சார் பதிவாளர் அலுவலக வேலையில் சேர்ந்து முதன் முதலாக வேலைக்குப் போகும் இளைஞன் ஒருவனுக்கு (விஷ்ணு விஷால்) ,
வழியில் பார்க்கும் அழகான பெண் மீது (கேத்தரின் தெரசா ) காதல் வருகிறது . அவள் இருப்பதும் பக்கத்து வீட்டில்தான் .
இந்தக் காதலுக்கு உதவுகிறான் , அதே சார்பதிவாளர் அலுவலக அட்டண்டரான பால்ய சிநேகிதன் (சூரி )
அந்தப் பெண் தைரியசாலி . ஆனால் இவனோ எதற்கெடுத்தாலும் பயப்படும் நபர் . வழியில் வாய்ச் சண்டையைப் பார்த்தாலே,
டேக் டைவர்ஷன் எடுத்து சுத்திக் கொண்டு போகும் சுபாவம் கொண்டவன் .
அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு ( நடராஜ்) ஒரு கந்து வட்டி ரவுடியால் ( அருள்தாஸ் ) பிரச்னை வர ,
அப்போது அங்கே இருக்கும் இவனிடம் அவர் உதவி கேட்கிறார். இவனோ அவரையே அம்போ என்று விட்டு விட்டு ஓடுகிறான் .
அது மட்டுமல்ல , ஓர் இரவில் தன் வீட்டில் பாம்பு புகுந்த நிலையில் இவனிடம் டார்ச் லைட் உதவி கேட்கிறார் . பாம்புக்கு பயந்து அதைக் கொண்டு போய்க் கொடுக்கவே மறுக்கிறான் .
இந்த நிலையில் மகனின் காதல் அறிந்த அம்மா (சரண்யா) . பெண் கேட்டுப் போக , ‘இவனைப் போன்ற கோழைக்கு,
மகளைக் கொடுக்க விரும்பவில்லை’ என்று மறுத்து விடுகிறார் பெண்ணின் அப்பா
இதற்கெல்லாம் காரணம் ரவுடிதான் என்று கொந்தளிக்கும் நாயகன் குடி போதையில் அவனை அடித்து மண்டையை உடைத்து விடுகிறான் .
மறுநாள் முதல் ரவுடி இவனை கொலை வெறியோடு தேடுகிறான் .
இதற்கிடையில் சண்டையில் நடந்த சிறு காயங்களுக்காக முதல் உதவி சிகிச்சை பெற மருத்துவமனை போகிறான் நாயகன் .
அங்கே ” நீ இன்னும் ஆறு மாதத்தில் செத்து விடுவாய் என்கிறார் டாக்டர் . (சிறப்புத் தோற்றம் விஜய் சேதுபதி ).
மனம் உடைந்து போகும் நாயகன் காதலியை புறக்கணிக்கிறான் .
அக்காவின் கல்யாணத்துக்கு பணம் போதாமல் அப்பா அம்மா கஷ்டப்படுவதை பார்க்கிறான்.
ஒரு கோபக்கார சேட்டுக்கு கிட்னி தேவைப்படுவதை அறிந்து, தனது கிட்னியை கொடுப்பதாக சொல்லி பணத்தை வாங்கி அப்பாவிடம் தருகிறான் .
ஆபரேஷன் தினத்தன்று ‘தனக்கு எந்த நோயும் இல்லை; தான் சாகமாட்டோம்’ என்பது அவனுக்கு தெரிகிறது.
எனவே கிட்னியை இழக்க மறுக்க, கொலை வெறி கொண்ட சேட் ஆட்கள் கோபம் கொண்டு துரத்த , இன்னொரு பக்கம் கந்து வட்டி ரவுடி துரத்த ,
அப்புறம் நடந்தது என்ன என்பதே கதாநாயகன்
மெலிதான கதை . பழகிய கதை . அதை மிக சன்னமான காமெடியால் நிரப்பிக் கடத்த… முயன்று இருக்கிறார்கள்.
“அடிக்கிறவன் மட்டும் வீரன் இல்ல .. நியாயத்தை தட்டிக் கேட்டு அடி வாங்கறவனும் வீரன்தான் “
“மரணம் என்பது முற்றுப் புள்ளி அல்ல . ஒரு நீண்ட பயணத்தின் தற்காலிக ஓய்வுதான் “
— இப்படி சீரியஸ் வசனங்களில் சிக்சர் அடிக்கிறார் இயக்குனர் முருகானந்தம். அருமை ( பெயரை டைட்டிலில் த. முருகானந்தம் என்று தமிழில் மட்டுமல்ல ..
ஆங்கிலத்தில் கூட THA. MURUGANANDHAM என்று போட்டுக் கொள்ளும் தமிழ்ப் பற்றுக்கு பாராட்டுகள் !)
சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கவர்கின்றன . பின்னணி இசை காட்சியின் சூழல் , நோக்கம் இவற்றை அபாரமாக தூக்கி நிறுத்துகிறது .
படத்தின் மிக சிறப்பான பணிகளில் இசை முன்னணியில் நிற்கிறது .
உறுத்தாத அழகான ஒளிப்பதிவில் கவர்கிறார் லக்ஷ்மன்
விஷ்ணு விஷால் மிக இயல்பாக நடித்துள்ளார் . சூரி வழக்கம் போல .
குத்திய இரும்பின் சுழற்றலில் ஓவனுக்குள் உருளும் சிக்கன் பீஸ் மாதிரி இருக்கிறார் கேத்தரின் . (அதாவது உரிச்ச கோழிக்கு எல்லாம் மேல ) .
ஆனால் முக பாவனைகள்தான் காமத்தி புராவையும் சோனா காஜையும் ஞாபகப்படுத்துகின்றன . கதாநாயகியின் முக பாவனைகள் கிளர்ச்சியூட்ட மட்டும் அல்ல .
எதிர்பாராத நிலையில் ஒரு கெஸ்ட் ரோலில் டாக்டராக வந்து அசத்துகிறார் விஜய் சேதுபதி .
அந்த காட்சிகளின் அமைப்பு , வசனம் , அவை கையாளப்பட்ட விதம் , முடிக்கப்பட்ட விதம் இவற்றில் அதிக பட்ச நேர்த்தி ! சூப்பர் .
லக்ஷ்மி எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் நாவலில் இருந்து எடுக்கப்பட்டு மலையாளம் , இந்தி, தெலுங்கு என,
பல மொழிகளிலும் பயன்படுத்தப்பட்ட அந்த மருத்துவ மனை கவனக் குறைவு எபிசொட் ஒகே தான் .
ஆனால் நடப்பது என்ன என்பதை முன் கூட்டியே காட்டி விடுவதால் நாயகனின் திடீர் சிக்கல் படத்தில் எடுபடவில்லை .
அதை முதலில் காட்டாமல் அப்புறம் டாக்டர் சொல்லும்போது காட்டி இருந்தாலாவது அதுவரையிலான சூழலுக்கு அழுத்தம் கிடைத்து இருக்கும் .
எப்படி இருந்தாலும் ஷேக்கிடம் நாயகன் மாட்டப் போகிறான் என்ற முடிச்சு இருப்பதால் அது தவறாகவும் போயிருக்காது . அப்படி இருக்க முன்பே காட்டுவது எதற்காக ?
அடிப்படையில் திரைக்கதை மற்றும் வசனத்தில் காமடிக்கான வாய்ப்பு இருக்கிறது . ஆனால் அதை படத்தில் சிறப்பாக கொண்டு வருவதில்தான் சறுக்கல் .
திரைக்கதை மற்றும் காமெடி வசனத்தில் இன்னும் ஆழம் , உழைப்பு , சிந்தனை , நேர்த்தி எல்லாம் தேவைப் படும் படம் இது .