கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்க, விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்ஜெயா, ஆனந்த், வேல.ராமமூர்த்தி , விவேக் பிரசன்னா நடிப்பில் வந்திருக்கும் படம்.
சிறுவயதில் கார் விபத்துக்கும் மின்னல் தாக்குதலுக்கும் , ஒரே நேரத்தில் ஆளாகி அதனால் கண் பாவையின் சுருங்கி விரியும் தன்மை போய், சுருங்கிய நிலையிலேயே கண்பாவை நிலைத்து விட்ட நிலையில், ‘அதிக ஒளி இருந்தால் மட்டுமே கண்ணனுக்கு காட்சிகள் தெரியும் ; குறைவான ஒளியில் கண் தெரியாது’ என்ற நிலைக்கு ஆளாகி விட்ட இளைஞன் ஒருவன் (விக்ரம் பிரபு). அவனது அப்பா அம்மா இறந்த நிலையில் பாசமாக வளர்க்கும் சித்தப்பா ( ஆனந்த் ) சித்தி மற்றும் ஒரு தங்கை தான் அவனது உறவு.

ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் ஒரு பெண்ணுக்கும் (வாணி போஜன்) அவனுக்கும் காதல் . நண்பனோடு ( விவேக் பிரசன்னா) அவன் பயணிக்கும் ஓர் இரவில் ஒரு பெண்ணை சிலர் கற்பழிக்க முயல , அவர்களை அடித்து அனுப்புகிறான்.
அடி வாங்கிய அவர்கள் ஒரு மிகப் பெரிய அரசியல் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவனுக்கு ( தனஞ்செயா) வேண்டிய ஆட்கள் . அந்த இரண்டாம் நிலைத் தலைவன் , முதன்மைத் தலைவரை ( வேல ராம மூர்த்தி) வீழ்த்தி விட்டு அந்த இடத்துக்கு வர நினைப்பவன் . ஒரு மிருகம் போன்றவன்.
இந்த நிலையில் நாயகனால் அடித்து அனுப்பப்பட்டவர்கள் நாயகனின் தந்தையை கடத்துகின்றனர். அப்பாவைக் காப்பற்றப் போக , அவர்கள் அப்பாவை இவன் முன்பே கொல்கின்றனர் . தன்னோடு பகை கொண்டவர்கள் தான் வந்த பின்பும் அப்பாவை ஏன் கொல்ல வேண்டும்? இருட்டில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும் தன்னை ஏன் விட்டு விட்டுப் போக வேண்டும் என்று யோசிக்க, அப்பாவுக்கு அவர்களோடு என்ன பகை என்ற தேடலில் அவன் கண்டு பிடித்தது என்ன ? அதன் பின் நடந்தது என்ன என்பதே படம்.

கதாநாயகனின் கண் பிரச்னையை மையமாக வைத்து அதற்குப் பொருத்தமாக பாயும் ஒளி நீ எனக்கு என்று நல்ல தமிழில் பெயர் வைத்ததற்குப் பாராட்டுகள். அந்த வார்த்தைகள் இடம் பெரும் பாரதியார் பாடலை நாயகனின் காதல் உணர்வோடு பொருத்திய விதமும் அழகு.
நல்ல படமாக்கலைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத். அதற்கு ஏற்ப ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் சாகரின் இசையும் பிரேம்குமாரின் படத்தொகுப்பும் துணை நிற்கிறது . இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நாயகனின் பிரச்னைக்கு பொருத்தமான அந்த வெளிச்சமான அதிக பெரிய ஜன்னல் வைத்த வீடு கலை இயக்கத்துக்குப் பாராட்டு வாங்கித் தருகிறது . தினேஷ் காசியின் சண்டைக்காட்சிகளும் பட்டையைக் கிளப்புகிறது .

கதாநாயகனின் பிரச்னை கூட வித்தியாசமான சுவாரஸ்யமான ஒன்றுதான் . ஆனால் அதற்கு ஏற்ப காட்சிகளை இருட்டு மற்றும் குறைவான ஒளியில் காட்டினால் மட்டும் போதும் என்று முடிவு செய்து விட்டதுதான் அநியாயம் .
பொதுவாக இது போன்ற நபர்கள் இருட்டில் போகையில் கையில் ஒரு சக்தி வாய்ந்த டார்ச் வைத்துக் கொள்வார்கள் . அல்லது நெற்றியில் இருந்து முன்புறம் வெளிச்சம் பீச்சுகிற போகஸ் லைட் போன்ற அமைப்பை தலையில் பொருத்திக் கொண்டுதான் இருட்டில் போவார்கள். .
கலை இயக்கத்தில் அதை இன்னும் சிறப்பாக காதின் இரண்டு பக்கங்களில் இருந்து முன் பக்கம் வெளிச்சம் அடிக்கிற இரண்டு டார்ச் லைட்டுகள் அதை தேவையான போது உடனடியாக இயக்க, ஒரு ரிமோட் இப்படிப்பட்ட வசதியோடுதானே ஒரு கமர்ஷியல் பட ஹீரோ இரவில் வெளியே வரவேண்டும்?

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் இரவில் கண்ட மேனிக்கு நடக்கிறார் ஹீரோ. நமக்கு இரக்கமோ பயமோ வருவதற்குப் பதில் எரிச்சல்தான் வருது. நாயகனின் பிரச்னைக்கு ஏற்ற எந்த தயாரிப்பும் சுவையும் திரைக்கதையில் கதையில் இல்லாதது கொடுமை.
இரண்டாம் பகுதியும் வழக்கமான மசாலா.
அதனால் பாயத் துவங்கும் ஒளி.. இலக்கை அடையாமல் இருட்டுக்கு இடம் கொடுத்து விடுகிறது