
ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த் , நடிப்பில் ஞானவேல் இயக்கி இருக்கும் படம் கூட்டத்தில் ஒருத்தன் .
ரசனைக்கு முதல்வனா ? பார்க்கலாம் .
பள்ளிக் கல்விக் காலத்தில் நல்ல பெயர் வாங்கும் முதல் பெஞ்ச் மாணவர்கள் , கெட்ட பெயர் வாங்கும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் இவர்களுக்கு இடையில்,
எந்த அடையாளமும் இல்லாமல் எந்த மனப் பதிவையும் ஏற்படுத்தாமல் கடக்கிற மிடில் பெஞ்ச் மாணவன் ஒருவன் (அசோக் செல்வன்)
யாரோ போட்ட குப்பையை தான் எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் அவனது குணம் காரணமாக , முதல் பெஞ்ச் மாணவியும்,
வாழ்க்கையில் லட்சியங்கள் கொண்டவளுமான ஒரு நல்ல மாணவியின் (பிரியா ஆனந்த்) பாராட்டைப் பெறுகிறான் .
அவளுக்கு அது ஒரு சாதாரண சம்பவம் . ஆனால் வீட்டில் கூட இடைப்படுத்தப்பட்டு நசுக்கப்படும் அவனுக்கு அந்தப் பாராட்டு பெரிய விஷயம் .
எனவே தமிழ் சினிமா விதிகளுக்கு உட்பட்டு உடனே அவள் மீது அவனுக்கு காதல் .
பிளஸ் டூவில் மாநிலத்தில் முதல் இடம் பெறும் அவள் , ஜர்னலிசம் படிக்க வர, அவனும் தனது அப்பாவின்(மாரிமுத்து) எஞ்சினியரிங் கனவை மறுத்து ஜர்னலிசம் படிக்க வருகிறான் .
ஒரு நிலையில் அவளிடம் அவன் காதலைச் சொல்ல, அவனது பெயர் கூட தெரியாத அவள், தன்னுடைய சாதனைகளை சொல்லி ,
‘எதாவது சாதிச்சுட்டு வா .அப்புறம் நண்பனாவாச்சும் ஆக்கிக்கலாமான்னு யோசிக்கறேன் ‘ என்கிறாள் .
எதுவும் முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ள அவன் கடலில் இறங்க , விபத்தாக ஒரு சிறுவனை காப்பாற்றுகிறான் .
சிறுவனின் அப்பாவும் போலீசின் அராஜகங்களையே கண்டிக்கும் அளவுக்கு ஆள் அம்பு அடியாள் கொண்டவருமான ஒருவரின் (சமுத்திரக் கனி ) நட்பு அவனுக்குக் கிடைக்கிறது .
அவரது பண பலம், படை பலம் , பய பலம் காரணமாக , நாயகன் பெரிய ஆளாகக் காட்டப் படுகிறான் . எவருக்கோ போக வேண்டிய முதல் இடம் ,
எவருக்கோ போக வேண்டிய அங்கீகாரம், எவருக்கோ போக வேண்டிய விருதுகள் இவனுக்கு திட்டமிட்டு திருப்பப்படுகின்றன .
அவனை நிஜ சாதனையாளனாக நம்பும் நாயகி காதலை ஏற்கிறாள் .
இந்த நிலையில் அவனுக்கு உதவும் படை பலம் மிகக் நபரை , மோசமான போலீஸ் இன்பெக்டர் ( ஜான் விஜய்) ஒருவர் பழைய பகை காரணமாக போட்டுத் தள்ளுகிறார் .
நாயகனின் ராஜ்யம் சரிகிறது . அவனால் பாதிக்கப்பட்ட சிலர் , அவனது ஏமாற்று வேலையை, காதலி உட்பட எல்லோருக்கும் நிரூபிக்கின்றனர் .
அப்பா , காதலி, படிக்கும் நிறுவனம் உட்பட எல்லோரும் அவனை புறக்கணித்து தெருவில் வீச , அப்புறம் என்ன என்பதே இந்தப் படம் .
மிடில் பெஞ்ச் மாணவர் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தை வைத்து கதை அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது .
அசோக் செல்வனின் நடிப்பை தோற்றத்தை முழுசாக மாற்றி அசத்தி இருக்கிறார் இயக்குனர் . அருமை . சமுத்திரக் கனி , ஜான் விஜய் , மாரிமுத்து ஆகியோரின் நடிப்பு வழக்கம் போல சிறப்பு
சில இடங்களில் வசனம் கவனிக்க வைக்கிறது . நிவாஸ் கே பிரசன்னா இசை ஒகே . பி கே வர்மாவின் ஒளிப்பதிவு ரம்மியம் .
அவ்வப்போது நகைச்சுவை வெடி கொளுத்துகிறார் பால சரவணன்.
கருத்தியல் ரீதியாக கிளைமாக்ஸ் பகுதி அருமை
ஆனால் மேலே சொன்ன எதுவும் பலன் தராத வகையில் படத்தின் திரைக்கதை அமைந்து விட்டதுதான் பரிதாபம்.
மிடில் பெஞ்ச் மாணவர்கள் என்பது வகுப்பில் மட்டுமே . அவர்கள் வீட்டிலும் கூட அப்படியே நடத்தப்படுவார்கள் என்பது பக்கா சினிமா . மிடில் பெஞ்ச் மாணவர்களின் வேறு உலகம் அறியாத பார்வை இது .
கல்விக் கூட நிகழ்வுகள் தவிர மற்ற விசயங்களில் அவர்கள் சிறப்பாக இருப்பார்கள் .
அலட்சியம் காரணமாக முதல் பெஞ்ச் மாணவர்கள் பின் தங்கி விட, கடைசி பெஞ்ச் மாணவர்கள் பாதை மாறிவிட , வாழ்வில் மிடில் பெஞ்ச் மாணவர்கள் ஜெயிப்பது இதனால்தான் .
ஆனால் படத்தில் மிடில் பெஞ்ச் மாணவர்கள் எல்லா வகையிலும் வேஸ்ட் என்பது குறுகலான பார்வையே.
மிடில் பெஞ்ச் மாணவர்கள் என்ற விஷயம் யதார்த்தமான ஒன்று . எனவே அதே யதார்த்த தளத்தில்தான் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்து இருக்க வேண்டும் .
அப்படி இருக்க சாகப் போன இடத்தில் இன்னொருவரை காப்பாற்றி பெரிய தாதாவின் அதீத அன்புக்கு ஆளாகும் சினிமாத்தனம் எல்லாம் இந்தக் கதைக்கு எதற்கு ?
(அதுவும் குடித்து விட்டு உளறும் நாயகனை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் அளவுக்கு சமுத்திரக் கனி கேரக்டர் அநியாயத்துக்கு பாசம் காட்டுவது எல்லாம் …. முடியல )
அதே போல வழக்கமான காதல், காதலைப் பெற ஏமாற்றி அப்புறம் விஷயம் தெரிந்து புலம்பும் பழகிய கதைதான் எதற்கு ?
யதார்த்தமான விசயத்துக்கு யதார்த்தமான கதைப் போக்குதானே பயனுள்ளதாகவும் ‘இதில் நமக்கு என்ன செய்தி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகனுக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும் .
அப்படி இல்லாமல் யதார்த்தமான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்தில் இப்படி பழைய பதார்த்தம் சுட்டது எதற்கு ?
வசனங்கள் ஏதோ வேறு உலகத்தில் இருந்து எழுதப்பட்டது போல இருக்கிறது . உதாரணம் ” பரிட்சைல நூறு மார்க் எடுக்கணும் .
இல்லன்னா பெயில் ஆகணும் (?!) . ஆனா நான் அம்பது மார்க் எடுத்து அப்பாகிட்ட திட்டு வாங்கற ஆவரேஜ் சார் . அதுதான் பரிதாபம் “
இது என்ன லாஜிக் ? எப்படிப் பார்த்தாலும் பெயில் ஆவதற்கு அம்பது மார்க் வாங்குவது நல்லதுதானே சார் ?
நீயின்றி நானில்லை பாடல் நன்றாக இருந்தும் அசந்தர்ப்பமாக வருவதால் அலுப்பூட்டுகிறது .
ஒரு கட்டுரையை யார் எழுதியது என்றே பார்க்காமல் சம்மந்தமில்லாத ஒருவனுக்கு அந்த கிரடிட்டை பத்திரிக்கைகள் கொடுக்குமா என்ன ?
அதுவும் ஞானவேல் (மற்றும் நான் உட்பட ) பணி புரிந்த ஜூனியர் விகடன் உட்பட்ட பத்திரிக்கைகள் ?
ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் நேர்மையாக எல்லாம் ஜெயிக்க முடியாது . அவன் ஏமாற்றிதான் ஜெயிக்க முடியும் என்று சொல்வதற்கு ஒரு படமா ? இதற்கு எதற்கு அந்த கூட்டத்தை கவனித்து படம் எடுக்க வேண்டும் .
நாயகன் அநியாயத்துக்கு நல்லவன் என்று படம் சொல்கிறது . அவன் அப்படியா நடந்து கொள்கிறான் ? இல்லையே .
சமுத்திரக் கனி கதாபாத்திரத்தின் உதவியால் அவன் ஹீரோவாக காட்டப்படுவதன் நோக்கம் நாயகியை கவரத்தான் . இல்லையா ?
எனில் அவரால் கிடைக்கும் அநியாயமான பலன்களை சம்மந்தப்பட்ட தகுதியானவர்களுக்கே அவனே விட்டுக் கொடுத்து இன்னும் அவளது குட் புக்கில் இடம் பிடிக்கலாமே . ஆனால் நாயகன்அ ப்படி செய்யவில்லையே .
பிபிசி யில் சேர்ந்து உலகின் எல்லா தலைவர்களையும் பேட்டி காண ஆசைப்பட்ட ஒரு தகுதியான மாணவனின் சீரிய கனவை அல்லவா சிதைக்கிறான்?
எனில் இந்த அயோக்கியன் மிடில் பெஞ்சில் இருந்து வீணாப் போனால் என்ன ? கடைசி பெஞ்சில் இருந்து காணாமல் போனால் என்ன?
அவனது எமொஷனில் என்ன நியாயம் இருக்கு ? நாம் ஏன் அவனுக்கு வருத்தப்படனும் ?
தான் காதலித்தவளை அடைய எவன் தாலியை வேண்டுமானாலும் அறுக்கலாம் என்பவனின் கண்ணீர் நமக்கு எதுக்கு ? நான் சென்ஸ்.
பசிப்பிணி தீர்க்கும் பணியில் நாயகன் இறங்கும் அந்த கிளைமாக்ஸ் பகுதி தனிப்பட்ட வகையில் போற்றி வணங்கத் தக்க ஒன்று. மறுப்பதற்கில்லை .
ஆனால் இந்தப் படத்துக்கும் மிடில் பெஞ்ச் மாணவன் என்ற கேரக்டருக்கும் அதுதான் முடிவு என்பதே மோசமான பிற்போக்குத்தனம் . அவநம்பிக்கை விதைக்கும் விஷயம் .
கல்விக் காலத்தில் புத்திசாலியாக முதல் பெஞ்ச் மாணவனாக இருந்த ஒருவன் ஒரு நிலையில் அலட்சியம் அல்லது ஆணவம் காரணமாக சறுக்கினான் .
அதனால் மீள முடியாத தோல்விக்கு ஆளானான் . கடைசியில் இப்படி ஒரு பணிக்கு போனான் என்றால் அது பொருத்தமான கிளைமாக்ஸ் .
ஆனால் வீட்டிலும் கூட மிடில் பெஞ்ச் மாணவனாக இருந்த ஒருவன் போராடினான் . வாழ்வின் விளிம்புக்கு போனான் . பின்னர் மீண்டான் என்பதற்கு,
வேறு மாதிரி அதிரடி விசயமாக கிளைமாக்ஸ் இருப்பதுதானே , உண்மையில் தன்னம்பிக்கையூட்டுகிற விசயமாக இருக்க முடியும் ?
‘நீ மிடில் பெஞ்ச் மாணவன் என்றால் என்னதான் நீ போராடினாலும் கூட நீ சாதிக்கும் விசயத்தில் கூட ஒரு மிடில் பெஞ்ச் தனமே இருக்கும் . மற்றபடி ஒன்னும் கிழிக்க முடியாது ‘.
– என்கிற மாதிரியாக இந்தப் படத்தில் சொல்லப்படும் செய்தி மிடில் பெஞ்ச் மாணவர்களை மேலும் கேவலப்படுத்தும் செயல்தானே தவிர வேறு என்ன?
பத்திரிக்கைச் செய்திகளை கோர்ப்பதால் ஒரு நல்ல திரைக்கதை உருவாகி விடாது .
இப்படி கிளைமாக்சில் மட்டுமல்ல …
படம் முழுக்கவே ஒரு இணைப்பு இல்லாமல் பகுதி பகுதியாக படம் திரிந்து இருப்பதும் ஒரு பலவீனமே !
படத்தின் இறுதியில் காட்டப்படும் பசிப்பிணி தீர்க்கும் பண்பாளர்களின் பெயர்கள் திரு . சிநேகா மோகன்தாஸ், திரு. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் என்று வருகிறது .
‘புரூஃப்’ பார்க்கலையோ ?
கூட்டத்தில் ஒருத்தன் … எண்ணிக்கையில் ஒண்ணு !