விஜயலட்சுமி ஃபெரோஸ் தயாரிப்பில், கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் , நிதின் சத்யா, அருள்தாஸ் ஆகியோர் நடிக்க,
ஃபெரோஸ் கான் எழுதி இயக்கி இருக்கும் படம் பண்டிகை . இந்த பண்டிகை கொண்டாட்டமா ? திண்டாட்டமா ? பார்க்கலாம் .
சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்து , சித்தப்பா சித்தியால் புறக்கணிக்கப்பட்டு , இலவச விடுதியில் சேர்ந்து , அங்குள்ள சண்டைக்கார மாணவர்களோடு புழங்கி , பெரும் கோபக்காரனாக வளர்ந்து ,
நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் சிப்பந்தியாக பணியாற்றும் வேலுவுக்கு (கிருஷ்ணா ) , வெளிநாடு பொய் சம்பாதிக்க வேண்டும் என்பது லட்சியம் .
பாஸ் போர்ட் எடுக்க எட்டாயிரம் பணம் அவனது உடனடி பணத் தேவை
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்க்கும் காவ்யா என்ற பெண்ணை (ஆனந்தி) கண்டதும் அவனுக்கு காதல்.
அவளது போன் நம்பர் வாங்கிப் பேசி, காதலை வளர்க்க முயலும் நிலையில் அவனது போன் தவறி விழுந்து உடைகிறது . எனவே இப்போது ஒரு போன் வாங்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது .
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் வெற்றி பெற , தனது வீட்டை சுரேஷ் என்ற கந்து வட்டிக்காரனிடம் (அருள்தாஸ்) அடகு வைத்து பணம் பெற்று கட்டி வீட்டை இழந்து,
கர்ப்பிணி மனைவியையும் பிரிந்து வாழும் வீடியோ கேம்ஸ் கடை ஓனரான முனி சேகர் (சரவணன் ) என்பவனின் நட்பு வேலுவுக்கு கிடைக்கிறது .
இதற்கிடையில் சில இடங்களில் தன் கோப குணம் காரணமாக அடியும் வாங்குகிறான் வேலு .
வேலுவை அவதானிக்கும் சேகர், வெறித்தனமாக அடித்துக் கொள்ளும் போட்டி நடத்தி அதில் பணம் கட்டி விளையாடும் இடத்துக்கு வேலுவை அழைத்துப் போகிறான் .
“நீ அடியாளாகக் களம் இறங்கு . உன் கோபத்தை இங்கு காட்டினால் நிறைய சம்பாதிக்கலாம் . ” என்கிறான் . ஆரம்பத்தில் அதற்கு வேலு ஒத்துக் கொள்ளாத நிலையில்,
வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் வேலுவிடம் மூணு லட்ச ரூபாய் பணம் கேட்க , அதற்காக அடியாளாகக் களம் இறங்குகிறான் வேலு .
வெற்றி வருகிறது . பணம் வருகிறது . செல்போன் வருகிறது . காதல் கிடைக்கிறது .
அப்போதுதான் அங்கும் மேட்ச் பிக்சிங் இருப்பது தெரிய வருகிறது .
அப்படி ஒரு போட்டியில் , சேகர் தன் கடையையும் சுரேஷிடம் அடகு வைத்து ஆட, வேலுவின் கோப குணத்தால் வேலு – சேகர் அணிக்கு தோல்வி கிடைக்கிறது. கடையும் போகிறது .
அந்த அடி சண்டை நடத்தும் தாதா(மது சூதன் )தான் , தன் இழப்புக்கு எல்லாம் காரணம் என்பது , தாதாவின் ஆளான முந்திரி சேட்டு (நிதின் சத்யா) மூலம் சேகருக்கு தெரிய வருகிறது .
எனவே தாதாவிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க சேகரும் வேலுவும் திட்ட மிட, அது தாதாவுக்கு தெரிய வர, தாதாவையும் கந்து வட்டிக்க்காரனையும் இவர்கள் பகைத்துக் கொள்ள,
தாதாவின் இன்னொரு முக்கிய ஆள் அனுப்பிய டுவின்ஸ் வில்லன்கள் வேறு , பணத்தைக் கொள்ளையடிக்க களம் இறங்க …
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா … முடியல .
கிருஷ்ணாவின் நடை உடை பாவனை மற்றும் நடிப்பு பாணியை மாற்றி முற்றிலும் புதிய கிருஷ்ணாவை காட்டி இருக்கிறார் இயக்குனர் ஃபெரோஸ்.
கிருஷ்ணாவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் . அந்த வகையில் இருவருக்கும் பாராட்டுகள்
ஆரம்பத்தில் என்னவோ பெருசா பண்ணப் போகிறார்கள் என்று நம்ப வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் மிரட்டும் இயக்குனர் ஃபெரோஸ் அரை மணி நேரத்துக்குள் கையை விரித்து விடுகிறார் .
அதுவும் இரண்டாம் பகுதியில் நம்மைக் கதறக் கதற அடிக்கிறார்கள் .
அடுத்ததடுத்து வரும் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் திகட்டுகின்றன .
25 வருடத்துக்கு முன்பு விக்னேஷ்வர் என்ற படத்தில் குஷ்பூ நடித்த பீர் குடிக்கும் காட்சியை இப்போது ஆனந்தியை வைத்து எடுத்து இருப்பது கொடுமை .
எடுத்த வகையிலாவது அசத்த வேண்டாமா ? இப்படியா பச்சைத் தண்ணி மாதிரி எடுத்து இருப்பது ? போங்க பாஸ் .
தவிர அந்த காட்சிகளால் படத்துக்கு திரைக்கதைக்கு தம்பிடி பிரயோஜனம் உண்டா ?
அது என்னமோ தெரியல . அடுத்து வரும் காட்சி என்ன என்பது எல்லா ரசிகனுக்கும் முன் கூட்டியே முழுக்க முழுக்க புரிந்து விட வேண்டும் என்று,
சத்தியம் செய்து விட்டு சீன் எழுதிய மாதிரியே காட்சிகள் அமைத்து இருப்பதால், திரைக்கதை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறது .
அருள்தாஸ் ராசியான ரூபாய் நோட்டை பயன்படுத்தும் காட்சி அந்த கோமாளித்தனத்தின் உச்சம் . அட்லீஸ்ட் சேகர் சிக்கிய பிறகாவது அந்த காட்சியை இன்செர்ட் ஆக போட்டு இருக்கலாமே . எதுக்கு இந்த பப்பரப்பாத்தனம் ?
தாதா வீட்டில் இருந்து வேலு பணத்தை அடித்த அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குப் பிறகு இந்த படம் ஓடக் கூடாது . ஆனா அதுக்கு அப்புறம் தேவை இல்லாமல் புதுப் புது கதாபாத்திரங்கள் , புதுப் புது டிராக்குகள் என்று,
தண்ணி தெளிச்சு தெளிச்சு அடிக்கிறார்கள் .
படத்துல எல்லாமே புறம்போக்கு கேப்மாரி கதாபாத்திரங்கள் . இவனுங்க செண்டிமெண்ட் யாருக்கும் தேவை இல்லை .
சரி.. ஆரம்பத்தில் இருந்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் வேலு, சேகர் இவர்களின் செண்டிமெண்டை சகித்துக் கொள்ளலாம் .
ஆனால் கடைசியில் வரும் டுவின்ஸ் வில்லன்களில்ஒ ருவன் செத்த உடன் , இன்னொருவன் பின்னணியில் செனாய் வாசிக்க ஃபீல் பண்ணுவது எல்லாம் அராஜகம் பாஸ்
கருணாஸின் திக்குவாய் டுவிஸ்ட் மட்டும் பாலை வனத்தில் ஒரு வாய் தண்ணி கொடுக்கிறது .
படம் இப்போ முடியும் இப்போ முடியும் என்று பார்த்தால் தேவை இல்லாமல் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகிறார்கள் . எல்லாம் பிலிம் செலவு இல்லாமல் டிஜிட்டல் வந்து விட்ட தைரியம் .
இந்த மாதிரி கொடுமைகளில் இருந்து தப்பிக்கவாவது மறுபடியும் பிலிம் கொண்டு வாங்க சாமிகளா !
பணத்துக்காக அடித்துக் கொள்வது என்பது ஒரு புது விஷயம் . ஆனால் அது மட்டுமே படத்துக்கு போதும் என்ற நினைத்த இடத்தில்தான் சறுக்கி இருக்கிறார்கள் .
இந்த ஹீரோ கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு இதே சண்டை போடும் போட்டியை வைத்து இந்தப் படத்தை எப்படி கொண்டு போய் இருக்கலாம் என்று பார்ப்போமா ?
இன்று ஒரு மனிதன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினாலே ஒரு பொது நல விசயத்துக்காகவோ அல்லது நியாயமான சுயநலத்துக்காகவோ முன் பின் தெரியாத ஒரு நபர் மீது கோபப்படும் வாய்ப்பு அதிகம் .
இந்த நிலையில் கோபக்காரனாக வளர்ந்த வேலுவுக்கு ?
அப்படி ஒரு சின்ன விசயத்தில் சுய நலம் இல்லாமல் பொது நலத்துக்காக யார் என்றே தெரியாத ஒருவனிடம் மோத, அப்புறம்தான் அந்த நபரின் பலம் தெரிகிறது .
அந்த பலமான கொடூரமான சேடிஸ்ட் எல்லா வகையிலும் வேலுவை நெருக்குகிறான் .
அவனை விட்டு வேலு விலக முடியாத நிலையை அந்த நபர் ஏற்படுத்த தினமும் அவனால் வேலுவுக்கு அவமானம் அசிங்கம். ஒரு வேளை பதிலுக்கு வேலு கோபப்பட்டால் பாதிப்பு பயங்கரமாக இருக்கிறது .
கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் வேலுவுக்கு மன நலம் உடல் நலம் பாதிக்கப்படுமோ என்ற நிலையில்,
சேகர் போன்ற ஒருவன் அவனை இப்படி, வெறித்தனமாக சண்டை போட்டு காசு சம்பாதிக்கும் நள்ளிரவுப் போட்டிகளில் இறக்க வேண்டும் .
தன் எதிரியை மனதில் கொண்டு எல்லோரையும் அடிக்கும் வேலு எல்லாப்போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டும் .
அந்த போட்டிகள் மேலும் அவன் உடல் பலத்தை , மனோ பலத்தை அதிகரிக்க வேண்டும் . அங்கு கிடைக்கும் அனுபவங்கள் வேலுவை புடம் போட,
ஒரு நிலையில் வேலு வெளியே வந்து தனது எதிரியிடம் நேரடியாக மோதி துவம்சம் செய்ய வேண்டும் .
அதன் முடிவு ஆரம்பத்தில் வேலு கோபப்படக் காரணமாக இருந்த அந்த பொதுநல விசயத்துக்கு ஒரு தீர்வாக இருக்க வேண்டும் .
இப்படி ஒரு திரைக்கதை அமைத்து இருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு .
அதை விட்டு விட்டு போட்டியில் ஜெயித்தான். அங்கு மேட்ச் பிக்சிங். எனவே பணத்தை திருடினான் என்று பழைய குருடி கதவைத் திறடி கதை எதுக்கு ?
அதுவும் பல படங்களில் பார்த்து சலித்து விட்ட நிலையில் , எதாவது படத்தில் பெரிய லெதர் பேக் முழுக்க (டம்மி) பணத்தை வைத்தக் கொண்டு யாராவது அலைவதாக காட்சி வந்தாலே எரிச்சல் மண்டுகிறது .
அதுவும் மோடி பழைய ரூபாய் நோட்டுகளை எல்லாம் மாற்றி விட்ட நிலையில் பழைய நோட்டுக்காக அடித்துக் கொள்வதாக காட்டும்போது மோடி மீது வர வேண்டிய கோபமும் இங்கேதான் வருகிறது
மேலே சொன்னபடி ஒரு நல்ல கதைக்கு முயலாமல் காமா சோமா என்று திரைக்கதை அமைத்து இருப்பதால் ..
பண்டிகை … . அமைதி !