டிஜி திங் மீடியா ஓர்க்ஸ் சார்பில் டாக்டர் மணிமேகலை தயாரிக்க, டாக்டர் மாறன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்க , தீஷா , ஸ்ரீ மகேஷ், தாரா , மனோபாலா , இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வந்திருக்கும் படம் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், நாகேஷ் , எம் ஆர் ராதா , விஜயகுமாரி ஆகிய கலை மேதைகளின் நடிப்பில் காவிய இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில் விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில் காலத்தால் அழியாத பாடல்களோடு 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெளிவந்த மாபெரும் காவியப் படத்தின் பெயர் பச்சை விளக்கு
ஆக இது பச்சை விளக்கு 2019
வாகன ஓட்டிகளை சாலை விதிகளை கடைபிடிக்கச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் டிராபிக் வார்டன் ஒருவரை ( மாறன்) விதி மீறி வாகனம் ஓட்டிய நிலையில் போலீஸ் என நம்பி ஏமாறும் ஒரு பெண் (தீஷா ) இருவருக்கும் காதல் வருகிறது .
பெண்களை நட்பு என்ற பெயரில் நம்பவைத்து அவர்களது அந்தரங்கங்களை படம் பிடித்து ஏமாற்றும் ஒரு கும்பலிடம் சிக்கி விடுகிறாள் நாயகியின் தங்கை (தாரா ).
சாலை விதிகளை பராமரிப்பதில் தீவிரமாக இருக்கும் நாயகன் அந்த பெண்ணை தவறான கூட்டத்திடம் இருந்து மீட்க முடிந்ததா இல்லையா என்பதே படம் .
சாலைப் பயணத்திலும் சரி , வாழ்க்கைப் பயணத்திலும் சரி … பாதுகாப்பு விதிகளை ஒழுங்கையும் மீறினால் சிக்கல் என்பதை சொல்ல வந்திருக்கும் படம்.
மாறனின் தமிழ் உணர்வுக்குப் பாராட்டுகள் .
இமான ஆண்ணாச்சி மூலம் அவ்வப்போது முக்கிய சாலை விதிகளை சொல்ல வைப்பது அருமை . குறிப்பாக போக்குவரத்து மிக்க சாலையில் காரில் இருந்து எப்படி இறங்க வேண்டுமென்று சொல்வது அதி முக்கியம்.
இன்னொரு பக்கம் நண்பன் என்று சொல்லும் நபரிடம் கூட ஒரு பெண் ஒரு நிமிடம் கூட தனது ஸ்மார்ட் போனை கொடுக்கக் கூடாது . அதற்குள் ஹேக் செய்து உங்களிடம் இருக்கும் உங்கள் போனின் கேமராவை எந்த நொடி வேண்டுமானாலும் இயக்கி எப்போதும் உங்களை படம் பிடிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொல்வது அருமை
வேதம் புதிது தேவேந்திரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு
நாடகத்தனமான காட்சிகள், போதாத , செயற்கையான நடிப்பு ஆகியவை குறைகள் .
எனினும் சொல்ல வரும் விசயத்துக்காக பாராட்டலாம்.
மொத்தத்தில் பச்சை விளக்கு …. போகலாம் !
