ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி, தயாரிப்பாளர் என்ற பெயரோடும், கலா அல்லூரி என்பவர் இயக்க, ஜான்விகா, ஆடுகளம் நரேன் , சின்னப் பொண்ணு, சென்றாயன், சச்சு, ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
ஒரு போலீஸ் அதிகாரி தன் நண்பன் இறந்து விட்ட நிலையில் அவனது தங்கையைக் காப்பாற்றி நல்லபடியாக வாழ வைக்கும் பொறுப்பை ஏற்கிறார் . ஒரு நிலையில் அந்தப் பெண் மீது காதல் கொள்கிறார். ஆனால் வேறு ஒருவரைக் காதலிக்கும் அவள், காதலனையே திருமணம் செய்து கொள்ள விரும்ப , அப்புறம் என்ன என்பதே படத்தின் கதை.
படத்தில் போலீஸ் அதிகாரியாக எம் ஜி ஆர் அருமையாக நடித்துள்ளார். காதலியாக நடிகையர் திலகம் சாவித்திரி. நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
கே வி மகாதேவன் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதி இருக்கும்,’ பட்டு வண்ணச் சிட்டு’, ‘எண்ண எண்ண இனிக்குது’, ‘ காலமென்னும் நதியினிலே’, ‘ கூந்தல் கறுப்பு’ போன்ற பாடல்கள் அருமை.
அடடே..! சாரி சாரி.. நான் இப்போது வந்திருக்கும் படத்தின் விமர்சனத்தை எழுதுவதற்குப் பதில் 1963 இல் வந்த பரிசு படத்தின் விமர்சனத்தை எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன்.
சரி, இப்போ புதிதாக வந்திருக்கும் பரிசு படம் பற்றிப் பார்க்கலாம்.
ராணுவத்தில் இருந்து ஓய்வே பெற்ற ஒருவர் (ஆடுகளம் நரேன்) தனது மகளை (ஜான்விகா) தன்னைப் போலவே மிலிட்டரியில் சேர்த்து உயர் பதவிக்குக் கொண்டு போக ஆசைப்படுகிறார். மகளும் துப்பாக்கி சுடக் கற்றுக் கொண்டு இன்டர்நேஷனல் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் வாங்குகிறாள்
கல்லூரியில் அவளை இரண்டு பேர் காதலிக்கிறார்கள் . இருவரின் காதலையும் ஏற்கவில்லை . கிராமத்தில் இருந்து வந்த போட்டோகிராபர் ஒருவர் அவளைக் காதலிக்கிறான். அந்தக் காதலையும் மறுத்து நாட்டுக்காக சேவை செய்வதுதான் என் லட்சியம் என்கிறாள். அவனை நண்பனாக மட்டும் ஏற்கிறாள்.
அவளுக்கான பாராட்டு விழா ஒன்றில் போலீஸ் அதிகாரியின் நட்பு கிடைக்கிறது .
மருத்துவமனை ஒன்றில் அநியாயமான ஆபரேஷன் (பெருசா ஒன்னும் இல்ல. பல தடவை பார்த்த விஷயம்தான்.) நடப்பதை பார்த்து விட்ட நேர்மையான டாக்டரை, அந்த மருத்துவமனையின் உரிமையாளரான வில்லன் கொன்று விட, அந்த நல்ல டாக்டர் வைத்திருந்த ஆதாரம் ஒன்று, ராணுவ வீரரின் மகள் கையில் கிடைக்க,
அவளைக் கொல்ல வில்லன் ஆட்கள் வர, (முடியுமா? நடக்குமா?) அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
பெண்ணின் சக்தியை, வலிமையை, முன்னிறுத்தும் வகையில் சொல்லப்பட்ட படம். அதில் ஒன்றும் தப்பில்லை .
பிரதமர் மோடியை பாராட்டி வசனங்கள் வருகின்றன . அதிலும் ஒன்றும் தப்பில்லை. அவர்கள் உரிமை. ஆனால் சொல்ல வந்த கதையை சிறப்பாக பொருத்தமான நடிகர் நடிகைகளோடு யதார்த்தமான அல்லது சிறப்பான மேக்கிங்கில் உணர்வுப் பூர்வமாகச் சொல்ல வேண்டாமா? அதற்கு சரியான திரைக்கதை வசனம் வேண்டாமா? .
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பேரிளம்பெண் கொடைக்கானலில் தன்னந்தனியாக வண்ண வண்ண உடைகளில் ஆடிப்பாட,’ என்னடா இது/’ அம்மா கேரக்டருக்கு எல்லாம் சோலோ பாட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். ஏதோ வித்தியாசமான கதை சொல்லப் போகிறார்கள் என்று நினைத்தால். படத்தோட குழந்தைத்தனமான ஹீரோயினே அவங்கதான் சார் …..!
அடுத்து அவர் ஒரு கல்லூரியில் நுழைகிறார் . கல்லூரியில் ஹெச் ஓ டி யாக, புரபசர் ஆக, லெக்சரர் ஆக, அல்லது பிரின்சிபலாக அவர் இருப்பார் என்று பார்த்தால்….. அந்த டீன் ஏஜ் ஸ்டூடன்ட்டே அவங்கதான் சார்.
விதம் விதமான உடைகளில் அவர் வர, அவரை தேசிய, மாநில, மாவட்ட, கல்லூரி அளவில், எல்லோரும் எப்படியாவது விதம் விதமாகப் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பார்க்கிற ஆட்களுக்கு எல்லாம் பாடம் எடுக்கிறார். ரோட்டில் பசியில் ஏங்கும் சிறுவனுக்கு இலவசமாக உணவு தர மறுத்த கடைக்காரர் மேல் அறச் சீற்றம் கொண்டு கோபப்பட்டு விட்டு , சிறுவனுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுக்கிறார்.(மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் ; அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் என்று பாடாதது ஒன்றுதான் பாக்கி)
காதல் வாகனம் என்ற படத்தில் எம் ஜி ஆர் பெண் வேடத்தில் நடித்துப் பார்த்திருக்கிறோம் . ஆனால் முதல்வர் ஆகும் வரையில் அவர் நடித்த கேரக்டர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெண்ணாகக் காட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு கேரக்டருக்கு ஆசைப்பட்டு படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் பிள்ளையார் பிடிக்க செய்த முயற்சி ……!)
காமெடி என்ற பெயரில் சென்ராயனை வைத்து காமெடி இல்லாத ஒரு காமெடி டிராக் வர, ‘அதுல மட்டும் நான் இல்லாமல் இருந்தால் எப்படி?’ என்று திடீர் என அங்கே வந்து சென்றாயனை மாமா என்கிறார் ஹீரோயின்.
விட்டால் படத்தின் எல்லா கேரக்டரிலும் அவரே நடித்து விடுவார் போலிருக்கிறது
அப்புறம்தான் சொல்றாங்க .. படத்தோட நிஜமான தயாரிப்பாளரே அவங்கதான் சார்…!
நம் நோக்கம் பாடி ஷேமிங் இல்லை.
ஒரு பெண், தானே நடித்து ஒரு படத்தைத் தயாரிப்பது தப்பில்லை. உண்மையில் அது பாராட்டுக்குரிய விஷயம் . ஆனால் தனக்கு ஏற்ற கதை திரைக்கதையோடு படம் எடுக்க வேண்டும். ஒரு படத்தின் கதாநாயகி கேரக்டர் டீன் ஏஜ் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. இனி போகப் போக சின்னப் படங்கள் என்றால், ஹீரோ ஹீரோயின் என்று யாரும் இல்லாத நல்ல கன்டென்ட் உள்ள படங்கள்தான் வெற்றி பெறும். அதை தான் இந்தப் படத்தின் நிஜமான தயாரிப்பாளர் கம் ஹீரோயின் செய்து இருக்க வேண்டும்.
கேரக்டருக்கு ஏற்ற நிஜ வயசு, அல்லது SCREEN AGE இருக்க வேண்டும். எம் ஜி ஆர் கடைசிக் காலத்தில் செய்ததை முதல் படத்திலேயே செய்தால் எப்படி ஜான் ஜான்? (படத்தில் ஹீரோயின் பெயர் இதுதான்)
எனினும் படத்தில் உற்சாகமாக ஆடி ஓடி சண்டை போட்டு நடித்துள்ளார் ஜான்விகா. அடுத்த படத்தில் பொருத்தமான கதையில் நடிக்க வாழ்த்துகள்
இது மட்டுமா? கதாநாயகியைக் காதலிக்கும் கேரக்டர்களில் அந்த போட்டோகிராபர் பையனுக்கு டூயட் வைத்து இருந்தால் நியாயம் . ஆனால் இன்னொரு கேரக்டருக்கு கதாநாயகியோடு இரண்டு டூயட் பாடல்கள்.
காரணம் படத்தோட டைரக்டரே அவர்தான் சார் .
இப்படி எல்லாம் படம் இருந்தால் அப்புறம் பரிசு என்று சொன்னாலே எம் ஜி ஆர் சாவித்திரி நடித்த படம்தானே நினைவுக்கு வரும்?
ஓர் ஊரில் மனைவிமார்களின் தொல்லை தாங்க முடியாமல் இனிமேல் யாரும் பொண்டாட்டி பேச்சைக் கேட்கக் கூடாது என்று தைரியமாக முடிவெடுப்பதற்கு ஆண்களின் பஞ்சாயத்து ஒன்று கூடியதாம் .
அதில் ”நம்ம ஊருல பொண்டாட்டிப் பேச்சுக்குப் பயப்படறவங்க எல்லாம் இந்தப் பக்கம் வாங்க” என்று சொன்னதும் எல்லோரும் அந்தப் பக்கம் போய்விட ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே நின்றிருக்கிறார்.
‘அடடா! நம்ம ஊருல கூட பொண்டாட்டிப் பேச்சுக்கு பயப்படாத ஒருத்தன் இருக்கான்யா’ என்ற பெருமையோடு , ” ஏம்பா நீ உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்காத அளவுக்கு தைரியமான ஆளா?” என்று கேட்க
அதற்கு அந்தத் தனி ஒருவன், ”எங்க போனாலும் கூட்டத்தோடு கூட்டமா நிக்க வேணாம் . தனியாதான் நிக்கணும்’ ன்னு என் பொண்டாட்டி சொன்னா” என்றானாம்.
அப்படி,’காரணம் எதுவானாலும் சரி. நாம நம்ம வேலையை ஒழுங்கா செய்வோம்’ என்று இசையமைப்பாளர் ராஜேஷ் மட்டும் ரசிக்கக்கூடிய பாடல்களைக் கொடுத்துள்ளார்
பரிசு … சோப்பு டப்பா