இருக்கும் அறிமுக இயக்குனர் அசோக் குமாருக்கு ஒரு வார்ம் வெல்கம் !
பற்றி எரியும் குடிசைகளுக்கு இடையே குருவும் நண்பர்களும் முதியவர்கள் , ஊன முற்றவ்ர்கள் , பெண்கள் , குழந்தைகள் ஆகியோரை காப்பாற்றும் காட்சியும் 
காட்சி அமைப்பும் படமாக்கலும் பதட்டமும் பரபரப்பும் என்று, முதல் காட்சியிலே முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் குமார் . வாழ்த்துகள் .
படத்துக்கு உயிர் கொடுக்கும் அர்த்தமுள்ள பின்னணி இசையால் பிரம்மாதப்படுத்தியுள்ளார் சான் ரோல்டன் . பாடல்களும் சிறப்பு . சபாஷ் சான் ரோல்டன் .
இயக்குனரின் மேக்கிங் வேலைக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு .
“என்னை எப்படித்தான் கொடுமைப் படுத்தினாலும் கொன்றாலும் என் வேலை உயிரைக் காப்பாத்துறதுதான் . பதிலுக்கு இன்னொரு உயிரை எடுப்பது அல்ல “
என்ற குணாதிசயம் கொண்ட குரு கதாபாத்திரத்தில் – இது வரை அவர் அளவில் அவர் எந்தப் படத்திலும் நடிக்காத அளவுக்கு, பெட்டரான நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு .
தொனி ,உணர்வு என்று குரல் நடிப்பிலும் அருமை . பாராட்டுகள் .
பாசமுள்ள தந்தையாக வந்து சிறப்பான நடிப்பால் நெகிழ வைக்கிறார் பொன்வண்ணன் . பட்டைதீட்டப்பட்ட நடிப்பு .
எதிர்பாராத திருப்பமாக ஆக்ரோஷமான அதிரடி திருநங்கையாக வந்து அதிர வைத்து அதகளப்படுத்தி அசத்தி இருக்கிறார் நடிகை சங்கீதா . பிரம்மாதம் . பிரம்மாதம் .
அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்த கலைஞருக்கு ஆகா ஓகோ பாராட்டுகள் . சந்திரமுகி கேரக்டருக்குப் பிறகு அப்படி ஒரு மிரள வைக்கும் பெண் குரல்! 
நியாயமே இல்லாத அந்த திருநங்கை கேரக்டரைக் கூட நாம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு,
கிளைமாக்ஸ் காட்சியை அமைத்த வகையிலும் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அசோக் குமார் .
படத்தில் காமெடி என்று எண்ணிக் கொண்டு மொட்டை ராஜேந்திரன் உட்பட பலரும் பேசும் காட்சிகள்தான் சோதிக்கின்றன .
அதுவும் சில சமயம் மிக சீரியசான காட்சிகளில் கூட யாரவது அசட்டுத்தனமான உளறுவதும்,

அது காமெடி என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை .
அதே போல இடைவேளை சமயத்தில்தான் புளியந்தோப்பு ரவியிடம் குரு மாட்ட வேண்டும் என்று திரைக்கதையில் டைம் பிக்ஸ் பண்ணிக் கொண்டதால் ,
பல சரியான வாய்ப்புகளை வில்லன் பச்சைப் புள்ளையாட்டம் கோட்டை விடுவதும் சறுக்கலே .
இப்படி சில குறைகள் இருந்தாலும் தீயணைப்பு வீரன் என்ற ஹீரோ கதாபாத்திரம் , அரவாணியின் மன நிலை , எதிர்பாராத சில திருப்பங்கள் , 
விளிம்பு நிலைக் கதாபாத்திரங்கள், சிறப்பான படமாக்கல் , பொருத்தமான இசை , அசத்தலான ஒளிப்பதிவு , நல்ல நடிப்பு
– ஆகிய தரமான பொருட்களால் உருவான காரணத்தால் ,
கனகன வென இருக்கிறது, நெருப்புடா !


