காதல் மன்னனில் ஆரம்பித்து அமர்க்களம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று முன்னேறிய இயக்குனர் சரணுக்கு மோதி விளையாடு படம் ஒரு விபத்தாக போக ,
இப்போது நண்பர்கள் சிலரின் இணை தயாரிப்பில் சரணே தயாரித்து எழுதி இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர் .
மோதி விளையாடு படத்தின் ஷூட்டிங்கின் போதே “இந்தப் படம் எப்படி இருந்தாலும் சரி… உங்க அடுத்த படத்திலும் நான்தான் ஹீரோவா நடிக்கணும்” என்று வினய் கேட்டுக்கொண்டபடி ,
இந்தப் படத்திலும் வினய்தான் ஹீரோ . தவிர, பக்காவான திருநெல்வேலி ஆள் , நவீனமான மாநகர்ப்புற இளைஞன் என்று இரட்டை வேடம் .
வேடம் இரண்டு ஆனால் கதாநாயகிகள் மூன்று.
ஒவ்வொரு கதாநாயகியையும் பற்றிறி ஓரிரு வார்த்தைகள் இல்லாவிட்டால் தூக்கம் வராது என்பதால் இதோ மேல் விவரங்கள் . அதாவது (அந்த) ஃபிமேல் (கள் பற்றிய) விவரங்கள்.
தேராடூனை சேர்ந்த சாக்ஷி சவுத்ரி என்ற பெண்ணின் முகம் திருநெல்வேலி நேட்டிவிட்டிக்கு அல்வாவும் நெய்யுமாய் அப்படிப் பொருந்த சாட்சியின் பெயரை சாமுத்ரிகா என்று மாற்றி படத்தில் அவரை திருநெல்வேலிக்கார இளைஞனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார் சரண். இப்போதே சாமுத்ரிகா கையில் ஆயிரத்தில் இருவர் தவிர தெலுங்கிலும் இந்தியிலும் இரண்டிரண்டு படங்கள் இருக்காம்.
கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிற பெங்களூரில் பிறந்த —ஆனால் மலையாள பெண்குட்டியான —சுரபி மாநகர்ப்புற இளைஞனுக்கு ஜோடியாக நடிக்கிறார் . இவருக்கு ஸ்வஸ்திகா என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் . (ஒரு கதாநாயகிக்கு சாமுத்ரிகா என்று பெயர் வைத்த கையோடு இன்னொருவருக்கு லக்ஷணா என்று பெயர் வைத்து இருந்தால் பொருத்தமா இருந்திருக்குமே சரண்? மிஸ் பண்ணிட்டீங்களே!)
மற்றொரு கதாநாயகியான கேஷா கம்பெட்டி தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் மும்பைப் பொண்ணு . இவருக்கு மட்டும் பெயர் மாற்றம் எதுவும் இல்லை . (ஆனால் மைக்கில் கேஷா கம்பெட்டியின் பெயரை, ‘கேஷா …கம் பாத் வித் மீ ‘என்ற மாதிரி சொன்னார்கள் ) அதே நேரம் படத்தில் இவர் இவர் இரண்டு (வேட) வினய்களுக்கும் ஜோடியாம் (எதுவும் கலாச்சாரப் புரட்சி பண்ணலையே டைரக்டர்?)
படத்தின் ஊடகத் தொடர்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த புது கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியவர் சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட மானு
“பொதுவா இரட்டை வேடப்படங்களில் வரும் எல்லா வழக்கமான விசயங்களையும் இந்தப் படத்தில் நான் உடைத்திருக்கிறேன். மற்றபடி நான் பொழுதுபோக்குக்காகப் படம் எடுக்கிறேன் . அவார்டுக்காக எல்லாம் படம் எடுப்பதில்லை “என்றார் இயக்குனர் சரண் ,
படத்தில் நடித்து இருக்கும் டேனியல் என்ற நடிகர் பேசும்போது “டைரக்டர் சரண் எங்ககிட்ட எல்லாம் உம்முன்னு இருப்பாரு. ஆனா கதா நாயகிகள் கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுவாரு” என்றார் .
உடனே பதறி வந்து மைக்கை பிடித்த டைரக்டர் சரண் “ஏதாவது காமெடி டயலாக்கை கதாநாயகிகள்கிட்ட சொல்லும்போது வேண்ணா நான் சிரிச்சு பேசி இருப்பேன் . பின் வரிசையில என் மனைவி உட்காந்து கேட்டுக்கிட்டு இருக்கறதால நான் இந்த உண்மையை சொல்ல வேண்டியது அவசியமான விஷயம் “என்றார்.
ஆனால் அய்யகோ! அடுத்து பேசிய கதாநாயகி ஸ்வஸ்திகா “டைரக்டர் எங்க கிட்ட அன்பா இருப்பாரு. எப்பவும் சிரிச்சு சிரிச்சு பேசுவாரு ” என்று கலகலவென போட்டுக் கொடுத்து விட, சரண் முகத்தில் மட்டும் கொஞ்சம் லக லக! .
பின்னே வீட்டுக்குப் போனதும் மனைவி கொடுத்த ‘மண்டகப்படி’யை அவர்தானே அனுபவித்திருப்பார்