ஸ்ரீதேவி என்டர்டைனர்ஸ் , புஷ்கர் பிலிம்ஸ் , பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் பிரகாஷ் , புஷ்கர் மல்லிகார்ஜுனையா ஆகியோர் தயாரிக்க , ரக்ஷித் ஷெட்டி எழுதி கதாநாயகனாக நடிக்க, ஷன்வி ஸ்ரீ வத்சவா கதாநாயகியாக நடிக்க , சச்சின் ரவி தொகுத்து இயக்கி இருக்கும் கன்னட படத்தின் தமிழ் வடிவமே ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.
அமராவதி பகுதியில் கோட்டை கட்டி ஆண்ட ராமராம என்ற குறுநில அரசனுக்கு சொந்தமான பெரிய பொக்கிஷத்தை எதிர் இனத்தை சேர்ந்த கூத்தாடி வம்சம் ஒன்று கொள்ளை அடித்து விடுகிறது .
அந்த வருத்தத்தில் ஒடுங்கிப் போகும் அரசனின் வாரிசுகளில் முதல் மகனுக்கும் இரண்டாம் மகனுக்கும் சண்டை . கொலை வெறியோடு பிரிகிறார்கள்.
முதல் மகன் இன்னும் அந்த பழைய ராஜ குடும்ப பாணியிலேயே வாழ , இரண்டாம் மகன் அரசியலில் சேர்ந்து வென்று அதன் மூலம் கோட்டையை பிடிக்க நினைக்கிறார் .
இருவருக்கும் புதையலை அடையும் வெறியும் இருக்கிறது .
இந்த விவகாரங்களுக்குள் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்( ரக்ஷித் ஷெட்டி ) நுழைய , ராஜ வம்சத்துக்கு எதிரான ஒரு இனத்தின் பெண்ணான லக்ஷ்மி (ஷன்வி ஸ்ரீ வத்சவா) தானும் களம் இறங்க , என்ன நடக்கிறது என்பதே படம் .
மற்றபடி இது எம் பெருமான் நம் பெருமாளின் பக்திப் படம் அல்ல .
கன்னட சினிமா உலகுக்கு இன்னொரு பிரம்மாணடமான மேக்கிங் படம் .
ராஜாக்கள் காலம் , நவீன காலம் இரண்டுக்கும் கலவையான ஒரு நுண்மையான கதை திரைக்கதை என்பது சுவாரஸ்யம் .
கலை இயக்கம், உடைகள், ஒளிப்பதிவு , இயக்கம் எல்லாம் சிறப்பு .
நாயகன் ரக்ஷித் ஷெட்டி நிலையாக நிற்காமல் ஆடிக் கொண்டு தொண்டையில் சிக்க சிக்க பேசிக் கொண்டு வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார் . அது சில இடங்களில் ரசிக்கவும் சில இடங்களில் முகம் சுளிக்கவும் வைக்கிறது .
நாயகியை லக்ஷ்மி அவர்களே லக்ஷ்மி அவர்களே என்று அழைப்பது ரகளை .
நாயகி ஷன்வி கொயந்த புள்ளை . வில்லத்தனம் காட்டும் இடத்தில் சிரிப்பு வருகிறது .
வில்லன்கள் மிரட்டுகிறார்கள் . நாடகத்தனமான காமெடியன்கள் கூட ஒகே .
ராமனை வில்லனாகவும் நாராயணனை ஹீரோவாகவும் காட்டும் குறும்பு ரசிக்க வைக்கிறது .
ராவணனை சுடுவது போல ஒரு காட்சி இருந்தாலும் ராவணனை தமிழ் மொழி மாற்றில் பாராட்டி இருக்கிறார்கள் . சூப்பர்
முதல் பாதியில் பேசிப் பேசியே நோயாளியாக்கி விட்டு இரண்டாம் பாதியில் குளுக்கோஸ் ஏத்தி அனுப்பி வைக்கிறார்கள் .
வித்தியாசமான முயற்சி ! ரசிக்கலாம்
