
பேஸ்ஷன் ச்டுடயோ சார்பில் அருண் வைத்யநாதன் தயாரித்து ன் இயக்க , பிரசன்னா, வரலக்ஷ்மி ஆகியோர் உடன் நடிக்க ,
அர்ஜுனின் நூற்றி ஐம்பதாவது படமாக வந்திருக்கும் படம் நிபுணன் . மேதாவியா ?அப்பாவியா ? பார்க்கலாம் .
நகரில் தொடர்ந்து கொலைகளம் நடக்கின்றன . கொலையாளி ஒவ்வொரு கொலையின் முடிவிலும் கொலை செய்யப்பட்டவருக்கு ,
ஒரு புதிய உடையையும் பல்வேறு விலங்குகளின் முக மூடிகளையும் மாட்டி விட்டுப் போகிறான் .
அந்த உடை என்பது அடுத்து கொலை செய்யப்பட இருப்பவரின் தொழில் சம்மந்தமான உடையாக இருக்கிறது .
முகமூடி கொலை செய்யப்படுவரின் ஜாதக ராசியின் அடையாளமாக (ஆடு — மேஷம், காளை – ரிஷபம் ) இருக்கிறது
சீனியர் போலீஸ் அதிகாரி (அர்ஜுன்) அவரது உதவியாளர்கள் (பிரசன்னா, வரலக்ஷ்மி ) ஆகியோர் விசாரணையில் இறங்குகின்றனர் .
ஒரு நிலையில் கொலையாளியின் லிஸ்டில் சீனியர் போலீஸ் அதிகாரியும் இருப்பது தெரிகிறது .
ஏன் ? யார் ? நடந்தது என்ன ? என்பதே நிபுணன் .
தெளிவான , தொழில் நேர்த்தியான துப்பறியும் கதை .
கிரைம் பிராஞ்ச் போலீசாரின் நடவடிக்கைகளை யதார்த்தத்தை ஒட்டி , அதே நேரம் தேவையான சினிமாத்தனம் கலந்து காட்டுகிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன் .
சின்னச் சின்ன திருப்பங்கள், செண்டிமெண்ட் , கொஞ்சம் காதல் , சற்றே காமெடி என்று கலந்து படம் போவதால் இயல்பாக தப்பிக்கிறது .
அர்ஜுன் இன்னும் உருண்டு திரண்ட உடலோடு இருக்கிறார் . சூப்பர் சார். அதுக்குன்னு இவ்வளவு இளமையான மனைவி மற்றும் சிறுமியான மகளா ? சரி விடுங்க . அதுதானே ஹீரோயிசம் .
பிரசன்னா நடிப்பு வெகு சென்சிபிள். வரலக்ஷ்மி பட பட பட்டாசு.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை .
திரைக்கதையை விட மேக்கிங்கில் தப்பிக்கிறது படம்.
ஒரு கதையில் குற்றவாளியை ஆரம்பம் முதலே கதையில் நடமாட வைத்து ரசிகனுக்கு அறிமுகம் செய்து ஆனால் அவன்தான் குற்றவாளி என்று நம்ப முடியாத அளவுக்கு திரைக்கதை பண்ணுவது ஒரு வகை .
கதை போகிற போக்கில் ரேண்டமாக படத்தைக் கொண்டு பொய் கிளைமாக்சுக்கு ரெண்டு ரீல் முன்னாடி கொலையாளி யார் என்று சொல்வது இன்னொரு வகை .
முதல் வகை பண்ணுவது கஷ்டம் . திரைக்கதைக்கு தலையால தண்ணி குடிக்கணும் .
இரண்டாம் வகை கொஞ்சம் ஈசி . ஆனால் அது ஒரு மாற்றுக் குறைவான சஸ்பென்ஸ் படமாகவே அமையும் .
நிபுணன் இரண்டாவது ரகமே .
இது போன்ற ஒரு நிதானமான அழுத்தமான ஒரு மேக்கிங்கில் முதல் வகை திரைக்கதையில் வந்திருந்தால் நிபுணன் பின்னிப் பெடல் எடுத்து இருப்பான் .
இப்போது குட்பாய் என்ற அளவில் சிரிக்கிறான்.