ரெஜினா @ விமர்சனம்

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரித்து இசை அமைக்க, சுனைனா,  நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல்  நடிப்பில்  டொமின் டி’சில்வா  இயக்கி இருக்கும் படம். 

மக்களுக்கு நன்மை செய்யும் கம்யூனிஸ்டு ஒருவருக்கு மகளாகப் பிறந்து, அந்த கம்யூனிஸ்ட் நபரின் நண்பரைக் கொல்வதற்குப் பதில் சிலர் அப்பாவைக் கொன்றுவிட, தப்பித்த கம்யூனிஸ்டு போராளியின் (பவா செல்லத்துரை) ஆதரவில் வளர்ந்து, வங்கியில் பணியாற்றும் நபரை (அனந்த் நாக்) மணந்து, 
 
மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண்ணின் ( சுனைனா ) வாழ்வில் , வங்கியில் முக மூடிக் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும்போது கணவனைக் கொடூரமாகக் கொன்று விடுவது பேரிடியாக விழுகிறது . 
 
கணவன் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டு பிடிக்க, அவள் முயல, போலீஸ் அவமதிக்க, வக்கீல் படுக்கைக்கு அழைக்க, ஒரு நிலையில் அவளே முயன்று கொள்ளைக்குக் கார் ஓட்டிய டிரைவரை (நிவாஸ் ஆதித்தன்)  பிடித்து அவனை ஒரு விதமான பிளாக் மெயில் செய்து , கொள்ளையர்களை நான் பழிவாங்க உதவாவிட்டால் உன் மகளும் மனைவியும் (ரித்து மந்த்ரா) உனக்கு இல்லை என்கிறாள் . 
 
அவனும் வேண்டா வெறுப்பாக அவள்  சொல்படி ஆட, நடந்தது என்ன என்பதே படம். 
 
சுனைனாவுக்கு இதில் ரன்னிங் ரோல் . ஃபிளையிங் ரோல், வாக்கிங் ரோல், சிட்டிங் ரோல் , என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அப்படி காட்சிக்குக் காட்சி நீக்கமற நிறைந்து இருக்கிறார் . சற்றே லெஸ்பியன் சமாச்சாரம் எல்லாம் படத்தில் வருது . 
 
டொமின் டி சில்வாவின் படமாக்கல் தரம்,. 
 
தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் பாடல் இசையும் அதை விட பின்னணி இசையும் வெகு சிறப்பு. 
 
பவி K.பவனின் ஒளிப்பதிவு,   டோபி ஜான் படத்தொகுப்பு இவையும் சிறப்பு 
 
வர்கலா கடலும்  வண்டிப்பெரியாறு மூணாறு மலை லோக்கேஷனும் ரம்மியம் 
 
நல்ல கதை . கொலைக்கான காரணம் என்று கடையில் சொல்வது கூட சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத விஷயம்தான். ஆனால் நம்பகத்தன்மையும் யதார்த்தமும் லாஜிக்கும் இல்லாத காட்சிகள், சினிமாத்தனமான ஆக்ஷன்  காட்சிகள், வித்தியாசம் என்ற பெயரில்  அரைகுறைக்காட்சிகள் எல்லாம் படத்துக்குப் பெரிய மைனஸ் .  
 
தீனாவை சுட்டு விட்டு தப்பிப்பது எல்லாம் சினிமாத்தனம் என்றால் அதை சினிமாத்தனமே அவமானமாகக் கருதும் 
 
ஒருவேளை சுனைனா பல விசயங்களை வெத்தலையில் மை போட்டுப் பார்த்துக் கண்டு பிடிக்கிறார் என்றால் அதையாவது சொல்லணும் இல்லியா? 
 
அப்படி ஒரு அராஜகமான திரைக்கதை. 
 
திருநெல்வேலியில் பிறந்த ஒரு கிராமத்துப் பெண் .. சென்னையே அவளுக்கு புதுசு  என்ற நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கணவனை மீட்கப் போராடியதையே நம்பும்படி நெகிழ்வாக சொன்ன சினிமா,  தமிழ் சினிமா. 
 
அப்படி இருக்க , கம்யூனிஸ்டுகளால் வளர்க்கப்படும் ஒரு நவநாகரீகப் பெண் கணவனைக் கொன்றவர்களை கண்டு பிடிக்கப் போராடுவதை எப்படி எல்லாம் வித விதமான  ஜானர்களில் அசத்தலாக சொல்ல முடியும் ? காமெடியாகக் கூட  முயலலாம் . 
 
ஆனால் எந்த வகையிலும் மனதுக்கு நெருக்கமாகாத வகையில் திரையில் மிதக்கிறாள் ரெஜினா 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *